Saturday 16 November 2019

காற்று மாசுபடுதலுக்கு தீர்வு என்ன?

காற்று மாசுபடுதலுக்கு தீர்வு என்ன?

டெல்லி செங்கோட்டை முன்பு புகை மூடுபனி சூழ்ந்து இருப்பதை படத்தில் காணலாம்.
எஸ்.ஆர்.ரமணன், இயக்குனர் (ஓய்வு),

புயல் எச்சரிக்கை மையம், சென்னை.

சமீப காலமாக காற்று மாசுபடுதல் என்பது அனைவரும் விவாதிக்கக்கூடிய பொருளாக உள்ளது. சமீபத்தில் என் நண்பர் ஒருவர் டெல்லியில் விமானம் தரை இறங்கிய போது மின்சார ஒயர் எரிவதைப் போல் நாற்றம் வீசுவதை உணர்ந்தேன் என்று கூறினார். இதற்கு காரணம் டெல்லியில் காற்று மாசுபட்டு இருப்பது என்பது தான். காற்று ஏன் மாசுபடுகிறது. இதற்கு தீர்வு என்ன? என்பதை பற்றி பார்க்கலாம். ஒரு தொழிற்சாலையில் புகை மேலே செல்வதை பார்த்திருப்போம். அது ஏன் மேலே செல்கிறது? அந்த புகையின் வெப்பம் சுற்றியுள்ள பகுதியை காட்டிலும் அதிகமாக உள்ளதால் மேல் எழும்பும். வளிமண்டலத்தின் மேல் பகுதிகளில் தரைப்பகுதியை காட்டிலும் வெப்பமாக இருந்தால் புகை மேலே செல்லாது. தரைப்பகுதியிலேயே பரவி விடும். பொதுவாக குளிர் காலங்களில் இந்த நிலையை நாம் வட இந்திய பகுதிகளில் பார்க்கலாம்.

இப்போது மூடுபனி என்றால் என்ன? என்று சற்று பார்க்கலாம். தெளிந்த வானமுடன் கூடிய இரவில் பூமியானது தனது வெப்பத்தை வெளிவிடும். மேலே மேகங்கள் இருந்தால் இதை தடுத்து விடும். தெளிந்த வானத்துடன் கூடிய இரவில் வெப்பம் வெளி சென்றால் தரை பகுதி குளிர்வடையும். ஒவ்வொரு வெப்ப அளவிற்கும் இந்த அளவுக்கு நீராவி இருக்கலாம் என்ற கணக்கு உண்டு. வெப்பம் குறையும்போது உபரியாக உள்ள நீராவி நீர் துளிகளாக மாறும். இதை பனித்துளிகளாக நாம் செடியில் பார்க்க முடியும். சில நேரம் பனிப்படலம் எனும் மேகமாக தரைப்பகுதியில் உருவாகும். இதுவே தோற்ற தெளிவு குறைவாக இருப்பதற்கு காரணம். பார்வை தூரம் 1 கி.மீ. குறைவாக இருந்தால் மூடு பனி, அதற்கு அதிகமாக இருந்தால் மென் மூடுபனி, இந்த மூடுபனி காலத்தில் அதனுடன் புகையும் சேர்ந்தால் புகைப்பனி என்பார்கள். இந்த புகைப்பனி என்பது தொழிற்பேட்டைகளில் அதிகமாக காண முடியும். காற்று எந்த திசையில் வீசுகிறதோ, அந்த திசையில் புகை நகர்ந்து மற்ற இடங்களில் தோற்ற தெளிவை குறைக்கும்.

ஒரு நதியில் நீர் மாசுபட்டால் நாம் என்ன செய்ய வேண்டும். நீரின் போக்கை தடுத்து, அதை சுத்தம் செய்து மீண்டும் நீரோட்டத்திற்கான தடையை நீக்கலாம். நாம் சுவாசிக்கும் காற்று மாசுபட்டால் என்ன செய்ய வேண்டும். நீரோட்டத்தை போன்று காற்றின் போக்கை தவிர்க்க முடியாது. எனவே இந்த காற்று மாசுபடுவதற்கு காரணமான தொழிற்சாலையில் இருந்து வெளிப்படும் காற்றை சுத்தம் செய்ய வேண்டும். அந்த முயற்சி என்பது, அந்த நச்சு பொருள் வெளிப்படுவதை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த தொழிற்சாலையில் உள்ள தொழில்நுட்ப முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும்.

ஒளி மற்றும் அச்சு ஊடகங்களில் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபடும் செய்திகளை நாம் அன்றாடம் பார்க்கிறோம். விவாதம் செய்யும் அளவிற்கு சென்றுள்ளது. அதற்கு காரணம் என்ன நாம் சுவாசிக்கும் காற்று மாசு அடைந்த காரணத்தினால் உடல் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. காற்று எந்த அளவிற்கு மாசு அடைந்துள்ளது என்பதை கண்காணிப்பது தேசிய மற்றும் மாநில அளவிலான மாசு கட்டுப்பாட்டு வாரியம். இந்த மைய மற்றும் மாநில அரசு சார்ந்த நிறுவனங்கள் கருவிகள் பொருத்தி காற்றின் நன்மையை பகுப்பாய்வு செய்கின்றன. அவை காற்றில் உள்ள கந்தக ஆக்ஸைடுகள், நைட்ரஜன் ஆக்ஸைடுகள், நுண் துகள்கள் என்று பகுப்பாய்வு செய்கின்றன. இந்த நுண் துகள்களில் பெரிய துகள்கள் பத்து மைக்ரான் அளவிலும் இருக்கும். இரண்டரை மைக்ரான் சிறியதாக கூட இருக்கலாம். பெரிய துகள்களை நமது மூக்கிலுள்ள முடியானது தடுத்து விடும். சிறிய துகள்கள் நாம் சுவாசிக்கும் காற்றுடன் நுரையீரலுக்கு செல்ல வாய்ப்புண்டு. இதன் காரணமாக நுரையீரல் தொடர்பான உபாதைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

இதை குறிப்பதற்கு காற்றின் தர குறியீடு என்பதை அவர்களுடைய இணைய தளத்தில் பார்க்கலாம். இதில் இருந்து தப்புவதற்கு முகமூடி அணிவது என்பது தற்காலிகமான ஏற்பாடு மட்டுமே. அதை முற்றிலும் கட்டுப்படுத்த நாம் என்ன செய்ய வேண்டும்?

சில வருடங்களுக்கு முன்பு இந்தோனேசியா நாட்டில் மரங்கள் தீயிடப்பட்டு எரிந்தபோது, அண்டையில் உள்ள சிங்கப்பூரில் புகைப்படலத்தை பார்த்தோம். இதே போன்று டெல்லி அருகாமையில் உள்ள அண்டை மாநிலங்களில் விளை நிலங்களில் வைக்கோல் போன்ற பொருட்கள் எரிக்கப்படுவதால் காற்றின் போக்கின் காரணமாக அந்த புகையானது டெல்லி மக்களை சென்றடைந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அதிக மக்கள் தொகை, போக்குவரத்து வாகனங்களில் அளவு அதிகமாகி, அதில் இருந்து வரக்கூடிய புகையும் ஒரு காரணம். சிங்கப்பூரில் கார் வாங்க வேண்டுமானால் அதை வைத்துக்கொள்ள அந்த கட்டிடத்தில் வசதி இருக்க வேண்டும். மேலும் காரின் விலை அளவிற்கு இரண்டு மடங்கு பணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும். போக்குவரத்து நெரிசல் உள்ள நேரங்களில் வாடகை கார்களில் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன நெரிசல் கட்டுப்பாட்டில் உள்ளது.

பொதுவாக நகரங்களில் என்ன என்ன முறைகளில் காற்று மாசடைவதை தடுக்கலாம். நச்சு பொருட்கள் வெளிப்படுவதை தவிர்க்க புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு. விளைநிலங்களில் மீதமாக இருக்கும் காந்த பொருட்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்த வேண்டும். எரி நிலையங்களை நிறுவி எரிக்கலாம். மெட்ரோ ரெயில்கள், பஸ்களை அதிகப்படுத்தி தனி மனித வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க வழி செய்யலாம். தனி மனித வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல கூடிய நிலையில் மற்ற காலி இருக்கைகளில் மற்றவர்கள் செல்லக்கூடிய வசதிகள் மேலே நாடுகளில் உண்டு. தற்போது இந்தியாவிலும் வந்துள்ளது. இதன் மூலமாக ஒவ்வொருவரும் தனித்தனியாக செல்லாமல் வாகன நெரிசலை கட்டுப்படுத்தலாம். அதன் மூலம் கரியமில வாயுவின் வெளிப்பாட்டை குறைக்கலாம். இதன் மூலம் நேரம் வீணாகாமல் நாம் பயணிப்பதற்கு வாய்ப்புண்டு. சில நேரங்களில் 20 கிலோமீட்டர் தூரத்தை நகரங்களில் கடப்பதற்கு மூன்று மணி நேரம் தேவைப்படுகிறது. சமீபத்தில் எனக்கு ஒரு கையேடு கிடைத்தது. அதில் செல்போன் செயலி மூலம் ஓ.எம்.ஆர். சாலையில் பயணிப்பவர்கள் மற்றவர்களுடைய காரில் பயணிக்கும் வசதி இருப்பதை அறிந்துகொண்டேன். நாம் அனைவரும் நன்கு சிந்தித்து ஒரு பாதுகாப்பான உலகத்தை எதிர்கால மக்களுக்கு அளிப்போம்.

No comments:

Popular Posts