Wednesday 11 September 2019

உலக ஒற்றுமைக்கு வழிகாட்டிய ஒப்பற்ற துறவி

இன்று (செப்டம்பர் 11-ந்தேதி) சிகாகோ சர்வசமய மாநாட்டில் விவேகானந்தர் உரை நிகழ்த்திய தினம்.

1893 செப்டம்பர் 11-ம் நாள். இந்திய தேசத்தின் இளைஞர்கள் நம்பிக்கையின் சின்னங்கள் என்பதை உலகுக்கு உணர்த்திய தினம். ஆம்! அந்த நாள், இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும், தங்களின் இரு கண்களாகப் பார்ப்பவர்கள் என்ற உயரிய உண்மையை உலகிற்கு பறைசாற்றிய நாள். இந்திய தேசத்தில் மனித வாழ்வு என்பது அமைதியாகவும், ஆனந்தமாகவும், அதோடு அடுத்தவருக்கு பயன்படும் வகையிலும் வாழ்வதுதான் என்பதை உணர்த்திய நாள். இந்திய தேசத்தின் புகழினை அன்று உலகிற்கு பளிச்சிட வைத்த உன்னத இளைஞர் தான் சுவாமி விவேகானந்தர்.

சர்வ சமய மாநாடு அமெரிக்க நாட்டின் சிகாகோவில் 1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி முதல் செப்டம்பர் 27-ந் தேதி வரை 17 நாட்கள் நடைபெற்றது. உலகெங்குமிருந்தும் பிரதிநிதிகள் வரவழைக்கப்பட்டிருந்தனர். இந்தியாவின் சார்பில் நம் தமிழ்நாட்டில் ராமநாதபுரத்து மன்னர் பாஸ்கர்சேதுபதிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அந்நேரத்தில் சுவாமி விவேகானந்தர் இந்தியாவின் வடகோடியிலிருந்து தென்கோடி வரை நம் தேசத்தினைப் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ள ஒரு நடைபயணத்தை மேற்கொண்டிருந்தார். அச்சமயத்தில் அவர் ராமநாதபுரத்து மன்னரைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. சுவாமி விவேகானந்தர் மன்னரைச் சந்தித்து உரையாடினார். அவ்வுரையாடலில் அவரது அறிவுக் கூர்மையையும், ஞானத் தெளிவையும் கண்டு வியந்தார். அம்மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக சிகாகோ மாநாட்டிற்கு மன்னர் அவரது சார்பில் சுவாமி விவேகானந்தரை அனுப்பி வைத்தார். கிடைத்ததற்கரிய வாய்ப்பினைப் பெற்ற சுவாமி விவேகானந்தர் சிகாகோ சென்றடைந்தார்.

சிகாகோவில் சர்வ சமய மாநாட்டு அரங்கத்தில் முதல் நாள் மாலை வேளையில் சுவாமி விவேகானந்தர் பேசத்தொடங்கினார். கூட்டத்தினரைக் கண்டதும், அவர் மனதின் ஆழத்திலிருந்து சொற்கள் வெளிவந்தன. கூட்டத்தினரைப் பார்த்து, எனதருமை அமெரிக்க நாட்டின் சகோதர-சகோதரிகளே! என்று அழைத்தார். அந்த அவையிலே ஒரு பேராற்றல் வெளிவந்ததாக எல்லோரும் உணர்ந்தனர். அதனால், அவ்வரங்கம் ஓர் இருபது நிமிடம் கரவொலியால் நிறைந்தது. உலகில் தோன்றுகின்ற நீரோடைகளெல்லாம் நதிகளாக மாறி கடைசியில் கடலினை அடைவது போல் வெவ்வேறு திசைகளில் தோன்றுகின்ற மதங்களெல்லாம் வெவ்வேறு வழிமுறைகளில் பயணித்து கடைசியில் இறைவனை அடைகின்றன என்ற குழந்தைப் பருவத்திலே தான் பயின்ற பாடல் வரிகளை எடுத்துக் கூறியதும் அந்த அரங்கம் மெய் சிலிர்த்தது.

அதற்கு அடிக்கோடிடுவதைப்போல், பகவத்கீதையின் “ஒவ்வொருவரும் ஒவ்வொரு வழியில் என்னை அடைய முயல்கிறார்கள். யார் எந்த வழியாக என்னிடம் வர முயன்றாலும் அவர்கள் இறுதியில் என்னையே அடைகின்றனர்” என்ற வரிகளை மேற்கோளிட்டுக் காட்டியபோது மதங்களின் பேதங்கள் மறைந்து ஒரு புதிய உறவினை அனைவரும் உணர்ந்தார்கள். அந்தக் கன்னிப் பேச்சிலேயே அனைவரின் உள்ளத்திலும் கருத்தாலும், அன்பாலும் ஆழ்ந்த தடம் பதித்தார்.

“கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்”

என்ற வள்ளுவரின் வரிகளுக்கேற்ப தன்முன்னே இருக்கின்றவர்களை வசப்படுத்துகின்ற ஒரு பேச்சு.

எனது மதம் பெரிது என ஒவ்வொருவரும் அங்கு முழங்கிக் கொண்டிருக்கிறபோது “மனிதராய்ப் பிறப்பது அரிது, மதங்களைவிட மனிதங்களைக் காப்பதே பெரிது” என்ற கருத்தினை மையமாக்கிப் பேசியபோது அவ்வரங்கத்தில் உள்ளோரின் மூளையினைப் பட்டைத் தீட்டினார். முதல் நாள் பேச்சிலேயே அமெரிக்க தேசத்து மக்களின் கனவு நாயகன் ஆனார். நம் இந்திய தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரமானார்.

நான்காம் நாள் சொற்பொழிவில் ஒரு கதையைக் கூறினார். ஒரு கிணற்றிலே ஒரு தவளை, காலம் காலமாக இருந்தது. அதற்கு தெரிந்த உலகமெல்லாம் அந்த கிணறு தான். ஒரு நாள் சுனாமியை போல் வேகமாக அலைவீச, கடல்நீரோடு ஒரு தவளையும் தாவி வந்து அந்த கிணற்றிலே விழுந்தது. அந்த புதிதாய் வந்த தவளையினை, நீ எங்கிருந்து வருகிறாய்? என்றது. நான் கடலிலிருந்து வருகிறேன் என்றது. ஒரு தாவு தாவி, உனது கடல் இதைவிடப் பெரிதா? என்றது. அதற்கு கடல் தவளை கடலானது உனது கிணற்றைவிட பலமடங்கு பெரியது என்றது. அதைக் கேட்டதும் கோபமான கிணற்று தவளை, சத்தியமாய் கிணற்றைவிட பெரியதாய் கடல் இருக்க முடியாது என்றது. அது அதன் அறியாமை. அதுபோல தங்கள் மதம்தான் உலகம் என்று நினைப்பவர்களின் எண்ணங்களை இந்த மாநாடு தகர்த்தெறியும் என்றார்.

சர்வ சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவு கதையோடும், கருத்தோடும் இருந்ததால், அவர் மீண்டும் பேசமாட்டாரா? என்ற ஏக்கத்தை உருவாக்கியிருந்தார். அதனால்தான் சொற்பொழிவுகளில் தொய்வு ஏற்படுகின்றபோது கடைசியாக விவேகானந்தர் உரை நிகழ்த்தப் போகிறார் என்று தலைமைக் குழுவினர் அறிவிக்கும் அளவிற்கு பார்வையாளர்களை தன்வயப்படுத்தியிருந்தார்.

நிலத்தில் விதை விதைக்கின்றோம். விதை வளர்வதற்கு மண்ணும், நீரும், காற்றும் தேவைப்படுகிறது. ஆனால் இந்த விதை விதைக்கின்றபோதும், வளர்கின்றபோதும் தான் எடுத்துக்கொண்ட மண்ணாகவோ, நீராகவோ, இல்லை காற்றாகவோ வளர்வதில்லை. மாறாக அது செடியாக தான் வளர்கிறது. அதேபோல் தான் ஒவ்வொரு மனிதத்துக்குள்ளேயும் உள்ள வளர்ச்சியானது பல மதங்களிலிருந்து ஏற்படுகின்ற கோட்பாடுகளை ஒன்றிணைத்தாலும் கூட அது கடைசியில் மனிதத்தன்மை கொண்டு வளர்கின்ற போதுதான் அந்த மனிதன் சிறப்பு பெறுகிறான் என்ற வரிகளில் அறிவியல் ஆன்மிகத்தை விதைத்தார்.

ஒவ்வொரு ஆல விதைக்குள்ளேயும் ஒரு பெரிய ஆலமரம் உறங்கிக் கிடப்பதை போல ஒவ்வொரு மனிதனுக்குள்ளேயும் தெய்வீகத்தன்மை படிமமாய் படிந்து கிடக்கிறது. அத்தகையை தெய்வதன்மையை வெளிப்படுத்துவது தான் மதம். எனவே தெய்வங்களாகுங்கள்! பிறரை தெய்வங்களாக்குங்கள்! என்றார் சுவாமி விவேகானந்தர். மொத்தத்தில் மதத்தை வளர்ப்பதல்ல மனிதம்; மனிதத்தை வளர்ப்பது தான் மதம் என்று இந்த உலகத்திற்கு அறைக்கூவல் விடுத்ததுதான் சிகாகோ மாநாட்டில் விவேகானந்தரின் சிறப்பு. உலகளாவிய மனிதங்களை ஒன்றிணைக்கும் சமயத்தை உருவாக்குவதே அவரது கனவு. அந்தக் கனவினை நனவாக்க மனித சமுத்திரத்தை ஒன்றாக இணைப்போம்.
முனைவர் இரா.திருநாவுக்கரசு, ஐ.பி.எஸ்.,காவல் துணை ஆணையர், நுண்ணறிவுப் பிரிவு, சென்னை.

No comments:

Popular Posts