‘டாஸ்’ முறை நீக்கப்படுமா?
ச ர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 1877-ம் ஆண்டு தொடங்கியது. அன்று முதல் இன்று வரை காலத்துக்கு ஏற்ப நிறைய மாற்றங்களை கண்டுவிட்டது. ஓவருக்கு 8 பந்து என்பது 6-ஆக குறைக்கப்பட்டது. ‘முடிவு கிடைக்கும் வரை போட்டி’ என்பது 5 நாள் கொண்டதாக மாற்றப்பட்டது. எல்.பி.டபிள்யூ., கேட்ச் உள்ளிட்டவற்றில் சந்தேகம் இருந்தால் அதை துல்லியமாக கணிக்க டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மின்னொளியின் கீழ் டெஸ்ட் நடப்பதும் அறிமுகமாகி விட்டது.
நூற்றாண்டை கடந்தும் இன்று வரை மாறாத முக்கியமான ஒரு விஷயம் ஆட்டம் தொடங்குவதற்கு முன் போடப்படும் ‘டாஸ்’. போட்டியில் யார் முதலில் பேட்டிங் அல்லது பந்து வீசுவது என்பதை தேர்வு செய்ய நாணயத்தை மேலே சுண்டி விட்டு (டாஸ்) முடிவு செய்யப்படுகிறது. அதாவது உள்ளூர் அணியின் கேப்டன் நாணயத்தை மேலே தூக்கி போடுவார். வெளிநாட்டு அணியின் கேப்டன் பூவா, தலையா? என்பதை கேட்பார். அவரது கணிப்பு சரியாக அமைந்து விட்டால் பேட்டிங் அல்லது பந்து வீச்சை அவரே தேர்வு செய்வார். டாஸில் அவர் தோற்றால் முடிவு உள்நாட்டு அணியின் கேப்டன் வசம் போகும்.
அண்மை காலமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ‘டாஸ்’ போடும் நடைமுறையை நீக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. ஆஸ்திரேலிய ஜாம்பவான்கள் ஷேன் வார்னே, ஆலன் பார்டர், ஆஸ்திரேலிய முன்னாள் பயிற்சியாளர் டேரன் லீமான் மற்றும் தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் உள்ளிட்டோர் டெஸ்டில் ‘டாஸ்’ போடுதல் தேவையில்லை என்று குரல் கொடுத்துள்ளனர்.
‘டாஸ்’ போடுவதை எடுத்து விட்டு, எந்த அணி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறதோ அந்த அணியின் கேப்டனே தன்னிச்சையாக பந்து வீச்சு அல்லது பேட்டிங்கை தீர்மானிக்க வேண்டும் என்று இவர்கள் வாதிடுகிறார்கள். 2016-ம் ஆண்டில் இருந்து இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்த பாணி பின்பற்றப்படுவதையும் அவர்கள் சுட்டி காட்டுகிறார்கள். கவுண்டி கிரிக்கெட்டில் வெளியூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யலாம். பேட்டிங் செய்ய ஆசைப்பட்டால் ‘டாஸ்’ போட்டு முடிவு செய்யப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கிறது என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது. ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி பெரும்பாலும் முதலில் பேட்டிங் செய்வதற்கே முன்னுரிமை கொடுக்கின்றன. கடந்த ஆண்டில் நடந்த 48 டெஸ்டுகளில் 43-ல் முடிவு கிடைத்தது. அவற்றில் 33-ல் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்று இருக்கின்றன. மேலும் 27 போட்டிகள் 4-வது நாளுக்குள் முடிந்து விட்டது. எப்போதும் ‘டாஸ்’ வெல்லும் அணிகளின் கையே கணிசமாக ஓங்குகிறது.
“டாஸ் முறையை நீக்கும் போது, ஆடுகளங்களின் தரம் உயர்ந்து விடும். உதாரணமாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது என்று வைத்து கொள்வோம். ஆஸ்திரேலியா, புற்கள் நிறைந்த வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளத்தை உருவாக்க விரும்பினால், இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யும். இதே போல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு செல்லும் போது, முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சுக்கு ஏற்ற ஆடுகளமாக தென்பட்டால், ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்கிறோம் என்று சொல்லப்போகிறது” என்கிறார் வார்னே.
‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காப்பாற்ற ‘டாஸ்’ முறையை ஒழிப்பது அவசியமாகிறது. எப்போதுமே ஆடுகளம் உள்ளூர் அணிகளுக்கே அதிக சாதகமாக அமைக்கப்படுகிறது. முதலில் பேட்டிங் செய்வதா? அல்லது பந்து வீசுவதா? என்ற முடிவு வெளிநாட்டு அணி வசம் செல்லும் போது, உள்நாட்டு கிரிக்கெட் சங்கங்கள் உஷாராகி விடும். இரண்டு அணிகளுக்கும் சரிசம வாய்ப்பு இருக்கும் வகையில் தரமான ஆடுகளங்களை உருவாக்கி தருவார்கள். இதனால் போட்டியிலும் சுவாரஸ்யம் அதிகரிக்கும்’ என்கிறார், டேரன் லீமான்.
ஆனால் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், இந்த விவகாரத்தில் நேர்மாறாக நிற்கிறார். நூற்றாண்டு காலமாக கடைபிடிக்கப்படும் ‘டாஸ்’ போடும் முறை தொடர்ந்து நீடிக்க வேண்டும். உள்ளூர் அணிகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தும் வகையிலேயே ஆடுகளங்கள் உருவாக்கப்படுகிறது என்றால், இந்த விஷயத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டு அறிவுரை வழங்கலாம் என்ற யோசனையை முன் வைக்கிறார், ஸ்டீவ் வாக்.
கடந்த சில மாதங்களாக டாஸ் வேண்டுமா?-வேண்டாமா? என்ற விவாதம் அவ்வப்போது நடந்து கொண்டு இருக்கிறது. இந்த உலகில் மாற்றம் என்ற வார்த்தையை தவிர எல்லாமே மாறக்கூடியது தான். இப்போது இல்லாவிட்டாலும் வருங்காலங்களில் ‘டாஸ்’ இல்லாமல் போட்டியை நாம் பார்க்கும் நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
- ஜெய்பான்
Location: Chennai
Edition: Tiruvallur
Date : 13/01/2019
Page : 04
Stories : 3
‘செல்பி’ மோகம் சமுதாயத்தை சீரழிக்கிறதா?
‘டாஸ்’ முறை நீக்கப்படுமா?
எதிரொலி
Back
|
Pages
|
Sunday, 13 January 2019
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment