Wednesday 2 January 2019

ஆங்கில வழிக் கல்வி: தேவை கண்காணிப்பு!

ஆங்கில வழிக் கல்வி: தேவை கண்காணிப்பு! | By இரா. கதிரவன் | சென்னையின் பிரதான பகுதிகளில், நடுத்தர மற்றும் அதற்கும் குறைவான வருவாயுள்ள குடும்பப் பின்னணியுடைய மாணவர்களைக் கொண்ட பள்ளிகள் அவை. இங்கு படிக்கும் மாணவர்களின் தாய்மொழி, பேச்சு மொழி என அனைத்தும் தமிழ் மொழிதான். இந்தப் பள்ளிகளில் 300 மாணவர்களில், 250 மாணவர்கள் வரை தமிழை எழுத்துக்கூட்டிப் படிக்கக்கூட சிரமப்படுகிறார்கள். மேலும், மிகப் பெரும்பாலானோர் ஆங்கிலத்தில் படிக்கவோ, எழுதவோ, பேசவோ பெரும் சிரமப்படுகிறார்கள். காரணம், இவர்கள் அனைவரும் ஆங்கில மொழிவழிக் கல்வி பயின்று வருபவர்கள். தற்போது, பெருநகரங்களைத் தவிர்த்த பல புறநகர்களில் ஏராளமான ஆங்கில வழிக் கல்விக் கூடங்கள் காளான்களைப் போல முளைத்து வருகின்றன. ஒவ்வொரு குக்கிராமத்திலும் அரசு நடத்தும் பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், அவை இப்போது போதுமான மாணவர்கள் வருகையின்றி இருப்பதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, அரசுப் பள்ளிக்கூடங்கள் தமிழ்மொழி வழிக் கல்வி தருவதும், தனியார் பள்ளிகள் ஆங்கிலமொழி வழிக் கல்வி தருவதாகக் கூறிக் கொள்ளுவதும்தான். 30 ஆண்டுகளுக்கு முன்னர், பெருமளவு தமிழ்வழிக் கல்வி மட்டுமே படிக்க முடிந்தது; பதினொன்றாம் வகுப்பு வரை தமிழ் மொழியில் பாடத் திட்டங்களை மாணவர்கள் பயின்றாலும், அவர்கள் அதனை நன்கு புரிந்து கொண்டு படிக்கும் வாய்ப்பு இருந்தது. தவிர, ஆங்கிலம் என்பதை ஒரு பாடமாக 11 ஆண்டுகள் படித்து, அந்த மொழியினை பெருமளவு புரிந்து கொள்ளும் ஆற்றலும், ஓரளவு எழுதும் திறனும், மிகக் குறைந்த அளவிலாவது பேசும் ஆற்றலையும் பெற்றிருந்தனர். பதினொன்றாம் வகுப்பினைக் கடந்து புகுமுக வகுப்பு எனும் பி.யு.சி.-க்கு (கல்லூரிக்குள்) சென்றபோது அங்கு, அதனைத் தொடர்ந்து ஆங்கில வழிக் கல்விக்கு தம்மை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது ஆங்கிலவழிப் பள்ளிக்கூடங்கள், எல்லாப் பாடங்களையும் ஒருசேர ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கத் தொடங்குகின்றன. ஆங்கிலமொழி சரிவரப் புரியும் முன்னரே, பாடம் கற்பிக்கப்படும் நிலையும், எல்லாப் பாடங்களுக்கும் அந்த மொழியில் தேர்வு எழுதும் அவசியமும் ஏற்படுகிறது. விளைவு, மொழி புரியாமலும், அதன் காரணமாகப் பாடங்களைப் புரிந்து கொள்ளாமலும், அடைப்புக்குறிக்குள் கேள்விக்கான பதிலை அடையாளமிட்டு, மனப்பாடம் செய்து, எழுத்து மாறாமல் திரும்ப எழுதும் திறம் பெற்றவர்களாக மட்டுமே மாணவர்கள் விளங்குகிறார்கள். இதன் நீட்சியாக ஆங்கிலமொழி வல்லமையும் இன்றி, தமிழில் படிக்கும் ஆற்றலும் கைவரப் பெறாது இரண்டும் கெட்டான் நிலையை அடைகின்றனர். சாமான்ய மக்களில் பெரும்பாலோர், ஆங்கில வழிக்கல்வி, அவர்களது பிள்ளைகளுக்குச் சிறந்த எதிர்காலத்துக்கானக் கதவுகளைத் திறந்துவிடும் என்ற நம்பிக்கையில், பெருஞ்செலவு செய்தேனும் இத்தகைய பள்ளிகளில் சேர்த்து விடுகின்றனர். ஆனால், 12 ஆண்டுகள் ஆங்கில வழிக் கல்விக்குப் பின்னராவது மாணவர்கள் ஆங்கிலம் முழுமையாகப் புரிந்து கொள்ளவும், ஓரளவு சுயமாக எழுதவும், சிறிதளவு தங்கு தடையின்றி பேசக் கூடிய ஆற்றலும், தன்னம்பிக்கையும் பெற்றவர்களாக வெளியில் வரவேண்டும் அல்லவா? அது நிகழ்கிறதா? மாணவர்களை மனப்பாடம் என்னும் தளையிலிருந்து விடுவிக்க அரசு தற்போது முயற்சிகள் மேற்கொண்டாலும், ஆங்கிலம் தரும் மொழிச்சிக்கல் - குறிப்பாக தனியார் ஆங்கில வழி கல்விக் கூடங்களில் சந்திக்கும் சிக்கல்களில் இருந்து வெளிக்கொணர போதுமான நடவடிக்கை எடுக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஆங்கில வழிக் கல்வி கற்பது மாணவர்களின் உரிமையாக இருக்கலாம்; அத்தகைய பள்ளிகளை நடத்துவது பள்ளி நிர்வாகத்தினரின் சுதந்திரமாக இருக்கலாம்; ஆனாலும், அந்தப் பள்ளிகள் தங்களது கடமையைச் செவ்வனே நிறைவேற்றுகின்றனவா? கல்வி புகட்டுவதன் நோக்கம் முழுமையாக மாணவர்களைச் சென்றடைகிறதா ? நடவடிக்கைகள் சரிவர நிர்ணயிக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறதா என்ற கேள்விகளும் எழுகின்றன. ஆங்கிலவழிக் கல்வி கூடாது என்பதல்ல நமது நோக்கம், அந்தக் கல்வி சரிவர நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே. இன்றைய மாணவர்களின் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடைமுறைகள், அவர்களுக்கு இருந்த ஒரு பாதுகாக்கப்பட்ட வளையத்திலிருந்து, போட்டி மிகுந்த சூழலுக்கு மாறியுள்ளது. இந்தச் சூழலில் தமிழகத்தின் குக்கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் புது தில்லியில் படிக்கும் மாணவருடன் போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் புதிய சவாலான சூழலுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வி நிறுவனங்களும், கல்வித் துறையும் நிறைய மாற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய சவாலான சூழலுக்கு ஏற்ப கல்வி கற்பித்தல் செவ்வனே நிகழ்வதை உறுதி செய்ய மேற்பார்வை அமைப்புகள், பல்வேறு தளங்களில் ஏற்படுத்தப்பட வேண்டும். அவற்றின் மூலம் ஆங்கில வழிக் கல்வி தீவிரமாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.

No comments:

Popular Posts