Thursday 26 December 2019

அரசியலை நோக்கி நடிகர்கள்

அரசியலை நோக்கி நடிகர்கள் | By உதயை மு. வீரையன்  |   உலகம் ஓடுகிறது. பணம், பதவியை நோக்கி ஓடுகிறது. ஒருவரைப் பார்த்து ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு ஓடுகின்றனர்.

எதற்கும் சாதாரண மனிதர்கள் சரியில்லை. பணமும், பேரும் படைத்த சினிமா கதாநாயகர்களே பொருத்தம். அதனால்தான் அவர்களை ஊடகங்கள் துரத்துகின்றன. அரசியலுக்கு வரும்படி அழைக்கின்றன.

மக்கள் இவர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களாம். தங்களுக்கான முதலமைச்சர்களை தியேட்டர்களில், கட்-அவுட்களில் தேடுகிறார்கள். அவர்கள் வந்தால்தான் ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற முடியும் என்கிறார்கள். அவர்களே எல்லாத் திரைப்படங்களிலும் கெட்டவர்களை ஒழித்து, மக்களைக் காப்பாற்றுகிறார்கள் என்பதால் தங்களையும் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பது சரிதானா?

கட்சிகள் நடத்தி அனுபவப்பட்ட சிலர், இந்தப் பெரிய நடிகர்களைச் சந்தித்து யோசனை சொல்லி வருகின்றனர். இந்த மக்களை நம்பி இருக்கிற பணத்தையும் இழக்கத் தயாராக இல்லாத நடிகர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

தமிழ்நாட்டை இரண்டு திராவிட இயக்கங்களும் கடந்த 50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்கின்றன. இரண்டு கட்சிகளின் தலைவர்களும் காலமாகிவிட்ட நிலையில், ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும், அதனைப் பூர்த்தி செய்ய சினிமா உலகத்திலிருந்து தலைவர்களைத் தேடுகிறார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறதா, இல்லையா என்பது ஊடகங்களின் விவாதப் பொருளாகி விட்டது.
அரசியல்வாதிகளின் புதிய புதிய வாக்குறுதிகளும், மக்களின் புதிய புதிய நம்பிக்கைகளும் வாக்கு வங்கியைத் தொடர்ந்து பராமரிக்கின்றன. மக்களுக்குத் தெரியாமல் மக்களை ஏமாற்றுவதே அரசியலில் ராஜதந்திரமாகிறது.

திரை கதாநாயகர்கள் சிலர் முதலமைச்சர் கனவு காண்பதற்குக் காரணம், எம்.ஜி.ஆரின் வெற்றிதான். அவரே கலையுலகத்தையும் ஆண்டார், பின்னர் அரசியலையும் ஆண்டார். அவரைப் போல் இரண்டையும் ஆட்சி செய்தவர் அவருக்கு முன்பும் இல்லை; அவருக்குப் பிறகும் இல்லை. வெற்றியின் கதாநாயகன் அவர்.

திரைப்படத்தின் தோற்றமும், வளர்ச்சியும் மனித நாகரிகத்தையே புரட்டிப் போட்டது. ஊமைப் படங்களின் காலம் முடிந்து, 1931-ஆம் ஆண்டு முதல் பேசும் படங்கள் தயாரிக்கப்பட்டன. முதல் பேசும் படத்தில் நடித்த பெருமையை டி.பி.ராஜலட்சுமி பெற்றார். புதிய வரலாற்றை உருவாக்கினார். முதல் படம் "காளிதாஸ்'. அதனைத் தொடர்ந்து "வள்ளித் திருமணம்' வெளிவந்து வெற்றி கண்டது.

முதல் பேசும் படத்தில் நடித்த டி.பி.ராஜலட்சுமி 1936-இல் "மிஸ் கமலா' என்ற படத்தைத் தயாரித்து வெளியிட்டார். அதன் கதை, வசனம், இயக்கம் எல்லாம் அவரே. தொடர்ந்து மதுரை வீரன், இந்தியத் தாய் ஆகிய படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

இவரைத் தொடர்ந்து ஏழிசை மன்னன் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, டி.ஆர்.மகாலிங்கம், டி.கே.சண்முகம் என்னும் இந்த வரிசையில் வந்தவரே எம்.ஜி.இராமச்சந்திரன் என்னும் எம்.ஜி.ஆர். 1936-இல் "சதிலீலாவதி' படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர்., 1978-ஆம் ஆண்டு வரை 42 ஆண்டுகள் திரையுலகை ஆட்சி செய்தார். திரையுலக வரலாற்றில் வேறு எந்த நடிகரும் இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்ததில்லை.
மிகவும் வறிய நிலையிலிருந்து மேலே வந்தவர் எம்.ஜி.ஆர். எனவே, மக்களின் ரசனையை நன்கு அறிந்திருந்தார். அதற்குத் தக்க கதையைத் தேர்ந்தெடுத்து அவர் நடித்ததால், அவர் படங்கள் வெற்றி மேல் வெற்றி பெற்றன. அவர் பாடும் பாடல்களும் அவ்வாறே பட்டி தொட்டி எங்கும் பாமர மக்களால் முணுமுணுக்கப்பட்டன. எங்கும் அவர் நடித்த திரைப்படங்களின் பாடல்களே ஒலிபரப்பப்பட்டன.

1947-க்குப் பிறகு 1956 வரை அவர் கதாநாயகனாக நடித்த படங்கள் "ராஜகுமாரி', "மர்ம யோகி', "மருத நாட்டு இளவரசி', "சர்வாதிகாரி', "குமாரி', "ஜெனோவா', "மலைக்கள்ளன்', "குலேபகாவலி', "அலிபாபாவும் 40 திருடர்களும்', "மதுரை வீரன்' என்னும் ராஜாராணி படங்களும், "அந்தமான் கைதி', "என் தங்கை', "நாம்', "கூண்டுக்கிளி', "தாய்க்குப் பின் தாரம்' முதலான சமூகக் கதைகளும் மக்களால் வரவேற்கப்பட்டன.

அவர் தொழிலாளியாகவும், விவசாயியாகவும், போலீஸ் அதிகாரியாகவும், படகோட்டியாகவும், ரிக்ஷாக்காரராகவும் நடித்து மக்களைக் கவர்ந்தார். "ஆயிரத்தில் ஒருவன்', "எங்க வீட்டு பிள்ளை', "நான் ஆணையிட்டால்', "பெற்றால் தான் பிள்ளையா' ஆகியவற்றைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நடித்த 100-ஆவது படமாக ஜெமினியின் "ஒளி விளக்கு' 1968-இல் வெளிவந்தது.
1969-இல் "அடிமைப் பெண்', "நம் நாடு', 1972-இல் "இதய வீணை' - இவ்வாறு கலையுலகில் வெற்றியின் உச்சத்தில் இருக்கும்போதே அவர் அரசியல் கட்சியிலும் இயங்கி வந்தார். அவர் தி.மு.க.வின் பொருளாளராகவும் தொடர்ந்தார்; அவருக்கும் கட்சியின் தலைவர்  மு.கருணாநிதிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

1972 அக்டோபர் 10 அன்று கூடிய தி.மு.க. பொதுக்குழு, கட்சியை விட்டு எம்.ஜி.ஆரை வெளியேற்ற தீர்மானம் நிறைவேற்றியது. 16.10.1972-இல் அண்ணா திமுக என்ற தனிக்கட்சி தொடங்கப் போவதாக எம்.ஜி.ஆர். அறிவித்தார். அவர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் படம் 1973 மே மாதம் திரைக்கு வந்தது.
தமிழ்நாட்டில் அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவை 31.1.1976-இல் மத்திய அரசால் கலைக்கப்பட்டது. 1977 ஜூன் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எம்.ஜி.ஆரின் அண்ணா திமுக 127 இடங்களில் வெற்றி பெற்றது. 1977 ஜூன் 30 அன்று எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனார்.

அதுவரை அவர் நடித்து முடித்திருந்த, "இன்று போல் என்றும் வாழ்க', ஏ.பி. நாகராஜனின் "நவரத்தினம்',  "மீனவ நண்பன்' ஆகியவை 1977-ஆம் ஆண்டிலும், "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்' 1978-ஆம் ஆண்டும் வெளிவந்தன. அரசாங்கப் பொறுப்பில் அமர்ந்த பிறகு, பிரதமர் மொரார்ஜியின் அனுமதி பெற்று தொடர்ந்து சினிமாவில் நடிக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் நடிக்கவில்லை.

அவர் 1977, 1980, 1985 ஆகிய மூன்று முறை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றினார். 1987 டிசம்பர் 24-ஆம் தேதியன்று அவர் மறையும் வரை முடிசூடா மன்னராகவே ஆட்சி புரிந்தார். அவரது முன் மாதிரி இன்றும் நினைக்கப்படுகிறது. இனியும் நினைக்கப்படும்.

அவர் காலத்தில் அவருக்கு இணையாக திரையுலகில் மின்னியவர் சிவாஜி கணேசன். அதே காலத்தில் அவரும் அரசியலில் ஈடுபட்டார்;
அவர் வெற்றியைப் பெறவில்லை. இதனை நினைத்துப் பார்த்தால் இக்கால நடிகர்கள் அரசியலுக்குள் நுழைய அஞ்சவே செய்வர். ஒவ்வொரு நாணயத்துக்கும் இரண்டு பக்கம் உண்டு அல்லவா?
மக்களாட்சி என்பது மக்களுக்காக உழைப்பது. தம் உடல், பொருள், உயிரை நாட்டுக்காக அர்ப்பணிப்பது. அது தொழில் அல்ல, தொண்டு. இப்படித்தான் அக்காலத்தில் அரசியலுக்கு வந்தனர். உழைத்து உழைத்து உருக்குலைந்து போனார்கள். ஆனால், எம்.ஜி.ஆர். சேர்த்த செல்வம் எல்லாம் அவருக்குப் பின் மக்கள் உடைமையானது. கல்வி நிலையங்களாகவும், கட்சி நிறுவனமாகவும் காட்சியளிக்கின்றன. குடும்பத்துக்கென எதையும் ஒதுக்கி வைக்காமையால், அவர் மக்களின் நம்பிக்கைக்கு எப்போதும் உரியவராகிறார்.

இப்போது ஒரு படத்தில் நாயகனாக நடித்து வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த நொடியே எம்.ஜி.ஆராகவே எண்ணிக் கொள்கின்றனர். இவர் பேசிய ஒரு வசனத்தால் பாராட்டப்படுகிறார். அந்த ஒரு வசனமும் கதாசிரியர் எழுதிக் கொடுத்தது என்பதை ரசிகர்கள் மறந்து விடுகின்றனர்.

ரசிகர் மன்றம் அமைப்பதற்கு முன் இதனைச் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? பெற்று வளர்த்தவர்களுக்குத் தேநீர் கூட வாங்கிக் கொடுக்காத இளைஞர்கள் நடிகர்களின் கட்-அவுட்களில் பால் அபிஷேகமும், பீர் அபிஷேகமும் செய்கிறார்கள். இந்த மூடத்தனத்தையும், அடிமைத் தனத்தையும் தன்னலத்திற்காக வளர்த்துக் கொண்டிருப்பவர்கள் அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கிறார்கள். அதனை ஊடகங்களும், சில உபதேசிகளும் தூண்டி விடுகின்றனர்.

அரசாங்கத்தின் அரியாசனத்தில் அமர்வதென்பது, புலியின் மேல் சவாரி செய்வது போன்றது. "அதிகார பீடத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வும் இல்லை. உல்லாச வேளையும் இல்லை' என்றார் முதல் பிரதமர் பண்டித நேரு.
உண்மையான அரசியல்வாதிகள் நிலை இப்படித்தான் இருக்கிறது. அரசியலையே முழுநேர வணிகமாகக் கொண்டவர்களுக்கு இது பொருந்தாது. அரசியலும் ஒரு தொழிலாக மாறிவிட்டதால்தான் லஞ்சமும், ஊழலும் பெருகி விட்டது. அவற்றை ஒழித்துவிட்டே மறுவேலை என்று பேசும் பேச்சு தேர்தலோடு முடிந்து விடுகிறது.

அரசியல் அனைவருக்கும் பொதுவானது. நல்லவர்கள் அரசியலுக்கு வருவது பொது நலனுக்கு நல்லது. எல்லோருக்கும் என்பதால் திரையுலகத்தினரும் வரலாம். மக்களுக்கு உண்மையாக உழைக்க வருகிறவர்களை வரவேற்க வேண்டும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது சரியல்ல.
"உங்களுக்காகப் பணியாற்ற எங்களுக்கு உத்தரவிடுங்கள்' என்பது கேட்பதற்கு அருமையாக இருக்கிறது. வாக்காளர்களுக்குப் பெருமையாகவும் இருக்கிறது. ஆனால் உண்மை எட்டாக்கனியாக இருக்கிறது. இது சாதாரண மக்களுக்கும் எட்டும் கனியாக எப்போது வரப்போகிறது?
கட்டுரையாளர்:
எழுத்தாளர்

No comments:

Popular Posts