குளிர்காலமும், மூடுபனியும்...!
எஸ்.ஆர்.ரமணன், முன்னாள் வானிலை மைய இயக்குனர், சென்னை
த மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு மேல் பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது. கடும் பனிப்பொழிவுக்கான காரணம் என்ன என்பது குறித்து வானிலை ஆராய்ச்சி ரீதியாக பார்ப்போமே:-
பருவகால மாற்றத்தின் காரணமாக கோடை காலம் மற்றும் குளிர்காலம் என மாறி, மாறி வருகிறது. பூமியானது சூரியனை வலம் வரும்போது, 23 டிகிரி கோணத்தில் சாய்ந்திருப்பதால்தான் இந்த மாற்றம் ஏற்படுகிறது. பூமத்திய ரேகைக்கு வடபகுதியில் இருப்பது வடக்கு அரைகோளம். தெற்கு பகுதியில் இருப்பது தெற்கு அரைகோளம். சூரியனின் நேர் கதிர்கள் தெற்கு அரைகோளத்தில் விழும்போது குளிர்காலம் வருகிறது. இந்தியாவில் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் குளிர்காலம் ஆகும். இந்த காலகட்டத்தில் சூரியனின் சாய் கிரணங்கள் நமது நிலப்பகுதியின் மீது விழும். அதன் காரணமாக நிலப்பகுதி அதிகமாக வெப்பம் அடைவதில்லை. இதனால் இந்த மாதங்களை குளிர்கால மாதங்கள் என்கிறோம்.
இம்மாதங்களில் ஊருக்கு ஊர் குளிர் மாறுபடும். உதாரணத்திற்கு சென்னை, வேலூர், கொடைக்கானல் ஆகிய நகரங்களை எடுத்துக் கொள்வோம். சென்னை கடலோர நகரம். வேலூர் உள்பகுதி. கொடைக்கானல் மலைப்பகுதி. சென்னை மற்றும் வேலூரை ஒப்பிட்டு பார்க்கும்போது, சென்னை நகரம் கோடைகாலத்தில் வேலூர் அளவிற்கு வெப்பமாக இருக்காது. அதே போன்று குளிர்காலத்தில் வேலூரை காட்டிலும் குளிராக இருக்காது. இதற்கு காரணம் என்ன?
இரண்டு பாத்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒன்று நீர் நிறைந்த பாத்திரமாக இருக்கட்டும். மற்றொன்று காலியாக இருக்கட்டும். இரண்டையும் மொட்டை மாடியில் வைத்து விடுங்கள். நீர் நிறைந்த பாத்திரத்தை மதிய வேளையில் தொ்ட்டுப் பார்த்தால் அதிக வெப்பமாக இருக்காது. ஆனால் காலியான பாத்திரம் மிகவும் சுடும். இரவு வேளையில் காலி பாத்திரம் மிகவும் குளிராக இருக்கும். நீர் நிரம்பிய பாத்திரம் அந்த அளவு குளிராக இருக்காது. நீரானது மிதமான வெப்ப நிலையை ஏற்படுத்துவதே இதற்கு காரணம்.
சென்னை நகரம் நீர் நிரம்பிய பாத்திரத்துக்கு இணையாகவும், வேலூர் நகரை காலியான பாத்திரத்துக்கு இணையாகவும் எடுத்துக் கொள்ளவேண்டும்.
2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ந்தேதி சென்னையில் வெப்ப அளவு மிகவும் குறைந்த அளவாக 19 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது. ஆனால் வேலூரில் ஜனவரி 19, 20 ஆகிய தேதிகளில் 15.3 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருந்தது.
சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை எப்போது இருக்கும்? பொதுவாக காற்றின் திசை என்பது வங்க கடலில் இருந்து வீசும். சில நாட்களில் குளிர்ந்த நில பகுதியில் இருந்து அதாவது வடக்கில் இருந்து வீசும் நாளில் குறைவாக இருக்கும். அந்த நாட்களில் தான் 18 டிகிரி செல்சியஸ் போன்ற அளவில் பதிவு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் உள்ள தரவுகளில் மிகவும் குறைந்த அளவு என்பது பதினான்குக்கும் கீழ் (13.9 டிகிரி செல்சியஸ்) 1905-ம் ஆண்டு பதிவாகி இருந்தது. கண்டிப்பாக அந்த அளவிற்கு செல்ல இனி வாய்ப்புகள் மிகவும் குறைவு. இதற்கு நகரமயமாதல் மற்றும் உலகளாவிய வெப்பமயமாதல் தான் காரணம்.
மலைப்பகுதியில் வெப்பம் குறைந்த நிலையில் இருப்பதற்கு காரணம் என்ன? சூரியனிடம் இருந்து வரும் நேர் கிரணங்கள் காரணமாக பூமி வெப்பம் அடைவது இல்லை. அதை பூமி கிரகித்து கொண்டு வெளிவிடும் நெட்டலை காரணமாக பூமி வெப்பம் அடைகிறது. எனவே பூமியின் நிலப்பரப்புதான் வெப்பத்தை வெளிவிடும் அடுப்பு. இதில் இருந்து மிக உயரத்தில் இருப்பதன் காரணமாக மலைபிரதேசங்களில் வெப்பம் குறைந்த நிலையில் உள்ளன. மேலும் அங்கு வளிபகுதி (காற்று மண்டலம்) யின் அடர்த்தி குறைவாக இருப்பதால் கதிரவனின் சிற்றலை கதிர்கள் அதிகமாக கிரகிக்கப்படுவதில்லை. இதுவும் அங்கு வெப்பம் குறைவாக இருப்பதற்கு முக்கியமான காரணமாகும். இதனால் கோடை காலங்களில் மக்கள் மலைபிரதேசங்களை நோக்கி படையெடுக்கின்றனர்.
குறைந்தபட்ச வெப்ப நிலை எப்போது பதிவாகிறது? பொதுவாக சூரியன் உதயமான பிறகு வெப்பம் அடைவதையும் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு குளிர்வு அடைவதையும் பார்க்கிறோம். உயர்நிலை வெப்பநிலை என்பது மதியம் 2.30 மணியளவில் இருக்கும்.
குறைந்தபட்சம் என்பது காலை சூரியன் உதித்த பிறகு இருக்கும். பூமியானது நீண்ட அலைவரிசை கதிர்களை வெளியிடும்போது மேக மூட்டத்துடன் இருந்தால் இந்த கதிர்கள் அண்ட வெளிக்கு செல்வது தடுக்கப்படும். அப்போது இரவு குளிரான இரவாக இருக்காது. தெளிந்த வானம் இருந்தால் பூமி குளிர் நிலையும், பூமி குளிர்வடைந்தால் நாம் இருக்கும் வளிப்பகுதி அந்த அளவிற்கு குளிர்வடையாது.
வளிப்பகுதியின் வெப்பத்தை பதிவு செய்யும் வெப்பமானி நான்கு அடி உயரத்தில் உள்ளது. இந்த வளிப்பகுதி பூமியின் அளவுக்கு எவ்வாறு குளிர்வடையும்? கதிரவன் உதித்த பிறகு அதனுடைய கிரணங்கள் பூமியின் மீது பட்டு கொந்தளிப்பு காரணமாக தரை பகுதியில் உள்ள குளிர்கால வளிப்பகுதியையும் சென்று அடைகிறது. ஆகவே, குறைந்தபட்ச வெப்பநிலை என்பது சூரியன் காலையில் உதித்தபிறகே பதிவு செய்யப்படுகிறது.
மூடு பனி என்பது என்ன? ஒவ்வொரு வெப்ப நிலைக்கும் இந்த அளவுக்குதான் நீராவி இருக்கவேண்டும் என்ற கணக்கு உண்டு. வெப்பம் குறையும்போது உபரியாக உள்ள நீராவியானது நீர்த்துளிகளாக மாறும். இதன் காரணமாக குளிர் காலங்களில் இலைகளில் நீர் துளிகளை நாம் காணலாம். இதே நீர் துளிகள் வளிமண்டலத்தில் இருக்கும்போது தோற்ற தெளிவு குறையும் இந்த பார்வை தூரமானது ஒரு கிலோ மீட்டருக்கும் குறைவாக இருக்கும் நிலையே மூடுபனி எனப்படும்.
மூடுபனி பார்வைக்கு ஒரு கி.மீட்டர் தூரத்துக்கு மேல் இருந்தால் அதை மென் மூடு பனி என்பார்கள். அப்போது ஒப்பு ஈரப்பதம் 75 சதவீதத்திற்கு மேலாகவும் இருக்கும். மூடுபனி காலங்களில் 90 சதவீதத்துக்கு மேலாகவும் இருக்கும். மூடுபனி என்பது தரைப்பகுதியில் உருவாகும் மேகம்தான். வெப்பம் குறையும்போது உபரியாக உள்ள நீராவியானது நீர்த்துளிகளாக மாறுவது என்பது மேகம் தரையில் தோன்றுவதுதான். மலைப்பகுதிகளில் ஈரமிகுந்த காற்றானது மலை சரிவு பகுதிகளில் ஏறி மலையின் முகப்பிற்கு வரும்போது மூடுபனி உருவாகும். இதை மலை மூடுபனி என்பார்கள். மலையின் மேல் பகுதிக்கு செல்லும் ஈரம் மிகுந்த வளிப்பகுதியானது உட்சக்தியை பயன்படுத்தி மேலே செல்வதன் காரணத்தினால் வெப்பம் குறைகிறது. இதன் காரணமாக நீராவியானது மலையில் மூடுபனியாக மாறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment