Tuesday 24 December 2019

கூகுள் கிளாஸ்ரூம்

மாணவர்களுக்காக கூகுள் தரும் முக்கிய வசதி கிளாஸ்ரூம் அப்ளிகேசன். 2014-ல் இது அறிமுகமானது. இன்று இந்தியாவிலும் ஏராளமான கல்லூரிகளும், பேராசிரியர்களும் தங்கள் மாணவர்களுக்காக இந்த அப்ளிகேசனை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். உலகம் முழுக்க வகுப்பறைகளை டிஜிட்டல் மயமாக்கி வருவதில் கூகுள் கிளாஸ்ரூமிற்கு முக்கிய பங்கு உண்டு.

இந்தியாவில் கல்லூரி மாணவர்கள் இதன் பயனை அதிகமாக அனுபவித்து வருகிறார்கள். விரிவுரையாளர்கள் முதல் பேராசிரியர்கள் வரை, புராஜெக்டுகளையும், பாடக்குறிப்புகளையும் மாணவர்களுக்கு ஒருங்கிணைத்து வழங்க இந்த அப்ளிகேசனை பயன்படுத்துகிறார்கள். இதில் ஆசிரியர் நிர்வாகியாகவும் (அட்மின்), மாணவர்கள் குழு உறுப்பினர்களாகவும் இருந்து அதன் வசதிகளை பயன்படுத்த வேண்டும்.

மாணவர்கள், தங்கள் படைப்பு களையும், தனித்திறன் களையும் இதில் சம்பந்தப்பட்ட துறை ஆசிரியரிடம் நேரடியாக சமர்ப்பிக்கவும், உரையாடவும், சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் முடியும். ஆசிரியர்களுக்கு, மாணவர்களை மதிப்பிட, வருகையை பதிவிட பல்வேறு வசதிகள் இதில் உள்ளன.

முக்கிய அம்சமாக கிளாஸ்ரூம் வசதி, இணையதளம் வழியாக பாடம் நடத்தவும், கவனிக்கவும் வசதி செய்கிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப குறைந்தபட்ச ஆன்லைன் வகுப்புகளை, கல்லூரிகள் தங்கள் நிர்வாக வசதிக்கேற்ப கட்டாயமாக்கிக் கொள்கின்றன. கணினி மூலமாகவும், செல்போன் வழியாகவும், கணினி-செல்போன் இணைப்பிலும் இதை பயன்படுத்த முடியும் என்பது சிறப்பு. அதே நேரத்தில் மாணவர்கள் பயன்படுத்தும் செல்போனோ, கணினியோ பழுதானால்கூட அவர்கள் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள், செய்த பயிற்சித்திட்டங்கள் எல்லாம் கூகுள் கணக்கில் சேமிக்கப்பட்டிருக்கும் என்பது அவர்களின் சேமிப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது.

புராஜெக்ட் நோட்டுகள் மற்றும் காகிதங்களின் பயன்பாட்டை வெகுவாக குறைத்து சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்கிறது கிளாஸ்ரூம் ஆப். தொலைவில் இருந்தும், தொழில்நுட்ப வசதிகளின் வழியாகவும் இயக்க முடிவதால் இளைய தலைமுறையினர் விருப்பத்துடன் பயன்படுத்துகிறார்கள். மாணவர்- ஆசிரியர் உறவை வலுப்படுத்துகிறது. கற்றல் ஆர்வத்தை மேம்படுத்துகிறது. நேரத்தை மிச்சமாக்குகிறது.

மொத்தத்தில் கூகுள் கிளாஸ்ரூம் மாணவர்களுக்கான வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது என்றால் மிகையில்லை. தற்போது இதே சாயலில் பல்வேறு அப்ளிகேசன்கள் வரத் தொடங்கிவிட்டன.

No comments:

Popular Posts