Friday, 27 December 2019

பா.ஜ.க.வின் முதல் தோல்வி

பா.ஜ.க.வின் முதல் தோல்வி | By ஜெ. ராகவன்  |  இந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் மத்தியில் மீண்டும் ஆட்சியைப் பிடித்த பா.ஜ.க., நடந்து முடிந்துள்ள ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாகத் தோல்வியைத் தழுவியுள்ளது. இன்னும் சரியாகச் சொல்லப் போனால், கடந்த ஓராண்டில் பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ள ஐந்தாவது தோல்வி இதுவாகும்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 30 இடங்களை வென்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸுக்கு 16 இடங்களும், ராஷ்ட்டிரீய ஜனதாதளம் கட்சிக்கு ஓரிடமும் கிடைத்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. 25 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா (பி) 3 இடங்களிலும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் 2 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்-எல்) தலா ஓர் இடத்திலும் வென்றுள்ளன. சுயேச்சைகள் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.

கடந்த 2018-ஆம் ஆண்டு இறுதியில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அந்த மாநிலங்களில் ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க., காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியைப் பறிகொடுத்தது.
கடந்த நவம்பர் மாதம் மகாராஷ்டிரத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. - சிவசேனைக் கூட்டணி அதிக இடங்களில் வென்றிருந்த போதிலும், யார் முதல்வர் என்ற பிரச்னையில் இரு கூட்டணிக் கட்சிகளும் மோதல் போக்கைக் கடைப்பிடித்தன. முடிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் புதிய கூட்டணியை அமைத்து சிவசேனை ஆட்சியைப் பிடித்தது. இந்த விவகாரத்திலும் பா.ஜ.க.வுக்கு தோல்விதான் கிடைத்தது.

அண்மையில் ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிக இடங்களில் வென்ற பா.ஜ.க., பிராந்திய கட்சிக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆசை காட்டி அங்கு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை வலியுறுத்தியும், அயோத்தியில் விரைவில் ஸ்ரீராமருக்கு ஆலயம் கட்டப்படும் என்று பேசியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஒரு கட்டத்தில் மக்களின் மனநிலையை அறிந்த அமித்ஷா, குடியுரிமை திருத்தச்சட்டம் தேவைப்பட்டால் மறுபரிசீலனை செய்யப்படும் என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், அது மக்களிடம் எடுபடவில்லை.

ஜார்க்கண்ட மாநிலம் உருவானது முதல் பெரும்பாலும் பா.ஜ.க.தான் ஆட்சியில் இருந்தது. கடந்த தேர்தலில் முதல் முறையாக பழங்குடியினர் அல்லாதவரான ரகுவர் தாஸ் முதல்வரானார். ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலையும், பழங்குடியினர் அல்லாத முதல்வர் மீதான அதிருப்தியும் தோல்விக்குக் காரணம். பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள சரிவு, தொழில் துறையில் ஏற்பட்டுள்ள மந்த நிலையும் பா.ஜ.க. தோல்விக்கு வழிவகுத்து விட்டது. இந்நிலையில், தேர்தல் தோல்விக்கு உள்ளூர் பிரச்னைகளே காரணம் என பா.ஜ.க. சமாளித்த போதிலும், மாநில முதல்வர் ரகுவர் தாஸ் , தேர்தல் தோல்விக்கு தாம் முழுப் பொறுப்பு ஏற்பதாக அவசரம் அவசரமாக அறிவித்தார்.

மகாராஷ்டிரம், ஹரியாணா மாநிலங்களைப் போல ஜார்க்கண்டில் சிறிய அரசியல் கட்சிகளை வளைத்துப் போடும் பா.ஜ.க.வின் முயற்சியும் தோல்வி அடைந்துவிட்டது. பா.ஜ.க.வின் கூட்டணியில் இடம்பெற்றிருந்த சுதேஷ் மஹதோ தலைமையிலான அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் இந்த முறை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. இதேபோல ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டது. அண்மைக் காலமாக பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமார், பா.ஜ.க.வுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். இதே நிலை தொடருமானால், அடுத்துவரும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து ஐக்கிய ஜனதா தளம் போட்டியிடுமா என்பதே சந்தேகம்.

2014-இல் மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்த போதிலும் 2015-ஆம் ஆண்டு பிகாரில் நடைபெற்ற தேர்தலில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தன. இந்தத் தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், லாலு பிரசாத் கட்சியுடன் கூட்டணி முறிந்துபோனதால் நிதிஷ்குமார், பா.ஜ.க.வுடன் கைகோத்து ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது வேறு விஷயம்.

ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் தோல்வியை அடுத்து, மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மீதான ஈர்ப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியுள்ளதாக எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. மேலும், எதிர்க்கட்சியினர் மீண்டும் ஒன்று இணைய வேண்டும். அப்படி இணைந்துவிட்டால் பா.ஜ.க. ஒன்றும் தோற்கடிக்க முடியாத கட்சியல்ல என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் காங்கிரஸ் உள்ளிட்ட இதர கட்சியின் தலைவர்களும் கூறத் தொடங்கியுள்ளனர்.
மத்தியில் மோடியின் ஆட்சிக்கு ஆதரவு இருந்தாலும், மாநிலங்களில் பா.ஜ.க.வின் செல்வாக்கு சரிந்து வருவதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். "காங்கிரஸ் கட்சியை முழுமையாக இருக்குமிடம் தெரியாமல் ஒழிப்போம்' என்று கோஷம் போட்டு வந்த பா.ஜ.க.வுக்கு இது சோதனைக் காலம்தான்!

No comments:

Popular Posts