காணாமல் போன வாழ்த்து அட்டைகள்
அ.சேசுராஜ், சின்னாளபட்டி
ஜ னவரி மாதத்தில் இருந்து ஆங்கில புத்தாண்டு, பொங்கல், ரம்ஜான், ஈஸ்டர், பக்ரீத், விநாயகர் சதுர்த்தி, முகரம், ஆயுத பூஜை, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகள் அனைத்து தரப்பு மக்களையும் மகிழ்ச்சியடைய செய்யும் விதமாக வருடந்தோறும் வந்து கொண்டே இருக்கிறது. பண்டிகை காலங்களில் புத்தாடை அணியலாம், வேண்டிய பரிசு பொருட்கள் கிடைக்கும், பாட்டி வீட்டுக்கு போகலாம், அதற்கெல்லாம் மேலாக பள்ளிக்கு விடுமுறை கிடைக்கும் என்ற இரட்டை சந்தோஷம் குழந்தைகளுக்கு கிடைக்கிறது.
இளைஞர்கள், இளம்பெண்களை பொறுத்தமட்டில் புத்தாடை, உறவினர்களுடனான சந்திப்பு என்பதையெல்லாம் தாண்டி, தன் வயதை ஒத்த பால்ய சிநேகிதர்கள், பள்ளி, கல்லூரி நண்பர்கள், பணித்தளங்களில் சக பணியாளர்கள், அதிகாரிகள் அல்லது வேலை வழங்கிய முதலாளிகள் ஆகியோர்களுடனான தொடர்புக்கான ஒரு பாலமாக பார்ப்பதோடு, தன் மனதிற்கு பிடித்த நபருடனான அன்பை பரிமாறவும், நட்பை விரிவுபடுத்தும் ஒரு களமாக இந்த பண்டிகைகளை பெரிதும் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றனர்.
எதோ ஒரு வகையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் தளமாக பண்டிகைகள் பார்க்கப்பட்டாலும், அன்பை, நட்பை, உறவை, சகோதரத்துவத்தை புதுப்பிக்க அல்லது வலுப்படுத்த ஒரு கிரியா ஊக்கியாக இருப்பது ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவிப்பதில் தான் இருக்கிறது பண்டிகைகளின் சூட்சுமம். அன்பை பரிமாறிக்கொள்வதில் வாழ்த்து அட்டைகள் அனுப்புவது முக்கிய இடம் பிடிக்கிறது. அதுவும் பொங்கல் பண்டிகை என்றால் கேட்கவே வேண்டாம். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து பொங்கல் வாழ்த்து தவறாமல் வந்து விடும். அது அளப்பரிய சந்தோஷத்தை அளிக்கும்.
1846-ம் ஆண்டு ஹென்றி என்பவர் முதன் முதலாக வாழ்த்து அட்டை அனுப்பி வாழ்த்து சொல்லும் வழக்கத்தை தொடங்கிவைத்தார். சாமி படங்கள், இயற்கை வளங்கள், நீரோடைகள், மயில், மான் உள்ளிட்ட உயிரினங்கள் அடங்கிய படங்கள், அன்பை, நட்பை, பரிமாறும் வாசகங்கள் உள்ளடங்கிய எண்ணற்ற வடிவங்களில் வாழ்த்து அட்டைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் ஆகிய பண்டிகை காலங்களில் தான் அதிகளவு வாழ்த்து அட்டைகள் அனுப்பப்பட்டு வந்ததாகவும், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு வரை இது போன்ற பண்டிகை நாட்களில் தபால் நிலையங்களில் ஆயிரக்கணக்கான வாழ்த்து அட்டைகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தது என்றும் தபால் துறை கூறுகிறது. மேலும், பெரிய, பெரிய நிறுவனங்கள் தாங்களே தங்களது நிறுவனத்தின் பெயரை வாழ்த்து அட்டையில் அச்சடித்து தபால் துறை மூலம் அனுப்பினர்.
இதற்கெல்லாம் மேலாக தபால் துறையே 2001 முதல் 2005 வரை தீபாவளி, பக்ரீத், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகைக்கு ஏற்றவாறு இன்லன்ட் லட்டர் தபாலில் வாழ்த்து அட்டைகளை அச்சடித்து விற்பனை செய்தது. இதன் மூலம் இந்தியாவில் வாழ்த்து அட்டைகளின் தேவை எந்த அளவிற்கு இருந்தது என்பதை அரிய முடிகிறது. ஒட்டுமொத்தத்தில் சுமார் 45 சதவீத மக்கள் வாழ்த்து அட்டைகள் மூலம் தங்களது வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டிருந்தனர்.
2010 வரை வாழ்த்து அட்டைகளை தபால் மூலம் அனுப்புவது, நேரடியாக கொடுப்பது என ஏதாவது ஒரு வகையில் வாழ்த்து அட்டைகளின் தேவை அதிகரித்த வண்ணம் இருந்தது. அந்த காலக்கட்டத்தில் தான் வாழ்த்து அட்டைகள் விற்பனை செய்யப்படும் கடைகளில் இளைஞர்கள், இளம்பெண்கள் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் இன்றைய நிலையில், தகவல் தொடர்பு சாதனங்களின் அபரிமிதமான வளர்ச்சியால் 2008-க்கு பின் இணையதளத்தை பயன்படுத்திய 5 சதவீத மக்கள் இமெயில் மூலம் வாழ்த்துகளை அனுப்பி மகிழ்ந்தனர்.
தொடர்ந்து வந்த வாட்ஸ்-அப், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை பரிமாறும் பழக்கம் வந்தது. இன்றைய நிலையில் சுமார் 35 சதவீதத்தினருக்கும் மேல், அதாவது குடும்பத்தில் ஒருவர் செல்போனை பயன்படுத்தும் நிலையில் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் இணையதள வசதியுடன் கூடிய சமூக வலைதள பயன்பாடு தான் அனைத்து வாழ்த்துகளையும் ஆக்கிரமித்து கொண்டது. சமூக வலைதளத்தின் வரவால் இன்றைய இளையதலைமுறையினர் வாழ்த்து அட்டைகள் ஒன்று இருந்ததா? என்று கேள்வி கேட்கும் அளவிற்கு நிலைமை வந்து விட்டது.
வாட்ஸ்-அப் என்ற ஒரு சமூக வலைதளத்தில் தனித்தனியாக வாழ்த்தை பரிமாறுவதும், ஒரு குழுவை ஆரம்பித்து 256 நபரை இணைத்து ஒரே நேரத்தில் அனைவருக்கும் வாழ்த்தை பரிமாறுவதும், முகநூலில் முகம் தெரியாத ஆயிரம் நண்பர்களுக்கு ஒரே நேரத்தில் வாழ்த்துகளை பரிமாறுவதும் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. மேலும், இதுபோன்ற சமூக வலைதளங்களில் நாம் ஒரு வாழ்த்தை வடிவமைக்கவோ, தேடி அலையவோ தேவையில்லை. யாரோ ஒரு நபர் வடிவமைத்த வாழ்த்தை லாவகமாக பதிவிறக்கம் செய்து நமது பெயரில் மாற்றி அல்லது அப்படியே பரிமாறவும் வாய்ப்புகள் உள்ளது. மேலும், இன்றைய நிலையில் சமூக வலைதளங்களே நமது பெயரை உள்ளடு செய்தால் தேவைக்கேற்ற பண்டிகையை கண்கவர் கலரில் வடிவமைத்து வாழ்த்தை நமக்கு கொடுக்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
சரி இது போன்ற தகவல் தொடர்பு வளர்ச்சி தேவை என்றாலும், காலம் காலமாக வாழ்த்து அட்டைகளை வடிவமைத்து விற்பனை செய்து வந்த தொழிற்கூடங்களும், அதில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணியாற்றிய பணியாளர்களும் வேலை இழந்துள்ளனர். வாழ்த்து அட்டைகள் விற்பனை செய்த கடைகளில் 90 சதவீத கடைகள் மூடப்பட்டு விட்டது. இதற்கெல்லாம் மேலாக வாழ்த்து அட்டைகளை அனுப்புவதன் மூலம் வருமானம் ஈட்டி வந்த தபால் துறை அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை இழந்துள்ளது. மொத்தத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற பெயரில் பாரம்பரிய வாழ்த்து பழக்கங் களை தொலைத்து விட்டு நிற்கதியாய் இருக்கிறோம் என்பதே உண்மை.
Monday, 14 January 2019
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment