Thursday, 10 January 2019

நேர்மையின் இலக்கணம் லால்பகதூர் சாஸ்திரி

நேர்மையின் இலக்கணம் லால்பகதூர் சாஸ்திரி நா ளை (ஜனவர் 11-ந் தேதி லால்பகதூர் சாஸ்திரி நினைவு நாள்) இந்திய பிரதமர், ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு அடுத்த பிரதமர் யார்? என்று ஒரு கேள்வி எழுந்தது. மொரார்ஜி தேசாய் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் காமராஜர் 15 மாநில முதல்-அமைச்சர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாக அழைத்து அனைவரின் கருத்துக்களையும் கேட்டார். பெரும்பான்மையோர் விருப்பப்படி “சாஸ்திரி”யை பிரதமராக, காமராஜர் அறிவித்தார். இடைக்கால பிரதமர் “நந்தா” முன்மொழிய, மொரார்ஜி தேசாய் வழிமொழிய 2-வது இந்தியப் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏழை குடும்பத்தில் பிறந்து, மிகவும் கஷ்டப்பட்டு படித்து விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்ற ஒரு நேர்மையான மாமனிதரை இந்தியப்பிரதமராக, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதை கண்டு உலகமே வியந்து பாராட்டியது. 1965-ல் காஷ்மீர் பிரச்சினையை காரணம் காட்டி, பாகிஸ்தான், இந்தியாவின் மீது திடீரென்று போர் தொடுத்தது. இந்தியா, சீனாவின் பிரச்சினைகளையும் சமாளிக்க வேண்டியது இருந்தது. “சீனராயினும், வேறு எந்த ஈனராயினும் எதிர்ப்போம்” என்ற சாஸ்திரியின் வார்த்தை உலக நாடுகளையே அதிரவைத்தது. 1965 ஆகஸ்டில் காஷ்மீரில் உள்ள பாரமுல்லா பகுதியில் 3 ஆயிரம் பாகிஸ்தான் படையினர் ஆயுதம் தாங்கி “கொரில்லா போர்” தொடங்கினர். இந்திய ராணுவப்படை ஒரே நேரத்தில் மும்முனை தாக்குதலை நடத்தியது. அயூப்கான் இந்தியாவிற்கு எதிராக செப்டம்பர் 5-ந் தேதி போர் பிரகடனம் செய்தார். இந்தியா-பாகிஸ்தான் போர் முழுவீச்சில் நடைபெற்றது. சீனாவின் அச்சுறுத்தலுக்கு அஞ்சாது, இந்திய வீரர்களும், விமானப்படையினரும் பாகிஸ்தான் ராணுவத் தளங்களை அழித்தனர். பாகிஸ்தான் வீரர்களை புறமுதுகிட்டு ஓட விரட்டி அடித்தனர். இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. செப்டம்பர் 21-ந் தேதி ஐ.நா.சபை கூடி, இருதரப்பும் சமாதானமாக செல்ல வேண்டும் என்று கூறியது. செப்டம்பர் 27-ல் 18 நாட்களுக்குப்பின் போர் நிறுத்தப்பட்டது. இந்தியா வெற்றி பெற்றது. சாஸ்திரி சமாதானத்தையே விரும்பினார். “ஜெய் ஜாவான்” என முழக்கமிட்டார். பாகிஸ்தான்-இந்தியா பிரச்சினையை தீர்த்து வைக்க ரஷியா விரும்பியது. இருவரையும் அழைத்தது. அழைப்பை ஏற்று 1966 ஜனவரி 4-ந் தேதி அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ரஷியா சென்றார். அதேபோல் அயூப்கானும் சென்றார். “தாஷ்கண்ட்” நகரில் அரசு மாளிகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருவரும் சுமார் 40 நிமிடங்கள் பேசினர். முதல் சுற்று பேச்சுவார்த்தை முடிவடைந்தது. அதன்பின்னர் ரஷிய பிரதமர் “கோசிஜின்” அயூப்கானிடம் 3 மணி நேரமும், சாஸ்திரியிடம் 2 மணி நேரமும் தனித்தனியாக பேசினார். சமாதானத்திற்கு வேண்டிய சில ஆலோசனைகளை வழங்கினார். இருவரும் சில விஷயங்களை ஒத்துக்கொண்டனர். சீனாவின் மிரட்டலால் பேச்சுவார்த்தை தடைபட்டது. உடன்படிக்கை இழுபறியில் இருந்தது. 10.1.1966-ல் தாஷ்கண்டில் இந்தியா - பாகிஸ்தான் தலைவர்களுக்குள் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது. இருவரும் கையெழுத்திட்டனர். அன்று இரவு ரஷிய பிரதமர் அளித்த விருந்தில் இரு நாட்டு தலைவர்களும் கலந்து கொண்டனர். விருந்துக்குப்பின் சாஸ்திரி ஓய்வெடுக்க தனது அறைக்குச் சென்றார். திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. டாக்டர்களின் முயற்சி பலன் இன்றி சாஸ்திரி மரணம் அடைந்தார். இந்தியப் பிரதமர் சாஸ்திரியின் உடலை, ரஷிய பிரதமர் கோசிஜினும், பாகிஸ்தான் அதிபர் அயூப்கானும் தோள்களில் சுமந்து வந்து விமானத்தில் ஏற்றி இறுதி மரியாதை செலுத்தினர். நாடே சோகத்தில் மூழ்கியது. வழி நெடுக சுமார் 10 லட்சம் ரஷிய மக்கள் இந்திய தலைவர் சாஸ்திரிக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதிச்சடங்கில் மவுண்ட் பேட்டன் பிரபு, பாகிஸ்தான் மந்திரி பரூக் மற்றும் பல நாட்டுத் தலைவர்களும் கலந்துகொண்டனர். இறுதி ஊர்வலத்தில் சுமார் 15 லட்சம் மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். யமுனை நதிக்கரையில், நேரு சமாதிக்கு அருகே சாஸ்திரியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்திய மக்கள் ஒரு நேர்மையான, ஒழுக்கசீலனை இழந்துவிட்டோமே என்று எண்ணி கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்தினர். இவரது வாழ்க்கை அனைவருக்கும் ஒரு பாடம் ஆகும். இவரது எளிமை, நேர்மை, அஞ்சாமை, மக்களின் துயரை துடைக்க உடனடி நடவடிக்கை, மக்கள் நலனுக்காகவே தன்னை அர்ப்பணித்த ஒரு தியாகசீலர். பிரதமர்களுக்கு எல்லாம் இவர் ஓர் வழிகாட்டி, எடுத்துக்காட்டாக விளங்கியவர். அவர் நாட்டுக்கு ஆற்றிய அரும்பணியை போற்றி வணங்குவோம்.

No comments:

Popular Posts