Wednesday 2 January 2019

பட்டமளிப்பு விழாக்களில் தமிழுக்கு இடம் இல்லையா?

பட்டமளிப்பு விழாக்களில் தமிழுக்கு இடம் இல்லையா? மகா.பாலசுப்பிரமணியன், கல்வியாளர், காரைக்குடி ஒரு மனிதனுக்கு தேவையான ஒழுக்கம், அறிவு ஆகியவற்றைக் கொடுப்பது தான் கல்வி. அந்த கல்வியின் மூலம் பெற்ற அறிவைக் கொண்டே இவ்வுலகில் தனக்கு தேவையானவற்றை தானே தயாரித்துக் கொள்ளும் வல்லமையை மனிதனால் பெற முடிகிறது. அந்த வல்லமையை அவன் கற்கும், அடிப்படை கல்வியிடமிருந்து ஒருவனால் பெற்றுவிட முடியாது. அதையும் தாண்டி கற்கும் உயர் கல்வியிடம் இருந்து மட்டுமே அவனால் பெற இயலும். அத்தகைய உயர்கல்வியை மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருப்பவைதான் பல்கலைக்கழகங்கள். பல்கலைக்கழகம் என்பது உயர்கல்வியை வழங்கும் மற்றும் ஆய்வை மேற்கொள்ளும் ஓர் நிறுவனம். பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பையும், பட்டமேற்படிப்பையும், ஆய்வுப்படிப்புகளையும் பல்கலைக்கழகங்கள் வழங்குகின்றன. இங்கு பெறும் கல்வி மருத்துவம், சட்டம், பொறியியல், அறிவியல், கலை, விவசாயம் உள்பட பல்வேறு துறை சார்ந்த அறிவைப் பெறுவதற்கும் மற்றும் வேலைவாய்ப்பிற்கும் அடிப்படையாக அமைகிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாட்டின் உயர் கல்வி அமைப்பை அடிப்படையாக வைத்தே அமையும், கிராமப்புற மாணவர்களுக்கும், பின்தங்கிய மற்றும் ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களுக்கும் உயர்கல்வியின் வாயில்களையும், வாய்ப்புகளையும், திறந்து வைப்பது பல்கலைக்கழகங்களின் நோக்கமாகும். பல்கலைக்கழகத்தில் பயின்று தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் விழா ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் நடைபெறுகிறது. இவ்விழா ஆங்கிலேயர் காலத்தில் நடைபெற்றதைப் போன்றே இன்றும் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் நடைபெறுகிறது. பட்டமளிப்பு விழாவில் கவர்னர் அதாவது பல்கலைகழக வேந்தர், இணைவேந்தர் பொறுப்பில் உள்ள அமைச்சர், அந்தந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள், சிறப்பு விருந்தினர் ஆட்சிக்குழு, பேரவை உறுப்பினர்கள் பட்டமளிப்பு விழாவிற்கென்றே ஆங்கிலேயர் காலத்தில் அறிமுகப்படுத்திய அங்கிகளை அணிந்து கொள்வதும், மாணவர்களும் ஆங்கிலேயர் காலத்தில் உள்ளதைப் போல் இன்றும் பட்டமளிப்பு அங்கிகளை அணிந்து கொள்வதும் இன்றும் தொடர்கிறது. பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி முழுவதும் ஆங்கிலேயர் காலத்தை போலவே முழுக்க முழுக்க ஆங்கில மொழியிலேயே நடைபெறுகிறது. துணைவேந்தர் மற்றும் சிறப்பு விருந்தினரின் பட்டமளிப்பு விழா உரைகளும் ஆங்கில மொழியில் உள்ளதால் தன் பிள்ளைகள் பட்டம்பெறும் நிகழ்ச்சியை காண வந்திருக்கும் ஆங்கில மொழி அறியாத பெற்றோர்களுக்கு ஒன்றுமே புரிவதில்லை. பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் ஏற்றுக் கொள்ளும் உறுதி மொழி என்ன என்று விழா காண வந்திருந்திருக்கும் ஆங்கில மொழி அறியாதவர்களுக்கு விளங்குவதில்லை. நம் தமிழ்நாட்டில் அரசுப் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் இன்னும் ஆங்கில மொழியில் தொடர்வது வேதனைக்குரியது. தமிழ் மொழி, செம்மொழி தகுதியை பெற்றுள்ள இந்த காலக்கட்டத்தில் நம் தமிழக பல்கலைக்கழகங்கள் இன்னும் ஆங்கில மொழியை கைவிடாது தமிழ்மொழியை புறக்கணிப்பது ஏன் என புரியவில்லை. பட்டமளிப்பு விழா குழுவினர் பட்டமளிப்பு விழா அரங்கினுள் அணிவகுத்து வரும்போது மேற்கத்திய இசையே இசைக்கப்படுகிறது. இம்முறை மாறவேண்டும். நம் தமிழ்நாட்டின் மங்கல இசையான நாதஸ்வர இசையே ஒலிக்கவேண்டும். அதைப்போல் பட்டமளிப்பு விழாவில் அணிந்து கொள்ளும் உடைகளும் மாற்றியமைக்கப்பட வேண்டும். விழா நிகழ்வுகள் அனைத்தும் தமிழ் மொழி வாயிலாக நடைபெற வேண்டும். அவ்வாறு நிகழ்ந்தால் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், கல்வியாளர்கள் தமிழ் ஆர்வலர்கள் மகிழ்ச்சியுறுவர். தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழங்களில் நடைபெறும் பட்டமளிப்பு விழாக்கள் தமிழ் மொழி வாயிலாகவே நடைபெற வேண்டும் என தமிழக அரசு உடனடியாக அரசு ஆணை வெளியிட்டு அதை கண்டிப்பாக நடைமுறைபடுத்த வேண்டும்.

No comments:

Popular Posts