Saturday, 12 January 2019

23. ‘போர் உத்தி’ தரும் வெற்றி


‘போர் உத்தி’ தரும் வெற்றி


ஒரு நிறுவனத்தின் அல்லது அமைப்பின் தலைமைப் பதவியை அடைவதுதான் பலருக்கும் லட்சியமாக இருக்கிறது.

ஆனால் தலைமைப் பண்புகளையும் உயர்தகுதிகளையும் வளர்த்துக்கொண்டவர்களுக்கு எல்லாம் தலைமைப் பதவி கிடைத்து விடாது. எவன் ஒருவன் ‘போர் உத்திகளை’ சரியாகக் கையாள்கிறானோ அவனுக்குத்தான் தலைமைப் பதவி கிட்டும்.

டெல்லியில் ஓர் அரசாட்சியை நிறுவி, நூறு ஆண்டுகள் வெற்றிகரமாக ஆண்டவர், குத்புதீன் ஐபக். இவர் சுல்தான் முகமது கோரியின் அடிமையாக இருந்தவர், படிப்படியாக உயர்ந்து அரசாட்சியைக் கைப்பற்றியவர். டெல்லியை தலைமையாகக் கொண்டு செயல்பட்ட முதல் இஸ்லாமிய ஆட்சியும் இதுதான்.

குத்புதீன் ஐபக்கின் ஆட்சி, அடிமை வம்ச ஆட்சி என்றே அழைக்கப்பட்டது. சுல்தான் கோரி பெற்ற பிள்ளைக்குக் கிடைக்காத ஆட்சி, அடிமைக்குக் கிடைத்தது. அதிகார மையத்தின் நம்பிக்கையை எப்படியாவது பெறுவதே முதலாவது போர் உத்தி.

தென்னிந்திய வரலாற்றில், சிப்பாயாக இருந்து கமாண்டராக உயர்ந்தவர் மாவீரன் மருதநாயகம். இவர் பிற்பாடு முகமது யூசுப்கான் என்று அழைக்கப்பட்டார்.

போர்த் தந்திரத்தில் பேர் பெற்ற மருதநாயகத்தைப் பாராட்டாத ஆங்கிலத் தளபதிகளே இல்லை. ஆனால் ஒரு கட்டத்தில் இவர் ஆங்கிலேயப் படைகளையே எதிர்த்தார். அதனால் அவர்களால் பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

மருதநாயகம் இறுதியில் கையாண்ட போர் உத்தி மிகவும் தவறானது என்பது நமக்குப் புலப்படுகிறது. எங்கிருந்து அதிகாரம் பெற்றோமோ அந்த அமைப்பையே எதிர்ப்பது தற்கொலைக்குச் சமமானது.

ஆங்கிலத் தளபதிகளுக்கு அல்ல, அவர்களின் எஜமானன் ஆற்காட்டு நவாப்புக்குத்தான் மருதநாயகம் மீது அவ்வளவு வெறுப்பு. ‘மருதநாயகம் செத்தாலும் மீண்டும் உயிர்த்து எழுந்துவிடுவான். எனவே அவனை கண்டந்துண்டமாக வெட்டிப் பல இடங்களில் புதையுங்கள்’ என்றாராம் நவாப்.

இரண்டு முறை தூக்குமேடையில் இருந்து தப்பித்து உயிர் பெற்ற சரித்திர தமிழ் நாயகன், மருதநாயகம். ஆனால் சரித்திரம் சிலருக்கு மட்டுமே சுதந்திரப் போராட்ட வீரர் என்ற உயரிய அங்கீகாரத்தைத் தந்திருக்கிறது. மருதநாயகம் போன்றோர் செய்த தவறுகளை நாமும் செய்யக் கூடாது. அதற்காகவே உங்களுக்கு இந்தப் ‘போர் விதிகள்’...

போர் விதி 1:

படைக்குத் தலைவன், குடும்பத்துக்குத் தந்தை. இவர் களிடம் இருந்துதான் அதிகாரம் பிறக்கிறது. அவர்களின் அன்புக்கு உரியவர்களாக இருந்துவிட்டுப் போய்விடுங்கள். அவர்களின் செயல்பாடுகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அதை விமர்சனம் செய்யாதீர்கள். அவர்களை முந்த முயலாதீர்கள். அது அவர்களுக்கு அச்ச உணர்வையும் நெருக்கடியையும் ஏற்படுத்தும். உங்களை தூக்கித் தூர எறிந்து விடுவர்.

போர் உத்தி 2:

நம்பிக்கைகளில் தலையிடாதீர்கள். மனிதர்கள் நம்பிக்கைப் பிராணிகள். சிலர் சந்தைப் பொருளாதாரத்தையும், சிலர் பொதுவுடமைக் கொள்கையையும் ஆதரிப்பார்கள். அந்த நம்பிக்கை, உண்மையின் அடிப்படை யிலானது மட்டும் என்று சொல்ல முடியாது. உணர்வுகளின் அடிப்படையிலானதும் கூட. தீவிர நம்பிக்கைக்காரர்களிடம் விவாதம் செய்தால் அவர்களுக்குக் கோபமும் வெறுப்பும் ஏற்படும். சண்டை செய்யாமல் வெற்றி பெறுவதே உண்மையான வெற்றி.

போர் உத்தி 3:

எதிரிகளைக் கண்டுபிடியுங்கள். எல்லோரும் உங்களை நேசிக்க மாட்டார்கள். உங்களை நேரடியாகப் போற்றுபவர்களாகவும், மறைமுகமாக எதிர்ப்பவர்களாகவும் கூட சிலர் இருப்பார்கள். முகபாவம், பேச்சு, நடவடிக்கை மூலம் உங்கள் எதிரிகளை அடையாளம் காணுங்கள்.

எதிரிகள் தவறு செய்யும்போது தலையிடாதீர்கள். தமது தவறுகளால் அவர்களே அழிவார்கள். எதிரியின் போர் உத்தியை முறியடியுங்கள், எதிரியை அல்ல. ‘போர்க்களங்களை’ கவனமாகத் தேர்வு செய்யுங்கள். நீண்டகாலப் போர்கள் நல்லது அல்ல. அவை உங்களைப் பலவீனமாக்கிவிடும்.

போர் உத்தி 4:

நற்பெயர் கோட்டையைக் கட்டி எழுப்புங்கள். உங்களுக்கு என்று ஒரு நற்செயல் ராஜ்ஜியத்தை ஒவ்வொரு செங்கல்லாகக் கட்டி எழுப்புங்கள். இது சற்றுக் கடினமானது. ஏனென்றால் இதற்கு, நேர்மை, வீரம், உழைப்பு, பண்பு, நேரம் என்று அதிகமாக தியாகம் செய்ய வேண்டும். நமது நற்பெயர் கோட்டையைப் பலவீனப்படுத்த எதிரிகள் முயல்வார்கள். நேர்மையாகவும், கண்ணியமாகவும், வீரமாகவும், விவேகமாகவும், பண்புடனும் தொடர்ந்து நடந்துகொள்ளுங்கள். அப்போது எதிரிகளால் உங்களை வீழ்த்த முடியாமல் போய்விடும்.

போர் உத்தி 5:

கலவரங்களுக்கு மத்தியில் மன அமைதி. வாழ்வில் சில நேரங்களில் சுனாமி அலைகள் எழும், புயல் வீசும். அப்போது கலக்கமடையாதீர்கள். இந்தப் பிரச்சினையால் நம் தலையா போய்விடும் என்ற மனநிலையுடன் அமைதி காத்திடுங்கள். ஒருவர் வீண்பழி சுமத்தி விட்டார் என்றால், மனவேதனை அடைந்து, சோர்வில் சுருண்டுவிடாதீர்கள். வீசும் புயலைப் பார்த்துச் சிரிப்பவனே வெற்றி பெறத் தகுதியுள்ள வீரன். ‘புயலின் கண்’ எனப்படும் அதன் மத்தியப் பகுதி மிகவும் அமைதியாக இருக்குமாம். அதுபோல நெருக்கடிப் புயல்களின்போது அமைதியாக இருக்கப் பழகுங்கள்.

போர் உத்தி 6:

வெற்றியை விட்டுக் கொடுங்கள். சில வேளைகளில் கர்வம் பிடித்தவரின் அதிகாரம் மேலோங்கி இருக்கும். அவர் உங்களைத் துன்புறுத்துவார். எச்சரிக்கையாக இருக்கவேண்டிய தருணம் அது. உங்களது சாதனைகளையும், திறமை களையும், ஆற்றல்களையும் அப்போது மறைத்துக் கொள்ளுங்கள். அதனால், அவர் எடுத்த போர்வாளை மீண்டும் உறையில் இட்டுக்கொள்வார்.

போர் உத்தி 7:

பலருக்கும் உதவுங்கள். முடிந்தவரை உதவி செய்யுங்கள். கேட்காமலே கூட உதவுங்கள். ஒருவர் தனது மகனைப் படிக்க வைக்கச் சிரமப்படுகிறார் என்றால், அதற்கு உதவுங்கள். அந்த நபர் உங்களுக்கு கடைசி வரை விசுவாசமாக இருப்பார். தாராளமாகப் பண உதவி செய்பவர்களுக்கு ஒரு வசீகரத்தன்மை உருவாகும்.

போர் உத்தி 8:

சச்சரவுகள் வேண்டாம். கல்லூரிகளிலும் அரசியல் இருக்கும், அங்கும் பனிப்போர் நடக்கும். ஆனால் உங்களது போர் மைதானம் அதுவல்ல. கல்லூரி என்பது கல்வியறிவு, மொழி அறிவு, செயல்பாடு அறிவு, மனநிலை அறிவு, மனிதர்களைப் பற்றிய அறிவு ஆகியவற்றைத் திரட்டும் இடம். நீங்களோ வாழ்க்கைப் போர் புரிய வேண்டியவர். எனவே அதற்கான பயிற்சியை மட்டும் நூலகத்திலும், விளையாட்டு மைதானத்திலும், வகுப்பறையிலும் மேற்கொள்ளுங்கள்.

போர் உத்தி 9:

ரகசியம் காத்தல். எதிரிகள் நண்பர்கள் போல வேடமணிந்து, உளவு வேலை பார்ப்பார்கள். எனவே உங்கள் ரகசியங்களை எல்லோரிடமும் கொட்டிவிடாதீர்கள். உங்களது ரக சியங்களை நீங்களே காத்துக்கொள்ளாதபோது, மற்றவர் எப்படிக் காப்பார்? ரகசியத்தைப் பகிரும் துடிப்பு, ஒருவரை வாய் திறக்க வைத்துவிடும். வெளியே போகும் ரகசியம், நம் மானத்தை வாங்கும். அதுபோல மற்றவர் களின் ரகசியம் உங்களுக்குத் தெரிந்தாலும், அதை யாரிடமும் சொல்லாதீர்கள்.

போர் உத்தி 10:

மற்றவர்கள் உங்களைத் தேடி வரட்டும். நீங்கள் மற்றவர்களைத் தேடிப் போவது அதிகாரத்தின் அடையாளம் அல்ல. மற்றவர்களிடம் இல்லாத சிறப்பு உங்களிடம் இருந்தால் அது நடக்கும். நீங்கள் 10-ம் வகுப்பில் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்றால், பள்ளிக்கூடங்களே உங்களைத் தேடிவந்து சேர்த்துக்கொள்ளும். உலகத்தரம் வாய்ந்த மனிதனாக விளங்குங்கள், அப்போது உயர்ந்த மனிதர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

அறிவுரை கூறும் ஞானிகள், நல்லதையே சொல்வார்கள். அன்பு, கருணை, பக்தி, புராணம், பாரம்பரியம், கலாசாரம் என்று போதிப்பார்கள். அது நல்லதுதான். நமக்கும் அவர்கள் மீது நம்பிக்கையும் மரியாதையும் ஏற்படுகிறது.

ஆனால் நீங்கள் ஒரு தொழில் தொடங்கும்போது, பொருள் ஈட்டும்போது, உங்களுக்குப் போட்டியும் வந்து விடுகிறது. அப்போது எல்லாம் சரியாகிவிடும் என்று ஊகிக்காதீர்கள். அது ஆபத்தானது.

போர் உத்திகளைக் கையாளும் ஒரு தளபதியாக இருந்து போர்க்களத்தில் எதிரிகளைச் சந்தியுங்கள். 

No comments:

Popular Posts