Thursday 24 January 2019

சண்டையிடுவதோ சேவல்...! ஆவலோ சூதாட்டத்தில்...!

சண்டையிடுவதோ சேவல்...! ஆவலோ சூதாட்டத்தில்...! த மிழர்களின் பாரம்பரிய பொழுதுபோக்கு விளையாட்டுகளில் ஒன்று சேவல் சண்டை. சாவக்கட்டு, சேவச்சண்டை என்றும் இது அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் புகார் நகரத்து மக்கள் கண்டு களித்த விளையாட்டுகளில் சேவல் சண்டையும் ஒன்றாகும். இந்த போட்டியில் வெற்றி பெறும் சேவலுக்கு ஊர்கூடி வரவேற்பு கொடுத்த நிகழ்வுகள் ஏராளம். கொங்கு மண்டலத்தில் வாழ்ந்த இணையற்ற மாவீரர்கள் பொன்னர்-சங்கர் வரலாற்றிலும் சேவல் சண்டை முக்கிய நிகழ்வாக பதிவு செய்யப்பட்டுள்ளது. காளி மன்னன் தரப்பில் கொண்டுவரப்பட்ட நூற்றுக்கணக்கான சேவல்களை பொன்னர்-சங்கரின் 2 சேவல்கள் வீழ்த்தி வெற்றி வாகை சூடியதாக குறிப்பு உண்டு. பிற நாட்டோடு போர் தொடுக்கச் செல்லும் மன்னர்கள் பலரும் தங்களின் படைவீரர்களுடன் சண்டை சேவல்களையும் கொண்டு சென்றுள்ளனர். இடைவிடாத போர் பயிற்சியால் மூர்க்க குணம் கொண்டு இருக்கும் வீரர்கள், தங்களுக்குள் சண்டை போட்டு விடக்கூடாது என்பதற்காக அவ்வப்போது சேவல் சண்டை நடத்தியதாகவும், அந்த சண்டையே வீரர்களின் கோபத்தின் வடிகாலாக இருந்ததாகவும் வரலாற்றின் வழியே அறிய முடிகிறது. அத்துடன், கரூர் மாவட்டம் பூலாம்வலசு சேவல் சண்டைக்கு ஆங்கிலேயர்கள் செம்புப் பட்டயம் கொடுத்த வரலாறும் உண்டு. சேவல் சண்டையை பொறுத்த வரை கத்திக்கட்டு, வெப்போர் என்ற இரு வகையான போட்டிகள் உண்டு. கத்திக்கட்டு என்பது சேவலின் கால்களில் கூர்மையான கத்தியை கட்டிவிட்டு சண்டையிட வைப்பது. வெப்போர் என்பது வெற்றுக்கால் போர் என்றும் அழைக்கப்படுகிறது. இது, சேவலின் கால் விரல்களில் உள்ள முட்களையே ஆயுதமாக கொண்டு சண்டையிடுவது. சென்னை, விழுப்புரம், திருச்சி, தஞ்சாவூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் சேவல் சண்டைக்கு பிரசித்தி பெற்றது. தமிழகத்தை போன்று ஆந்திராவும் சேவல் சண்டைக்கு பிரசித்தி பெற்றது. விஜயவாடா பகுதிகளில் பிரமாண்ட அளவில் சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. சண்டை சேவல்கள் வளர்ப்பவர்கள் அதை ஒரு உயிரினமாக மட்டும் பார்ப்பது இல்லை. தங்களின் கவுரவமாகவும், உணர்வோடும், உயிரோடும் கலந்த பந்தமாகவும் பார்க்கின்றனர். மதுரையில் நடக்கும் சேவல் சண்டையை கதைக் களமாக வைத்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ திரைப்படம் இதை விரிவாக காட்டி இருந்தது. சண்டைக்கு சேவலை தேர்வு செய்வது, ஊட்டமளிப்பது, சண்டைக்கு பழக்குவது, சண்டைக்கு பின்னர் ஏற்படும் காயங்களை ஆற்றி குணப்படுத்துவது என சேவல் சண்டை பிரியர்கள் ஆண்டின் பெரும்பாலான நாட்களை சேவலோடு கழிப்பதே வாடிக்கை. இதை ஒருவிதமான போதை என்றே கூறலாம். சண்டை சேவல் வளர்ப்பில் நாட்டம் கொண்டவர்களை அதில் இருந்து விடுவிப்பது கடினம். மன்னர்களில் தொடங்கி, ஜமீன்தார்கள், பண்ணையார்கள், செல்வந்தர்கள், பாமரர்கள் என அனைத்து தரப்பிலும் சேவல் சண்டையை வெறித்தனமாக நேசிப்பவர்களாக உள்ளனர். நீண்ட நெடுங்காலமாக பரிசுப் பொருட்கள், பண முடிப்பு, கவுரவம் என்று இருந்த சேவல் சண்டையில் சூதாட்டம் கலந்தது. இதன் விளைவு சேவல் சண்டை நடக்கும் இடங்களில் மனிதர்களிடையே கைகலப்பு, அடி-தடி என தொடங்கி கொலை சம்பவங்கள் வரை சென்றுவிட்டது. இதனால், தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தமிழ்நாடு போலீஸ் துறை தடை விதித்தது. அதேபோல் ஆந்திர மாநிலத்தில் சேவல் சண்டை நடத்தவும் தடை உள்ளது. இருப்பினும், தமிழக, ஆந்திர மாநிலங்களில் தடையை மீறி சேவல் சண்டை நடந்துகொண்டு தான் இருக்கிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேவல் சண்டை நடத்துவது போல், ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் சங்கராந்தி விழாவையொட்டி சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு சேவல் சண்டையை முன்வைத்து சூதாட்டத்தில் ரூ.1,000 கோடி வரை பணம் கைமாறியதாக பரபரப்பாக பேசப்பட்டது. இந்த ஆண்டு விஜயவாடா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடந்த சேவல் சண்டையில் ரூ.900 கோடியில் இருந்து ரூ.1,200 கோடி வரை பணம் கைமாறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சூதாட்டம் நீங்கலாக போட்டிகளுக்கு சில ஆயிரங்களில் இருந்து பல லட்சம் ரூபாய் வரை பந்தயம் கட்டியுள்ளனர். இதுதொடர்பாக விஜயவாடா போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் நூற்றுக் கணக்கான சேவல்கள், அவற்றின் கால்களில் கட்டுவதற்கு பயன் படுத்திய கத்திகளை பறிமுதல் செய்துள்ளனர். பலரை கைது செய்துள்ளனர். விஜயவாடா நிகழ்வுகள் விழிகளை விரிய வைத்தது போல், தமிழகத்திலும் அனுமதியின்றி ஆங்காங்கே சூதாட்டத்துடன் கூடிய சேவல் சண்டை நடந்துகொண்டு தான் இருக்கிறது. ஆந்திரா அளவுக்கு கோடிகளாய் அள்ளிக் கொடுக்காவிட்டாலும், இங்கு லட்சங்கள் புரள்கிறது. தென்னந்தோப்பு, மாந்தோப்புகள் என ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடம் தேர்வு செய்து, போலீசாரின் கண்களில் சிக்காத வகையில் சேவல் சண்டை நடத்துகின்றனர். இதில் பொழுதுபோக்கு மற்றும் சேவலுக்கான பயிற்சிக்காக சண்டை நடத்துபவர்கள் சில நூறு ரூபாய்களில் தொடங்கி, சில ஆயிரம் வரை பந்தய தொகையை நிர்ணயிக்கின்றனர். சில இடங்களில் சில லட்சம் ரூபாய் வரை நிர்ணயித்து பந்தயம் நடத்தப்படுகிறது. தடை விதிக்காத காலங்களில் சேவல் சண்டை என்பது பிரமாண்ட திருவிழா போன்று இருந்தது. போட்டி நடத்தும் கிராம, நகர்ப்புற விழாக்குழுவினர் அழைப்பிதழ் அச்சடித்து ஊர், ஊராய் கொடுப்பதும், ஊரெல்லாம் தோரணம் கட்டி, ஒலி பெருக்கிகளை நாலாபுறமும் ஒலிக்க விடுவதும் என விழாக்கோலமாய் இருந்தது. தடை விதிக்கப்பட்டுள்ளதால் வெளிப்படையான கொண்டாட்டங்கள் இன்றி, சூதாட்டத்தோடு மறைமுகமாய் நடத்தப்பட்டு வருகிறது. சேவல் சண்டை நடத்தலாமா? வேண்டாமா? என்ற கேள்வி எழுந்தாலும் பழங்காலத்தில் இருந்தே தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்து பயணிக்கும் இந்த விளையாட்டை முற்றிலும் விட்டுவிட முடியாது தான். அதே நேரத்தில் வன்முறை, சூதாட்டத்துக்கும் இது காரணமாகி விடக்கூடாது. மூவேந்தர்களில் சேரனுக்கு வில் கொடி, சோழனுக்கு புலிகொடி, பாண்டியனுக்கு மீன் கொடி என்ற அடையாளம் இருந்தது. மூவேந்தர்களையும் உள்ளடக்கி, தமிழ்க் கடவுள் முருகனின் கொடியாக சேவல் கொடி அலங்கரிக்கிறது. ஜல்லிக்கட்டு போல் சேவல் சண்டையும் தமிழர்களின் பண்பாட்டோடு தொடர்புடையது. சூதாட்டத்துக்கு இடம் அளிக்காமல், கட்டுப்பாடுகள், உரிய பாதுகாப்புடன் அனுமதி அளித்தால் எங்கோ மறைவில் சட்டவிரோதமாய் நடத்தி, சண்டையிடுவதை தவிர்க்கலாம். பாரம்பரிய விளையாட்டையும் பாதுகாக்கலாம். - கதிர்மாயா

No comments:

Popular Posts