வீழ்வோம் என்று நினைத்தாயோ...!
சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (விளையாட்டு விமர்சகர்)
செ ன்னையில் பெய்ய வேண்டிய மழை சிட்னியில் பெய்து தொலைத்து விட்டது. இந்தியா ஆஸ்திரேலியாவின் மென்னியைப் பிடிக்க முயன்று கொண்டிருக்கையில் மழை ஆட்டத்தின் மென்னியையே பிடித்து விட்டது. அதனால் என்ன? அந்நிய மண்ணில் அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடரை வென்று சரித்திர சாதனை படைத்திருக்கிறது இளம் இந்திய அணி. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அவர்கள் மண்ணிலேயே அவர்களைத் தோற்கடித்து அஜித் வடேகர் தலைமையிலான அணி வெளிநாட்டில் இந்தியாவுக்கு முதல் வெற்றியை பதிவு செய்ததுதான் நினைவுக்கு வருகிறது. அந்தத் தொடருக்கு இன்னொரு மகிமையும் உண்டு. கவாஸ்கரை உலகுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியதும் அந்தத் தொடர்தான்.
உதை வாங்குவதற்கென்றே ஒரு அணி இருக்கிறது என்றால் அது இந்திய அணிதான் என்பதை துடைத்து தூர எறிந்து நம்மை தலை நிமிர்ந்து நடக்கச் செய்ததும் அந்தத் தொடர்தான். வலிமை மிக்க வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியாவா? டேவிட் கோலியாத் கதை போல் இல்லை என்று ஏகடியம் பேசியவர்கள் எல்லாம் வாயடைத்துப் போனார்கள்.
வாய்ஜாலம் பேசியவர்கள் எல்லாம் இன்னும் வாயைத் திறக்க முடியாமலே இருக்கிறார்கள் என்பது இந்தியாவுக்கு இன்னொரு “உலகக் கோப்பை” சாதனை என்றால் அது மிகையல்ல. ஆஸ்திரேலியா எவ்வளவு பெரிய ‘ஜக்கர்நாட்’ என்பது மலைப்புக்குரிய விஷயம். எதிர்படும் அணிகளையெல்லாம் துவம்சம் செய்வது அவர்களுக்கே உரிய ஒரு கலாசாரம் போல! வெற்றிக்காக எதையும் செய்வார்கள். “அக்ரோ” என்கிற பெயரில் எதிரணியின் கவனத்தை சிதறடிப்பதில் வல்லவர்கள். அத்தகைய ஒரு சாகசத்தின் பலனாகத்தான் அவர்களுடைய நட்சத்திர ஆட்டக்காரர்கள் ஸ்டீவன் சுமித்தும், வார்னரும் அணிக்கு வெளியே. இந்தியாவின் மகத்தான வெற்றிக்கு இவர்கள் இருவரும் இல்லாததும் ஒரு காரணம் என்பது பேதமை. ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சிக்குக் காரணம் நம்முடைய பலமா அல்லது அவர்களது பலவீனமா? எளிதில் பதில் கூற முடியாது. இப்போதைக்கு அது ஒரு தூங்கும் ராட்சசன். நம்ம ஊர் போலவே அங்கும் பிக் பாஷ் என்ற ஒன்றிருக்கிறது. அதன் கண்டுபிடிப்புகளான இளைஞர் பட்டாளம் உலகின் அத்தனை அணிகளுக்கும் ஒரு சவால்தான். இந்த விஷயத்தில் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் உள்ள ஒரு வித்தியாசம் ஆஸ்திரேலியா களமிறக்கிய இளம் வீரர்கள் எதிர்பார்த்த அளவு சோபிக்கவில்லை. ஆனால் இந்தியா களம் இறக்கிய அத்தனை இளம் வீரர்களும் சுடர் விட்டுப் பிரகாசித்தார்கள். டோனி இல்லாத குறை தெரியவே இல்லை. இந்தியாவில் பொதுவாக ஒன்றைச் சொல்வார்கள். ‘கிரிக்கெட்டில் உங்களுக்கு என்ன தெரியும் என்பது முக்கியமல்ல யாரைத் தெரியும் என்பது தான் முக்கியம்’ என்பார்கள். இப்போது நிலைமை மாறி இருக்கிறது அல்லது மாறி வருகிறது. வாசம் மட்டும் மீதமிருந்த பெருங்காய டப்பாக்களை தூக்கி விட்டு இளம் தலைமுறைக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது துணிச்சலான வரவேற்கத்தக்க ஒரு முடிவு. அந்த நல்வினையின் விளைவு நன்றாகவே தெரிகிறது. இன்றளவும் ஆஸ்திரேலியாதான் உலகக் கோப்பை வாகை சூடி. ஆனால் உலகத்தர வரிசையில் நாம் தான் “நம்பர் ஒன்”.
நாம் ஆலை இல்லாத ஊரின் இலுப்பைபூ சர்க்கரை அல்ல. நம்மைச் சுற்றி இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஏன் ஆப்கானிஸ்தானும் கூட என்னும் ஒரு ஆட்டத்தின் போக்கையே திசை திருப்பும் வல்லமை படைத்த அணிகளுக்கு மத்தியில் தான் நாம் அருகதைப்பட்ட ராஜா. சமீப காலம் வரை ஒரே நேரத்தில் மூன்று முதல் தர அணிகளை களமிறக்கும் வல்லமை பெற்ற நாடு ஆஸ்திரேலியா என்பார்கள். இப்போது அந்தக் கிரீடம் நம் சிரசுக்கு வந்து நாளாகி விட்டது. முன்பு மித வேகப்பந்து வீச்சாளர் டட்டு பாட்கர் முதல் ஓவரை வீசுவார். அடுத்த பந்தை வீச வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் இருக்க மாட்டார். சுழற்பந்து வீச்சாளர்களான வினோ மன்கட்டோ, சுபாஷ் குப்தேயோ, நட்கர்னியோ அல்லது வேறு யாருமே தான் வருவார்கள். ஆனால் இப்போது அப்படியா? பும்ரா, புவனேஷ்வர் குமார் இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், முகமது ஷமி இன்னும் எத்தனையோ பேர் அணிவகுத்து நிற்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர்கள் என்று அஸ்வின், குல்தீப், சாஹல் இப்படி எத்தனையோ பேர். ஆல்ரவுண்டர்கள் என்று சொல்லத்தக்க பாண்ட்யா சகோதரர்கள், ஜடேஜா இன்னும் பலர். தொடக்க ஆட்டக்காரர்கள் என்று தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, ரஹானே தேவைப்பட்டால் விராட் கோலி. மத்திய நிறையில் கோலி, புஜாரா, அம்பத்தி ராயுடு, மயங்க் அகர்வால் என்று இந்த இடத்துக்குத்தான் கடும் போட்டி கூட்டமும் அதிகம். விக்கெட் கீப்பர்கள் வரிசையில் டோனி, தினேஷ் கார்த்திக் ரிஷாப் பான்ட், பார்த்தீவ் பட்டேல் என்று ஒருவருக்கொருவர் சற்றும் சளைக்காத திறமைசாலிகள். யாரை விடுவது யாரைத் தொடுவது மில்லியன் டாலர் கேள்வி. இந்தத் தொடரில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இரண்டு சிறப்பு அம்சங்கள்:-
விராட் கோலி சச்சினையும் கடந்து எல்லா விதமான போட்டிகளிலும் சேர்த்து 19,000 ரன்கள் எடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியத் தொடரில் மூன்று சதங்களுடன் 500-க்கும் அதிகமான ரன்களைப் பெற்று “ஆட்ட நாயகன்” மற்றும் “தொடர் நாயகன்” ஆகிய விருதுகளை ராகுல் டிராவிடுக்கு பிறகு எழுந்துள்ள இன்னொரு புதிய சுவர் புஜாரா பெற்றிருப்பது ஓர் அபூர்வ நிகழ்வு. மே மாதம் உலகக்கோப்பை வருகிறது. வீரர்கள் பட்டை தீட்டிக்கொள்ள ஐ.பி.எல். போட்டி ஆட்டங்கள் உதவக்கூடும்.
கோலியை கோப்பைலீ என்று சொல்லலாம். அவர்தான் உலக கோப்பையையும் இந்தியாவுக்கு சுமந்து வருவார் என்று நம்புவோம். எண்ணம் ஈடேற வாழ்த்துவோம்.
Thursday, 10 January 2019
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
இறுதி வெற்றி நேர்மைக்கே...! பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி இன்று (டிசம்பர் 9-ந்தேதி) சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம். ‘இன்னைக்கி நான் ஊருக...
No comments:
Post a Comment