விவசாயக் கடன் தள்ளுபடி விடையல்ல! |
By அஜித் ரானடே |
அண்மையில் லட்சக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து தலைநகர் தில்லியில் ஊர்வலம் நடத்திய அதே நேரத்தில், மகாராஷ்டிர மாநிலம் ஷீரடியில் விவசாயிகள் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அது முன்னாள் எம்.பி. சரத் ஜோஷி நிறுவிய "சேத்காரி சங்கடனா' என்ற விவசாயிகள் சங்கத்தின்ஆண்டுக் கூட்டம்.
ஜோஷியின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மூன்று நாள்களுக்கு அந்தக் கூட்டம் நடைபெற்றது. துரதிர்ஷ்டவசமாக மக்களின் நினைவுகளில் இருந்து ஜோஷியின் பெயர் மறைந்துவிட்டாலும், 30 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயிகளின் உற்பத்திச் செலவுக்கும், அவர்களின் விளைபொருள்களுக்குக் கிடைக்கும் விலைக்கும் இடையே உள்ள வேறுபாடுதான் விவசாயிகளை வெகுவாகப் பாதிக்கிறது என்பதை எடுத்துக் கூறியவர் அவர்.
இந்தியாவில் விவசாயத் துறைக்குத்தான் அதிக அளவு மானியங்கள் வழங்கப்படுகின்றன என்ற தவறான கூற்றை உடைத்தவரும் அவர்தான். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது விவசாயத் துறை மறைமுகமாக வரிகளுக்கு உள்ளாகிறதே தவிர, மானியங்கள் கிடைக்கவில்லை என்பதையும் எடுத்துக் கூறியவர் ஜோஷி. உலக வர்த்தக அமைப்பும் (டபிள்யூடிஓ) இந்த உண்மையை ஏற்றுக் கொண்டது.
ஆனால், கடந்த பல ஆண்டுகளில் இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு ஓரளவுக்கு விலை கிடைக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. எனினும், பொருளாதார ரீதியாக விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் நிலையில் இருந்து வெகு தொலைவிலேயே இருக்கிறோம்.
விவசாய விளைபொருள்கள் 22-க்கு மட்டுமே அரசு வழங்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை, அதன் உற்பத்திச் செலவில் இருந்து 50 சதவீதம் அதிகமாக உள்ளது. மற்ற பல விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது அவற்றின் உற்பத்திச் செலவைவிட மிகக் குறைவாகவே உள்ளது. மேலும், நகரத்தில் உள்ளவர்கள் விளைபொருள்களுக்குக் கொடுக்கும் விலைக்கும், விவசாயிகள் அதற்குப் பெறும் விலைக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது. விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களை அவர்களுக்கு உரிய லாபம் கிடைக்கும் வகையில் முறையாகச் சந்தைப்படுத்துவதில் உள்ள பிரச்னையை இது காட்டுகிறது.
பல்வேறு இடைத்தரகர்கள் இருப்பதும், விவசாயிகளிடமிருந்து குறிப்பிட்ட பொருள்களை வாங்கி விற்க ஒரு சிலரே சந்தையில் இருப்பதும் மிகப் பெரிய பிரச்னைகளாக உள்ளன.
பொருள் விளைவிப்பவருக்கும், அதனை வாங்கிப் பயன்படுத்துபவருக்கும் இடையே உள்ள பிரச்னைகளைத் தீர்க்க அமைப்பு ரீதியில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த மாதம் தேசிய அளவிலான இரு விவசாயிகள் சங்கங்கள் தங்கள் பிரச்னைகளைத் தீர்ப்பது குறித்து இரு வேறுபட்ட முடிவுகளை எடுத்தன.
ஒரு தரப்பினர் தங்களுக்கு அதிக மானியம் வழங்க வேண்டும்; கடன் தள்ளுபடி வேண்டும்; விவசாயிகள் பிரச்னையில் அரசு உடனுக்குடன் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும் என்று கூறினர். ஷீரடியில் நடைபெற்ற விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "அரசின் தலையீடு குறைவாக இருக்க வேண்டும்; விவசாயிகள் உற்பத்தி, நிலம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் முழுமையான சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டது.
விவசாயிகள் பிரச்னையில் இருக்கும்போது மற்ற சீர்திருத்தங்கள் எல்லாம் செயலற்றுப் போகின்றன. கடன் தள்ளுபடி என்பது மட்டுமே முன்னிறுத்தப்படுகிறது. இது எதிர்மறையான சூழ்நிலையையே ஏற்படுத்தும்.
கடினமாக உழைத்து கடனைத் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு இது தண்டனையாக அமைகிறது. மேலும், அரசின் கருவூலத்தையும் காலியாக்குகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற கடன் தள்ளுபடி தொடரும் என்ற மனநிலையை ஏற்படுத்துகிறது.
இவை அனைத்தையும்விட முக்கியமாக அரசு அளிக்கும் கடன் தள்ளுபடியால் பாதி அளவு விவசாயிகள்கூட பயனடைவதில்லை. ஏனெனில், பெரும்பாலான சிறு விவசாயிகள் தனிநபர்களிடமே அதிகம் கடன் வாங்கி விவசாயம் செய்கின்றனர். மேலும் பல விவசாயிகள் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். இவை அனைத்தையும் அலசிப் பார்க்கும்போது விவசாயக் கடன் தள்ளுபடி என்பது பிரச்னைக்குத் தீர்வாகாது என்பது தெளிவாகிறது.
உண்மையில் விவசாயிகளின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்றால் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களும், பொருளாதார ரீதியான சுதந்திரமும் தேவை. விவசாயத் துறை உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக முதலீடுகளைச் செய்ய வேண்டும்.
தேசிய அளவில் விவசாயத் துறையை ஆராயும்போது, நாட்டின் வருமானத்தில் 14 சதவீதம் விவசாயத்திலிருந்து கிடைக்கிறது. ஆனால், மக்கள்தொகையில் சுமார் 50 சதவீதம் பேர் வேளாண்மை மற்றும் அது சார்ந்த பணிகளில் உள்ளனர்.
இதில் நேரடியாக விவசாயத்தில் ஈடுபடாமல் அது சார்ந்த தொழில்களில் இருப்பவர்கள் விவசாயிகளின் வருமானத்தைவிட மூன்று மடங்குக்கும் அதிகமாகச் சம்பாதிக்கின்றனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய வருமானம் கிடைக்காததற்கு அந்தத் துறைக்கு வெளியே உள்ள பிரச்னைகள் காரணம் என்பது தெளிவாகிறது.
தொழில் துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் விவசாயத்தில் மிகுதியாக உள்ளவர்களை வெளியே எடுக்கலாம். இதற்காக தொழில் தொடங்கும் நடைமுறையை எளிதாக்குவது, தொழில் நிறுவனங்களை நடத்துவதையும், அதனை மூடுவதையும் சிக்கலற்றதாக்குவது, அதிகாரிகளின் தலையீட்டைக் குறைப்பது, நகர்ப்புறத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது போன்றவற்றைச் செய்யலாம்.
மேலும், கிராமத்தில் இருந்து நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து வருபவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தித் தரலாம் என்று பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.
இவை ஒருபுறம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போதே, வேளாண் துறையில் மிக விரைவில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. விவசாயிகளை பல்வேறு நடைமுறைச் சிக்கல்களில் இருந்து விடுவிக்க வேண்டும். இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் எப்போதுமே அனைத்துப் பிரச்னைகளுக்கும் ஒரே நடவடிக்கை மூலம் தீர்வுகண்டுவிட முடியாது.
விளைபொருள்களின் விலையை நிர்ணயிப்பதில் உள்ள கட்டுப்பாடுகளும், குறிப்பிட்ட நபரிடம்தான் விவசாயிகள் பொருள்களை விற்பனை செய்ய முடியும் என்ற நிலையும் மாற வேண்டும். வேளாண் துறையில் "ஊக வணிகம்' தடுக்கப்பட வேண்டும். விவசாயிகளிடம் முன்கூட்டியே பணத்தைக் கொடுத்து விளைபொருள்களை குறைந்த விலைக்கு எடுத்துச் செல்பவர்கள் அகற்றப்பட வேண்டும். உள்ளூர் நிர்வாகத்தில் இருந்து மத்திய-மாநில அரசுகள் வரை அனைத்துத் தரப்பினரும் விவசாயத் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகள் தங்கள் நிலத்தை யாருக்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம் என்பதையோ விவசாயப் பொருள்களை கட்டுப்பாடு இல்லாமல் ஏற்றுமதி செய்து கொள்ளலாம் என்பதையோ நம்மால் ஏற்க முடியவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளில் நமது நாட்டில் கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு, பால் பண்ணை முதலிய தொழில்கள் வேகமாக அதிகரித்துள்ளன. மாட்டிறைச்சி தொடர்பான அரசியல் பிரச்னையால் இப்போது அதில் சிறிய தொய்வு ஏற்பட்டுள்ளது. எனினும், எருமை இறைச்சி ஏற்றுமதியை இந்தியா அதிகமாக மேற்கொள்கிறது.
விவசாயக் கூட்டுறவு சங்கங்களும், தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்படுவது என்பது மிகவும் ஆக்கபூர்வமான விஷயம். இதன் மூலம் விவசாய உற்பத்தி ஒருங்கிணைந்த முறையில் நடைபெறுகிறது. விளை பொருள்கள் ஒருங்கிணைந்த முறையில் பெரிய கொள்முதல் அமைப்புகளிடம் விற்பனை செய்யப்படுகிறது. அவை தேவைப்படும் இடங்களுக்கு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படுகிறது.
இதனால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதுடன், சந்தையில் விலை ஏற்றத்தாழ்வுகள் தவிர்க்கப்படுகின்றன. இறுதி நுகர்வோர் நியாயமான விலையில் பொருள்களைப் பெற முடியும். விளை பொருள்கள் அழுகி வீணாவது போன்ற சங்கடமான இழப்புகள் தவிர்க்கப்படுகின்றன.
விவசாயிகள் பிரதான பங்குதாரர்களாக இருக்கும் இந்த நிறுவனங்கள், தொழில் முறை மேலாளர்களால் சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்றன. விவசாயத் துறையில் உள்ள அனைத்து நல்ல விஷயங்களும், நிர்வாகத் திறனும் ஒன்றிணையும்போது கைகோக்கும் இரு தரப்புக்குமே அதிக நன்மைகள் கிடைக்கின்றன.
10 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் இணைந்தாலே இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த முடியும். விவசாயத் துறையில் ஆர்வமுடைய தனிநபர்கள் இதுபோன்ற அமைப்புகளில் முதலீடு செய்ய முடியும் என்பதால், விவசாயத்துக்குத் தேவையான நிதி கடனாக இல்லாமல் முதலீடாக வந்தடைகிறது. இந்திய நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் இதுபோன்ற அமைப்புகளை பதிவு செய்து கொள்ள முடியும். கிராம அளவில் சிறியதாகவும், மாநில அளவில் பெரியதாகவும் இந்த நிறுவனங்களை நடத்தலாம். விவசாயப் பொருள்களின் உற்பத்தி முதல் விற்பனை வரை அனைத்தையும் இந்த நிறுவனங்களே மேற்கொள்ள முடியும். விவசாயத்துக்குத் தேவையான விதை, உரம், நவீன உபகரணங்கள், சந்தைத் தொடர்புகள், புதிய பயிர்களுக்கான பயிற்சி, தொழில்நுட்ப ஆலோசனை என அனைத்தும் இந்த நிறுவனங்களில் உள்ள விவசாயிகளுக்கு எளிதாகக் கிடைக்கும்.
ஆனால், இவ்வாறு செயல்படும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவதில் உள்ள பிரச்னை, வரிகள் போன்றவை பின்னடைவை ஏற்படுத்துகின்றன. விவசாயக் கூட்டுறவு சங்கங்களும், தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்படுவதை அரசு ஊக்குவிக்க வேண்டும். அவற்றுக்கு வரி விலக்கும் அளிக்க வேண்டும்.
வளர்ந்த பல நாடுகளில் விவசாயிகள் கெüரவமான வாழ்க்கை வாழ்ந்து வருவதற்கு இதுபோன்ற சீர்திருத்தங்களே காரணம்.
இதனால், விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கிறது. இந்தியாவில் கூட பால் உற்பத்தி மற்றும் அதனைச் சந்தைப்படுத்தியதில் "அமுல்' நிறுவனம் ஏற்படுத்திய புரட்சி அசாதாரணமானது. இதனால் கால்நடை வளர்ப்போர் முழுமையாகப் பயனடைந்தனர். இதுபோன்ற வெற்றிகரமான முன்னுதாரணங்களில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அவசியம்.
கட்டுரையாளர்:
பொருளாதார நிபுணர்,
கல்வியாளர் - தக்ஷசீலம் அமைப்பு.
Wednesday, 2 January 2019
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment