Friday 13 September 2019

அன்னிய முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும்

அன்னிய முதலீடுகளும், வேலைவாய்ப்புகளும்

ஆ.சக்திவேல், தலைவர்,

இந்திய அமெரிக்க தொழில் வர்த்தக சபை.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு செல்ல இருப்பதை அறிந்து எங்களது வர்த்தக சபை மூலம் அவருக்கு தமிழக தொழில் துறை வாயிலாக அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்தோம். எங்களது அழைப்பை ஏற்றுக்கொண்டு அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி நியூயார்க்கிலும், சான் ஹீசே மற்றும் துபாய் நகரிலும் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம்.

முதலில் நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சர்களும் அதிகாரிகளும் பங்கு பெற்றனர். இந்த கூட்டத்தில் ரூபாய் 2 ஆயிரத்து 800 கோடி முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது.ஹெல்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்தனர்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘யாதும் ஊரே’ என்ற திட்டத்தை வெளி நாடு வாழ் தமிழர்களுக்காக தொடங்கி வைத்தார். இதன் முக்கிய நோக்கம் வெளி நாட்டில் வாழும் தமிழர்கள் நமது தமிழகத்திற்கு வந்து முதலீடு செய்ய வேண்டும் என்பதுதான். இதில் 200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் இந்த திட்டத்தை மனப்பூர்வமாக வரவேற்பதாகவும், உறுதியாக தமிழ்நாட்டில் முதலீடு செய்வோம் என்று கூட்டத்திலேயே அறிவித்தது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அடுத்து 4.9.2019-ல் சான் ஹீசே நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் 2 ஆயிரத்து 300 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் 7 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.

‘யாதும் ஊரே’ திட்டக் கூட்டத்தில் புதிய தொழில் தொடங்கும் தமிழர்களுக்கு 10 சதவீத முதலீட்டை தமிழக அரசாங்கம் வழங்கும் திட்டத்தையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அங்கு தழிழக மக்கள் முக்கியமாக சிலிகான் வேலியில் தொழில் அதிபர்களாக திகழ்பவர்கள், தாம் பிறந்த தமிழகத்திற்கு பெரும் முதலீடு செய்வோம் என்று உறுதியளித்தார்கள். ‘யாதும் ஊரே’ என்ற திட்டம் எங்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்து ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்கள்.

செப்டம்பர் 5-ந்தேதி உலக பிரசித்தி பெற்ற சுற்றுச்சூழலை பாதுகாக்கின்ற வகையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தை பார்வையிட்டோம். அப்போது முதல்-அமைச்சர் அந்நிறுவனத்தாரை தமிழகத்திற்கு வந்து தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார். அடுத்து தழிழ்நாட்டை சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் வெங்கட் ஆகியோரால் உருவாக்கப்பட்ட நிறுவனத்திற்கு சென்று மாசில்லா எரி சக்தியை எளிய முறையில் தயாரிப்பதை பார்வையிட்டு அவர்கள் தமிழகத்தில் திட்டத்தை தொடங்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தார். அதற்கு அவர்களும் சம்மதித்தனர்.

செப்டம்பர் 6-ந்தேதி லாஸ் ஏஞ்சல்சில், அனாஹெய்ம் நகராட்சியில் கழிவு நீரை மறுசுழற்சி செய்யும் திட்டத்தையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் கேட்டறிந்தார்.

துபாய் நகரில் செப்டம்பர் 9-ந்தேதி, பிசினஸ் லீடர்ஸ் பார்ம் மற்றும் இந்திய துணை தூதரகமும் இணைந்து நடத்திய தொழில் முனைவோர் கூட்டத்தில், 3 ஆயிரத்து 750 கோடி ரூபாய் அளவிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. அங்குள்ள முதலீட்டாளர்கள் தமிழகத்திற்கு பிசினஸ் லீடர்ஸ் பார்ம் கூட்டமைப்பு மூலம் உடனடியாக தழிழகத்திற்கு பயணம் மேற்கொண்டு மேலும் பல துறைகளில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளனர். இதன் மூலம் 11 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு தமிழ்நாட்டில் ஏற்படும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டு பயணத்தின் மூலம் 9 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் வரும்படி 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது தமிழகத்தில் 37ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும்.

அன்னிய முதலீடு என்பது ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவையான ஒன்றாகும். இதன் மூலம் தொழில் வளர்ச்சி நவீன தொழில் நுட்பங்களுடன் ஏற்படுவதோடு வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியும் பெருகும்.

இப்பயணத்தில் முதல்-அமைச்சருடன் தொடர்ந்து ஏழு நாட்கள் உடன் இருந்ததில் அவருடைய செயல்பாட்டில் ஒரு உத்வேகத்தை பார்க்க முடிந்தது. அவர் சென்ற இடமெல்லாம் தமிழக நலனையே முக்கியமாக கருத்தில் கொண்டு அங்குள்ள முதலீட்டாளர்களுடனும் முக்கியமாக தமிழக மக்களிடமும் வேண்டுகோள் விடுத்தபடி இருந்தார்.

இந்த முதலீட்டாளர்கள் கூட்டங்களை தொடர்ந்து முதல்-அமைச்சரை சந்தித்த அமெரிக்க மற்றும் துபாய் வாழ் முதலீட்டாளர்கள் முக்கியமாக ‘யாதும் ஊரே’ திட்டத்தில் பெருமளவில் முதலீடு செய்வார்கள் என உறுதியளித்துள்ளனர். இதன் மூலம் இப்போது ஏற்பட்டுள்ள தொய்வு நிலை அகன்று தமிழகம் பெரும் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை பெறும்.

இது ஒரு தொடக்கமே! தொடர்ந்து பெரும் முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Popular Posts