Sunday, 22 December 2019

நீதி தாமதமாவதைத் தவிர்க்க...

நீதி தாமதமாவதைத் தவிர்க்க...

By நீ.சு. பெருமாள் 

இந்திய தண்டனைச் சட்டத்தையும் இந்தியாவின் கல்வி குறித்த கொள்கையையும் மெக்காலேதான் உருவாக்கினார். அரசின் உ த்தரவுகளை அப்படியே உள்வாங்கிச் செயல்படுத்தும் வகையில் உருவாக்கியதுதான் மெக்காலே கல்வித் திட்டம். அதே போன்று இந்திய தண்டனைச் சட்டங்கள் பெரும்பாலும் அரசுக்கு ஆதரவாக இருக்கும் வகையில் வடிவமைத்தவரும் மெக்காலேதான்.

கல்வித் திட்டத்தை மாற்றுவது குறித்து அவ்வப்போது விவாதங்கள் நடைபெற்று ஓரளவுக்கு மாற்றங்களும் பெற்றுள்ளன. ஆனால், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட பல சட்டங்கள் இன்றைக்கும் நடைமுறையில் உள்ளன.

அண்மையில் ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே கூறிய கருத்துகள் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது.  உடனடியாக வழங்கப்படும் நீதி, அதன் தன்மையை இழந்து விடுகிறது என்று கூறியுள்ளார்.  ஹைதராபாத் பாலியல் வன்கொடுமை தொடர்பாக நடைபெற்ற என்கவுன்ட்டர் துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டது தொடர்பாக நாடு முழுவதும் பலத்த வரவேற்புகள், ஆங்காங்கே எழுகின்ற கண்டனக் குரல் என்று இருக்கிற இந்த நேரத்தில் தலைமை நீதிபதி போப்டேவின் கருத்து என்கவுன்ட்டருக்கு எதிர்வினையாகவே பார்க்கப்படுகிறது.

நீதிமன்றங்களில் குற்றவாளிகளை ஆஜர்படுத்தி அவர்களுக்கு தண்டனையைப் பெற்றுத் தருவது என்பது நீண்ட நெடிய சட்டப் போராட்டத்துக்குப் பிறகுதான் சாத்தியமாகிறது.  இதனால் ஏற்படும் காலதாமதம் என்பது, விசாரிக்காமலேயே தீர்ப்பு வழங்கும் முறைக்கு ஆதரவாக அமைந்து விடுகிறது.  அதனுடைய எதிரொலிதான் என்கவுன்ட்டருக்கு ஆதரவான குரல்கள்.

இதே சமகாலத்தில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற  குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தலைமை நீதிபதி போப்டேவுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசியிருக்கிறார்.  "எப்படி உடனடியாக நீதி வழங்க முடியாதோ, அதுபோல காலதாமதமாகவும் நீதி வழங்கக் கூடாது' என்று குடியரசு துணைத் தலைவர் கூறியுள்ளார். என்கவுன்ட்டருக்கு ஆதரவாக குடியரசு துணைத் தலைவரும் அதற்கு எதிர்ப்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் கருத்துகளைத் தெரிவித்தனர் என்கிற வகையில்தான் மேற்சொன்ன இரண்டு கருத்துகளுமே பார்க்கப்படுகின்றன.

நீதி தாமதமானால் மக்களின் கோபம் அதிகரிப்பதுடன், சட்டத்தைக் கையிலெடுக்கும் நிலையும் உருவாகும் என்பதையும் அதேபோல நீதிமன்ற நடவடிக்கைகள் எளிமையாகவும் உள்ளுர் மொழிகளிலும் இருந்தால்தான் மக்கள் புரிந்து கொள்வார்கள் என்றும் அதே நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நீதி தாமதமாவதற்கு நீதித் துறை மட்டுமே காரணம் என்று சொல்லி விட முடியாது. நீதி பரிபாலன நடைமுறையிலும் காலத்துக்கேற்ற வகையில் மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும்.  அதைவிட வழக்குகள் தேக்கமடைவதற்கு முக்கியக் காரணமே நீதிபதிகளின் காலிப் பணியிடங்கள்தான். 
உயர்நீதிமன்றங்களில் 38 சதவீத நீதிபதிகளின் பணியிடங்கள் நிரப்பப்படாமலேயே காலியாக உள்ளன. அதாவது, இந்திய உயர்நீதிமன்றங்களில் 1,079 நீதிபதி இருக்கைகள் உள்ளன. ஆனால், இதில் தற்போது 682 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். மேலும், சராசரியாக ஒவ்வொரு மாதமும் ஐந்து முதல் ஆறு நீதிபதிகள் பணி நிறைவு பெற்றுச் செல்கின்றனர்.  எதிர்காலங்களில் இதே நிலை நீடித்தால், பணி நிறைவு பெறும் நீதிபதிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்.

அனைத்து மாநிலங்களிலும் உள்ள உயர்நீதிமன்றங்களில் உடனடியாக நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சருக்கு முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கடந்தாண்டு கடிதம் எழுதினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில், நீதிபதிகளின் நியமனத்துக்கு கொலீஜியம் அமைப்பு பரிந்துரைத்துள்ள 43 பேருக்கு மத்திய சட்ட அமைச்சகம் விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இதனால் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உயர்நீதிமன்றங்களில் மட்டும் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் விளக்கமளித்து எழுதியிருந்தார் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய். நீதிபதிகளின் பற்றாக்குறைதான் அனைத்து வழக்குகளின் காலதாமதத்துக்குக் காரணமாக உள்ளது.

உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 31 ஆகும்.  தற்போது 25 நீதிபதிகளே இருந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.  உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் ஒரு நீதிபதி ஓய்வு பெறும் வயதுக்கு முன்னரே, மற்றொரு நீதிபதியை அவரது இடத்தை நிரப்புகிற வகையில் தேர்வு செய்யலாம் என நமது நீதிமன்ற நடைமுறைகள் தெளிவாகக் கூறுகின்றன.  இதனை எந்த அரசும் பின்பற்றுவதில்லை. அதற்கான எடுத்துக்காட்டுதான் நீதிபதிகள் நியமிக்கக் கோரும் முன்னாள் தலைமை நீதிபதியின் கடிதம்.  நீதிபதிகள் உரிய காலத்தில் நியமிக்கப்படாமல் இருப்பதால் அதிகம் பாதிக்கப்படுவது கடைக்கோடியில் உள்ள இந்தியக் குடிமகன்தான்.

ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகனுக்கான கடைசி நம்பிக்கை நீதிமன்றங்கள்தான்;  நீதி பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டால் இயல்பாகவே நீதியின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும். கொடுமையான குற்றத்தைச் செய்து விட்டு,  விசாரணை முடியாமல் சிறையில இருப்பது ஒருவகை என்றால், எதற்காக சிறையில் இருக்கிறோம் என்றுகூடத் தெரியாமல் விசாரணைக் கைதிகளாக ஆயிரக்கணக்கான பேர் சிறையில் வாடுவதும் நீதித் துறையின் ஒருவகையான காலதாமதமான செயல்பாடுதான்.

எனவே, நீதித் துறையின் நம்பிக்கையை மக்கள் பெறுகின்ற வகையில் விரைந்து நீதி அளித்தல் என்னும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துவது அவசியம். நீதிபதிகளின் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புவது, அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வது ஆகியவை மத்திய அரசின் தலையாய பணி.  நீதித் துறையின் மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்வது மத்திய அரசின் கடமை.

No comments:

Popular Posts