அரசியல் சட்டத்தை பாதுகாக்க அம்பேத்கரின் அறிவுரை!
ஆர்.நல்லகண்ணு, (இந்திய கம்யூனிஸ்டு கட்சி)
இ ன்று (ஜனவரி 26-ந்தேதி) இந்திய குடியரசு தினம்.
70-ம் ஆண்டு குடியரசு தினத்தில் அடியெடுத்து வைக்கிறோம். குடியரசுச்சட்டம் தான் 130 கோடி மக்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக உள்ளது. பல்வேறு போராட்டங்கள், கிளர்ச்சிகள், அடக்குமுறைகள் உலகப்போர் விளைவுகள் ஆகிய பின்னணியில் 1947 ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி நாடு சுதந்திரமடைந்தது. நாடு பிரிக்கப்பட்டதும் 1947 ஆகஸ்டு 20-ல் இந்திய அரசியல் அடிப்படை சாசனத்தை உருவாக்க எழுவர் குழுவுக்கு டாக்டர் அம்பேத்கர் தலைவராக நியமிக்கப்பட்டார். அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியல் நிர்ணய சபையில் சட்ட நுணுக்கங்கள் தெரிந்த பல அறிஞர்கள் இருந்தபோதும், அரசியல் சாசன வரைவுக் குழு தலைவராக அம்பேத்கரை தேர்ந்தெடுத்ததற்கு காரணம் சட்ட நுணுக்கத்தையும் தெரிந்தவர், கடையிலும் கடைகோடி மக்களின் உணர்வுகளையும் நன்கு உணர்ந்தவர் என்று காந்தியும், நேருவும் கருதினர். இந்தியாவின் முதல் சட்டத்துறை அமைச்சரான டாக்டர் அம்பேத்கர் 1948 நவம்பர் 4-ல் அரசியல் அமைப்பு சாசன மசோதாவை அரசியல் நிர்ணய சபையில் முன் மொழிந்தார். 2475 திருத்தங்கள் முன்மொழியப்பட்டு விரிவான விவாதங்கள் நடந்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அரசியல் நிர்ணய சபையில் சட்ட நகல் ஏற்றுக்கொண்ட பிறகு 1949 நவம்பர் மாதம் 25-ந்தேதி அன்று டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய தொகுப்புரை இன்றைய இந்திய சூழ்நிலைக்கும் பொறுத்தமாக உள்ளது.
“இந்தியா 1950 ஜனவரி 26-ம் நாள் முதல் குடியரசு நாடாகிறது. நாட்டின் சுதந்திரத்துக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ? நாடு தனது சுதந்திரத்தைப் பேணிக் காத்துக் கொள்ளுமா? அல்லது மீண்டும் இழந்து விடுமா? இதுவே என் மனதில் குடி கொண்டிருக்கும் முதல் சிந்தனையாகும்.
“என் மனதில் தோன்றும் இரண்டாவது சிந்தனை ஜனவரி 26-லிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களுக்காக ஆட்சி நடத்தும் மக்கள் ஆட்சி ஒரு ஜனநாயகக் குடியரசாகத் திகழும். ஐனநாயகக் குடியரசுக்கு என்ன நிலை ஏற்படும் என்பதையும் சிந்திக்க வேண்டும்.” இந்திய அரசியலில் பக்தி அல்லது வீரவணக்கம் Hero workship ஈடு இணையற்ற முறையில் பெருமளவு அரசியலில் பங்கு வகிக்கிறது. அரசியலில் தனி நபர் வழிபாடு இந்தியாவைப் போன்று உலகில் எந்த பகுதியிலும் இல்லை. “இந்தியர்கள் தங்கள் மத நம்பிக்கைகளுக்கு மேலாக நாட்டைக் கருதப் போகிறார்களா அல்லது நாட்டை விட மத நம்பிக்கைக்கே முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்களா? இது எனக்குத் தெரியாது. கட்சிகள், நாட்டை விட தங்கள் மதக் கோட்பாடுகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தால் நமது சுதந்திரத்தை இழப்பது என்பது நிச்சயம். இந்த விளைவுக்கு எதிராக நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நமது கடைசித் துளி இரத்தம் இருக்கும் வரை நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டுமென்றார்.
“மூன்றாவதாக வெறும் அரசியல் ஜனநாயகத்தோடு திருப்தி அடைந்துவிடக் கூடாது”. அரசியல் ஜனநாயகத்துடன் மனநிறைவு அடைந்து விடக்கூடாது. நமது அரசியல் ஜனநாயகத்தை ஒரு சமூக ஜனநாயகமாகவும் மாற்ற வேண்டும். சமூக ஜனநாயக அடிப்படையின்றி அரசியல் ஜனநாயகம் நீண்டு நிலைத்திருக்க முடியாது. சமூக ஜனநாயகம் என்றால் என்ன? சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைகளை வாழ்க்கையின் கோட்பாடுகளாக அங்கீகரிக்கும் ஒரு வாழ்க்கை முறை அது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவைகளை கொண்ட இந்த மும்மையின் தனிப் பகுதிகளாக அவைகளை பிரிக்க முடியாது. இந்த மூன்றும் ஒன்றாக இணைந்துள்ளன. அதாவது ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரிப்பது ஜனநாயகத்தின் அடிப்படையையே தகர்ப்பதாகும். சுதந்திரத்தை சமத்துவத்திலிருந்து பிரிக்க முடியாது. அதேபோன்று சமத்துவத்திலிருந்து சுதந்திரத்தைப் பிரிக்க முடியாது. சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றிலிருந்து சகோதரத்துவத்தைப் பிரிக்க முடியாது.
“நான்காவதாக நாம் அனைவரும் ஒரு தேசம் (Nat-i-o-n-al) என்ற நம்பிக்கையெனும் மாயையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக நான் கருதுகிறேன். பல்லாயிரம் சாதிகளாகப் பிரிந்திருக்கும் மக்கள் வாழும் இடம் எப்படி ஒரே தேசமாக இருக்க முடியும்?” இந்தியாவில் ஜாதிகள் உள்ளது. தேசிய இனச் சிந்தனைக்கு எதிரானது ஜாதிகள். முதலில் சமூக வாழ்வில் அவை பிளவுகளை ஏற்படுத்துகின்றன. ஜாதிக்கும் ஜாதிக்கும் இடையே வெறுப்பையும், பொறாமையையும் உருவாக்குவதால் அவை தேசிய இனக் கொள்கைக்கு விரோதமாக இருக்கின்றன. உண்மையிலேயே நாம் ஒரு தேசிய இனமாக உருவாக வேண்டுமென்றால் இந்த தடைக் கற்களையெல்லாம் கடந்து வர வேண்டும். ஒரு தேசிய இனம் உருவானால்தான் சகோதரத்துவம் உண்மையானதாக இருக்க முடியும். சகோதரத்துவம் இல்லாத சமத்துவமும் சுதந்திரமும் ஒரு வண்ணப் பூச்சியின் வலுவை விட அதிகமாக இருக்க முடியாது”. சமுதாய ரீதியாகவும், மனோ நிலையிலும் ஒரே தேசம் என்ற சொல்லுக்குரியவர்களாக ஆகவில்லை என்பதை எவ்வளவு சீக்கிரத்தில் நாம் உணர்கிறோமோ, அவ்வளவுக்கு நல்லது. ஒரு தேசமாக வளர்வதற்கு அவசியத்தை உணர வேண்டும்; அந்த இலட்சியத்தை நனவாக்குவதற்கான வழி வகைளைச் சிரத்தையோடு சிந்திக்க வேண்டும்”. 5.மக்களுடைய ஆட்சி, மக்களுக்கான ஆட்சி, மக்களால் நடைபெறும் ஆட்சி என்ற கோட்பாடை புனிதமாக வைத்திருக்கும் நாம் அரசியல் சாசனத்தைப் பாதுகாக்க விரும்பினால், நமது பாதையில் நிரம்பிக் கிடைக்கும் தீய சக்திகளை இனம் காண்பதில் துடிப்புடன் இருப்போம் என்று நாம் உறுதி எடுத்துக் கொள்வோம். மக்களாலான அரசை விட மக்களுக்கான அரசை மக்கள் தேர்ந்தெடுக்கத் தூண்டும் முன்முயற்சியில் சோர்ந்து விடமாட்டோம் என்று உறுதி செய்வோம்.
டாக்டர் அம்பேத்கரின் மனதை உறுத்திக் கொண்டிருந்த கருத்துகளை ஒளிவு மறைவின்றி அரசியல் நிர்ணய சபையில் தெரிவித்திருக்கிறார். தேசிய இனப் பிரச்சினையை விட, சாதிப் பிளவுகளும், ஏற்றத்தாழ்வுகளும் அவரைப் பெரிதும் பாதித்தவை. இன்றும் மண்டல் கமிஷன் பரிந்துரையை எதிர்த்து, புழுதி கிளம்பிவிடப்படுவதைப் பார்க்கிறோம்.
இடஒதுக்கீட்டு கொள்கையில் அரசியல் அமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள சமூகத்தில் பின்தங்கிய, கல்வியில் பின்தங்கிய என்பதை புறந்தள்ளி பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கென 10 சதவீத இடஒதுக்கீட்டு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது மத்திய அரசு. இடஒதுக்கீட்டு கொள்கைக்கான அடிப்படையையே மாற்றி நாளடைவில் இடஒதுக்கீட்டு கொள்கையை நீர்த்துப் போகச் செய்கிறார்கள்.
இந்த குடியரசு தினத்தில் நாம் பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறோம். மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுகிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை நசுக்கப்படுகிறது. அரசுக்கு எதிராக மாற்று கருத்து கூறினால் தேச துரோகிகள் என்று அரசால் தாக்கப்படுகிறார்கள். உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், புலனாய்வு துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் அரசியல் சாசனம் தங்களுக்கு வழங்கியுள்ள சட்ட பாதுகாப்பையும் தன்னாட்சி அதிகாரத்தையும் மத்திய அரசிடம் பறிகொடுக்கும் அவலத்தை பார்க்கிறோம்.
அறிவியல் சிந்தனையை வளர்க்க வேண்டும் என்று அரசியல் அமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டதற்கு மாறாக அறிவியல் மாநாடுகளில் மூட நம்பிக்கையும், அறிவியலுக்கு புறம்பான கருத்துகளும் பரப்பப்படுகிறது. மதத்தின் பெயரில் இன்று ஆட்சியும், அரசியலையும் தொடர்ந்து முன்னெடுக்க முயற்சி நடைபெற்று வருகிறது. இதிலிருந்து அரசியல் சாசன சட்டத்தை பாதுகாக்க, நம் ஜனநாயக நெறிமுறைகளை மேலும் செலுமைபடுத்த நாம் அனை வரும் இணைந்து செயலாற்றுவோம்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment