வீணாகும் மகளிர் அறிவுச் செல்வம்!

வீணாகும் மகளிர் அறிவுச் செல்வம்! | By அ. அரவிந்தன் | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்! மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் உயர் கல்வி பெற்று ஆட்சித் துறை, விண்வெளி, மருத்துவம், சட்டம், தொழில், காவல் துறை, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் கோலோச்சுவதைக் காண முடிகிறது. ஆண்களுக்கு நிகராக பலம் பொருந்திய பெண்கள் சர்வதேச அளவில் குத்துச் சண்டை, ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட வீர விளையாட்டுகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்து நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்றனர். ஒரு நாட்டில் பெண்களின் மதிப்பைக் கண்டு அந்த நாட்டின் நிலையைக் கணித்து விடலாம் என ஜவாஹர்லால் நேரு கூறினார். அதன்படி, நமது நாடாளுமன்றத்தின் அவைத் தலைவர், பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சகம், முதல்வர் இருக்கை முதலானவற்றில் பெண்கள் வீற்றிருப்பது பெருமை கொள்ளக்கூடியது. பெண்களின் கல்வியறிவு விகிதம் அதிகரித்துள்ளபோதிலும், அவர்களின் வளத்தை நாம் இன்னமும் முழுமையாக அறுவடை செய்யவில்லை என்பதை சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான கவுன்சில் அண்மையில் மேற்கொண்ட ஆய்வு தெளிவுபடுத்துகிறது. காரணம், பட்டப்படிப்பு படித்த பெண்கள் திருமணம் என்னும் பந்தத்துக்குள் அடியெடுத்து வைத்ததும், பணிக்குச் செல்வதை நிறுத்தி விடுகின்றனர். உதாரணமாக, 30 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதையுடைய மகளிர், பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றாலும், பணிக்குச் செல்வதை விரும்புவதில்லை. இது கடந்த 2011-12-ஆம் ஆண்டில் 62.7 சதவீதமாக இருந்தது. இதுவே 3 ஆண்டுகளில், அதாவது 2015-16-ஆம் ஆண்டில் மேலும் அதிகரித்து, 65.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அந்தப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தவிர, 2011-12-ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 0.4 சதவீதத்தை உள்ளடக்கிய விவாகரத்து பெற்ற அல்லது கணவனைப் பிரிந்து வாழும் பெண்களில், 60.3 சதவீதத்தினர் பணிபுரிபவர்களாகத் திகழ்ந்தனர். தற்போது திருமணமான பெண்களில் 32.5 சதவீதத்தினர் மட்டுமே, அதாவது 50.5 சதவீதத்தினர் மட்டுமே பணிபுரிவது ஆய்வில் தெரியவந்துள்ளது. உயர் கல்வி விகிதத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், அதனை ஆக்கபூர்வமாக நாம் செயல்படுத்தவில்லை. கடந்த 2013-14-ஆம் ஆண்டில் 67.6 சதவீதமாக இருந்த கல்வியறிவற்ற, பணிக்குச் செல்லாத 30 வயதுக்கும் மேற்பட்ட பெண்களின் விகிதம், 2015-16-இல் 70.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே போன்று, ஆரம்பக் கல்வியைப் பெற்று, பணிபுரியாத பெண்களின் விகிதம் 72.9 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்ந்தது. இதே காலகட்டத்தில் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பில் தேர்ச்சி பெற்ற பெண்களின் விகிதம் 77 சதவீதமாகவும், பட்டப் படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு முடித்த பெண்களின் வீதம் 62. 7 சதவீதமாகவும் உள்ளது. கல்வி நிறுவனங்களில் காணப்படும் பாலின சமநிலை, பெண் கல்வியை ஊக்குவிக்கிறது. இடைநிலைக் கல்வி மட்டுமன்றி, உயர் கல்வி நிறுவனங்களிலும் மாணவ- மாணவியரின் எண்ணிக்கை சமமாகவே இருக்கிறது. திருமணத்தைப் பொருத்தவரை கல்வி முக்கியத்துவம் வகிப்பதால், பெரும்பாலான பெற்றோர் தங்களது மகளுக்கு நல்ல வரன் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலேயே, சமூக நெறிகளுக்கு உட்பட்டு அவர்கள் உயர் கல்வி பெற சம்மதிப்பதாகவும், படிப்பை முடித்ததும் வேலைக்கு அனுப்பாமல், உடனடியாக திருமணத்துக்கு ஏற்பாடு செய்வதாகவும் அந்த ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. இதனால், மனிதவளம் வீணாவது மட்டுமன்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் தேக்கமடைகிறது. நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதிலும், பெண்களுக்கான அங்கீகாரத்தை இன்னமும் நாம் வழங்கவில்லை என்பதையே மேற்கண்ட ஆய்வு தெரிவிக்கிறது. வளர்ந்த நாடுகளின் பட்டியலை எடுத்துக் கொண்டால், அதில் பெண் தொழில்முனைவோரின் பங்களிப்பு கணிசமான அளவில் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், நம் நாட்டைப் பொருத்தவரை இல்லறத்தின் கலங்கரைவிளக்கமாக மிளிரக்கூடிய பெண்கள், உயர் கல்வி பெற்ற போதிலும் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டிய சூழலே பெரும்பாலும் நிலவுகிறது. ஆகையால், மாற்றத்துக்கான சூழலை பொதுவெளியில் நாடாமல், நமது வீட்டிலிருந்தே தொடங்க வேண்டும். பெண்களுக்கு சம உரிமை, ஆரோக்கியமான சூழல், முடிவு எடுத்தலில் பாரபட்சமின்மை, பொருளாதார, நிதி சுதந்திரத்தை நாம்தான் உறுதிப்படுத்த வேண்டும். எனவே, வாழ்வின் இன்ப - துன்பங்களைச் சமமாகப் பாவிக்கும் வல்லமை கொண்ட பெண்கள், தாம் கற்ற விஷயங்களை நான்கு பேருக்குப் பயிற்றுவிக்கவாவது இல்லறம் என்னும் சிறையிருப்பைக் கடந்து ஆக்கபூர்வமான வழியில் நடைபோட்டால் சமுதாயத்துக்கு நலம் பயக்கும். தேசத்தின் வல்லரசு என்னும் இலக்கு, கைக்கு எட்டும் தொலைவில் நெருங்கி வரும்.

Comments