Friday, 27 December 2019

ஜனநாயகம் - ஒரு தரம், இரண்டு தரம்...

ஜனநாயகம் - ஒரு தரம், இரண்டு தரம்...| By தி. இராசகோபாலன்  |   நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் சாயம் இழக்கின்றன என்றால், ஊராட்சி மன்றங்கள் சாரம் இழந்துவிட்டன என்பது பொருள். உள்ளாட்சி அமைப்புகள் எஃகுபோல்  செயல்பட்டால்தான், மக்களாட்சி மகத்துவம் பெறும். இந்தியாவில் கி.மு. 1700-க்கு முன்பேயே பஞ்சாயத்து முறை நடைமுறையில் இருந்ததாக ரிக் வேதம் கூறுகிறது. 

"ஸர் சார்லஸ் மெட்கஃபே' எனும் இங்கிலாந்து நாட்டு வரலாற்றறிஞர், "5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியக் கிராமங்கள் தன்னிறைவு பெற்ற குடியரசுகளாகத் திகழ்ந்தன.  அதனால், பஞ்சாயத்து ராஜ்ய அமைப்பை ஏற்றுச் செயல்பட, கிராமங்கள் தயாராக இருந்தன.  அந்த அமைப்பைப் பிரிட்டிஷாராகிய நாம் எக்காரணம் கொண்டும் குலைத்துவிடக் கூடாது' என எழுதியுள்ளார்.

கி.பி. பத்தாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட உத்தரமேரூர் கல்வெட்டு, சோழராட்சியில் கிராமப் பஞ்சாயத்துகள் பக்குவமாய்ச் செயல்பட்டதைச் செவ்வனே எடுத்துச் சொல்கின்றன.  சோழ மன்னர்களுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைக் கிராமப் பஞ்சாயத்துகளே வசூலித்துச்  செலுத்தியிருக்கின்றன.

பஞ்சாயத்துத் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் உரிய தகுதிகளை அந்தக் கல்வெட்டு வரையறுத்துச்  சொல்லுகிறது.  "உத்தரமேரூர் 30 சேரிகளைக் கொண்டிருந்தது.  35 வயதுக்குக் குறைந்தவர்களும் 75 வயதுக்கு மேற்பட்டவர்களும் ஊர்ப் பஞ்சாயத்தின் பிரதிநிதிகளாய் இருக்க முடியாது.  ஒருமுறை உறுப்பினராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஓராண்டு காலமே பொறுப்பு வகிக்கலாம்.  அவர் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மீண்டும் பிரதிநிதியாய் வர முடியாது.  ஒருமுறை பதவிக்கு வந்தவரின் மகன், அடுத்த நான்கு ஆண்டுக்குள் பொறுப்புக்கு வரக்கூடாது.  அவரின் சகோதரர் மூன்று ஆண்டுகளுக்குள் பதவிக்கு வரக்கூடாது.
கொலை, திருட்டு, கற்பழிப்பு போன்ற மாபாதகங்களைச் செய்தவர்களும், அரசாங்கக் கணக்கில் மோசடி செய்தவர்களும், குறிப்புகளை மன்னருக்கு அனுப்பத் தவறியவர்களும் தேர்தலில் நிற்கத் தகுதியற்றவர்கள் ஆவர் என்பன அந்தக் கல்வெட்டு தரும் வழிகாட்டல்கள் ஆகும்.  குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்படும் செய்தியையும் அந்தக் கல்வெட்டு கூறுகிறது.
இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பே, கிராம ராஜ்யத்தை மகாத்மா காந்தியடிகள் வற்புறுத்தியிருக்கிறார்.  "இந்தியாவின் ஜீவன் கிராமங்களிலேதான் உள்ளது.  கிராமத்து மக்கள் உண்ணுவதற்குரிய உணவுக்கும், உடுப்பதற்குரிய உடைக்கும் யாரையும் நம்பியிருப்பதில்லை.  அவர்களுடைய தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்கின்றனர். 
ஒரு சிலர் அதிகாரத்தைப் பெறுவதால் அல்லாமல், அனைவரும் அந்தத் திறனைப் பெறுவதுதான் சுயராஜ்யம்; ராம ராஜ்யம் என்றார் தேசப் பிதா.

சட்ட மேதை அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் 40-ஆவது ஷரத்து உள்ளாட்சி அமைப்பின் முக்கியத்துவத்தை வரையறுக்கிறது.  "அரசு, கிராமப் பஞ்சாயத்துகளை அமைக்க நடவடிக்கை எடுக்கும்.  மேலும், அவை சுயாட்சி அமைப்புகளாகச் செயல்படுவதற்குத் தேவையான அதிகாரங்களையும் ஆணை உரிமைகளையும் அரசே வழங்கும் என்பது, விடுதலை பெற்ற இந்தியா உள்ளாட்சிக்கு ஊன்றிய வித்தாகும்.

40-ஆவது ஷரத்து குறித்துப் பேசிய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, "உண்மையான மாற்றம் கிராமத்தின் உள்ளே இருந்துதான் வருகிறது; கிராமத்து மக்களிடம் இருந்துதான் வருகிறது; வெளியிலிருந்து சுமத்தப்படுவதில்லை என்றுரைத்தார்.

செம்மையாக நடந்து கொண்டிருந்த உள்ளாட்சித் துறையை, இந்த நாட்டுக்குள் அடியெடுத்து வைத்த கிழக்கிந்திய கம்பெனி சீர்குலைத்தது.  கி.பி. 1765-ஆம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனிக்கு நிதி வேண்டும் என்பதற்காகப் பஞ்சாயத்துகளைக் கலைத்துவிட்டு, திவான்களையும், பட்வாரிகளையும் நியமித்தது. 
என்றாலும், 1882-ஆம் வைசிராயாக இருந்த லார்டு மேயோவும், ரிப்பன் பிரபுவும், கிராமப் பஞ்சாயத்துகளுக்குப் புத்துயிர் கொடுத்து, அவை வசூலிக்கும் வரியை மட்டும் காலனி ஆதிக்கத்துக்கு வரும்படியாகப் பார்த்துக் கொண்டனர்.
வைசிராய் ஏட்டளவில் குறிப்பிட்டதைத் திடமாக ஏற்று, நாட்டிலே நடைமுறைப்படுத்தியவர் ரிப்பன் பிரபு. அதனால் சுரேந்திரநாத் பானர்ஜி அவரை "இந்திய உள்ளாட்சித் துறையின் தந்தை எனப் பாராட்டினார்.

1956-இல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட "பல்வந்த் ராய் மேத்தா குழுவினர் அண்மைக்காலம் வரை நடைமுறையில் இருந்த ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி எனும் மூன்றடுக்கு அமைப்பினை நமக்கு அறிமுகப்படுத்தினர்.  அடுத்து அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 73, 74-ஆவது சட்டத் திருத்தங்கள், பட்டியலினத்தாருக்கும், மலைவாழ் மக்களுக்கும், பெண்களுக்கும் உரிய ஒதுக்கீட்டை வரையறை செய்தது.  இன்னும் 29 செயல்திட்டங்களையும் பரிந்துரை செய்தன.

இப்போது பஞ்சாயத்து நாளாக ஏப்ரல் 24-ஆம் தேதியைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். வாயளவில் பேசப்பட்டுக் கொண்டிருந்த பஞ்சாயத்து அமைப்புக்குப் புத்துயிர் கொடுத்தவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி.  "தில்லியிலிருந்து ஒரு யானையைக் கிராமத்துக்கு அனுப்பினால், அதனுடைய வால் மட்டும்தான் கிராமத்துக்குப் போய் சேருகிறது எனப் பலவற்றை உள்ளடக்கி நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பேசினார்.

என்றாலும், கிராமப் பஞ்சாயத்து முறை வெற்றி பெற வேண்டும் என்று களத்தில் இறங்கியவர் முன்னாள் குடியரசுத் தலைவர்  அப்துல் கலாம்.  "இந்தியாவில் 5,83,000 கிராமங்கள் இருக்கின்றன.  70 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்கின்றனர்.  இந்தியாவை முன்னேற்ற வேண்டுமென்றால், கிராமங்கள் முன்னேற வேண்டும்.  கி.பி.2020-இல் இந்தியா நல்லரசாக, வல்லரசாக மாற வேண்டும் என்றால், கிராமங்கள் முன்னேற வேண்டும். கிராமங்கள் முன்னேறினால்தான், மாவட்டங்கள் முன்னேறும்.  மாவட்டங்கள் முன்னேறினால்தான், மாநிலங்கள் முன்னேறும்.  மாநிலங்கள் முன்னேறினால்தான், நாடு முன்னேறும் என்றார் கலாம்.

கிராமத்து மக்கள் வசதிகளை எதிர்பார்த்து, நகரங்களுக்கு இடம்பெயராமல், நகரத்து வசதிகளைக் கிராமத்துக்குக் கொண்டுவந்து, தங்களைத் தாங்களே ஆண்டு கொள்வதற்குப் "புறா' (Provision of Urban Amenities to Rural Areas)  என்றொரு திட்டத்தை  அப்துல் கலாம் கொண்டுவந்தார். 
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வல்லத்தைச் சுற்றி 65 கிராமங்கள் இருக்கின்றன. அங்கிருக்கின்ற பெரியார் மணியம்மை பொறியியல் கல்லூரி மாணவர்களை அப்துல் கலாம் நெறிப்படுத்தி பல பஞ்சாயத்துத் திட்டங்களை நிறைவேற்றினார்.  அவற்றுள், அங்கிருந்த  165 நீர்நிலைகள்  மாணவர்களால் தூர்வாரப்பட்டு, பாய்மடை - வடிமடைகளைத் தூய்மைப்படுத்தி, அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் ததும்பி நிற்கும்படியாகச் செய்தார்.  கிராமங்களில் கிடைக்கும் கச்சாப் பொருள்களை வைத்துச்  சிறுதொழில்கள் சிறக்கும்படிச் செய்தார். மேலும், அங்குள்ள கைவினைஞர்களுக்கு, "மைக்கோ பாஷ்' நிறுவனம் பயிற்சி அளிக்கும்படியும் பணித்தார்.

இவ்வாறு மேதைகளாலும், வல்லுநர்களாலும் காலம் காலமாக போற்றி வளர்க்கப்பட்ட உள்ளாட்சிப்பதவிகள், இன்று கட்சி அரசியலால் ஒரு தரம், இரண்டு தரம் என்று ஏலம் விடப்படுகின்றன.  வெற்றி வாய்ப்புடைய வேட்பாளர்கள் சொந்த கட்சிக்காரர்களாலேயே கடத்தப்படுகிறார்கள். 
இதை முன்கூட்டியே ஊகித்து அறிந்த தீர்க்கதரிசியாகிய பாபு வினோபா பாவே, "உள்ளாட்சி அமைப்புகளில் கட்சிகளைக் கழற்றி எறிய வேண்டும்; கட்சி அரசியல் என்பது மக்களைப் பிளவுபடுத்துகிறது; மக்களின் ஒற்றுமையைக் குலைக்கிறது; மக்களை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது' என்றார். 

கிராம சமுதாயத்தைப் பிளவுபடாத ஒரே சமுதாயமாகக் கட்டிக் காக்க விரும்பினால், பஞ்சாயத்து ராஜ் அமைப்பில், அரசியல் கட்சிகள் தலையிடாமல் ஒதுங்கி நிற்க வேண்டும் என இப்போதைய நிலைக்கு, அப்போதே சொல்லிவைத்தார் அண்ணல் வினோபா பாவே அவர்கள்.
பாபு வினோபா பாவே அவர்கள் பாடிய பல்லவிக்கு அனுபல்லவி போல், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்  இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடும் , "கட்சி சார்பற்ற முறையில் பஞ்சாயத்துத் தேர்தலை அணுகுவது, பஞ்சாயத்துச் சபைகள் சுமுகமாக இயங்குவதற்கு வழி செய்யும் எனக் கூறியிருக்கிறார்.

சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களில் வாக்காளர்களை  வேட்பாளர்கள் காசுக்கு விலைக்கு வாங்குகிறார்கள்; உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களைத் தவறு செய்பவர்களாக  வாக்காளர்கள் மாற்றுகிறார்கள்.
மகளிர் வார்டுகளில் ஆடவர்கள் நிற்க முடியாதபோது, தம் மனைவியருக்குக் கையெழுத்துப் போடக் கற்றுக் கொடுத்துக் களத்தில் இறக்குகிறார்கள்.  இது, மகாபாரதத்தில் சிகண்டியை முன்னிறுத்தி அர்ச்சுனன் பின்னிருந்து அம்பு விட்டுப் பீஷ்மரை வதம் செய்தது போலிருக்கிறது.  இங்கு பீஷ்மரைப் போல் பஞ்சாயத்து முறை வதைபடுகிறது.  இதை 24.04.2015 அன்று பிரதமர் மோடி, இந்தியாவிலுள்ள அனைத்து ஊராட்சி, நகராட்சித் தலைவர்களை அழைத்து, அந்தத் தவறைச் செய்ய வேண்டாம்  என அறிவுறுத்தினார்.

ஊராட்சி, பஞ்சாயத்து முறை பால் தரும் பசுவைப் போன்றது.  பணத்துக்காகவும், பதவிக்காகவும் அந்தப் பசுவைக் கொன்று விடாதீர்கள்.
கட்டுரையாளர்:
பேராசிரியர் (ஓய்வு)

No comments:

Popular Posts