இளைஞர்களை எழுச்சி பெற வைத்த ஏந்தல்
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி,
வருமானவரி அலுவலர்
நா ளை (ஜனவரி 12-ந் தேதி) சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள். (தேசிய இளைஞர் தினம்).
ஒரு சமயத் துறவியாக இருந்த போதிலும், உலகின் அனைத்து மக்களாலும் போற்றப்படுபவராக, இறை நம்பிக்கை இல்லாத பலரையும் கூடத் தன் பக்கம் ஈர்க்கிறவராக சுவாமி விவேகானந்தர் விளங்குகிறார். காரணம் அவரது சம நோக்கு; சமுதாயப் பார்வை. அவரின் திருமுகத்தில் தெரியும் தீட்சண்யம், கரிய விழிகளில் காட்டும் கூர்மை, கட்டிய கரங்களில் வெளிப்படும் கம்பீரம், நின்ற தோற்றத்தில் நம்முள் கடத்தும் மன உறுதி... மனித குலத்தில், வெகு அபூர்வமாக மிகச் சிலருக்கு மட்டுமே, இந்த ‘வசீகரம்’ வாய்க்கிறது. ஓராயிரம் சொற்களில் பேசிப் பேசிப் புரிய வைக்க வேண்டிய செயல் திறனின் அவசியத்தை, தனது புறத் தோற்றத்தின் மூலமே எளிதில் விளங்க வைக்கிற அதிசயம்தான், எண்ணற்றோரை, அவரின் சிந்தனைகளைத் தேடிப் பிடித்துப் படிக்கத் தூண்டுகிறது. விவேகானந்தர் ஆற்றிய உரைகளின் ஒவ்வொரு வரியும், வாசகர் மனங்களில் ஒரு புதிய உத்வேகத்தைப் புகுத்துகிறது. உடனடியாகச் செயல் புரியத் தூண்டுகிறது. இதுவே அவரின் ஆகப் பெரிய வெற்றி.
ஆமை, நத்தை, வாத்து.. இவற்றுக்கு எல்லாம் ஒரு தனிக் குணம் உண்டு. பொறுமை. அதாவது, மெதுவாகச் செல்லும். எறும்பு, தேனி, முயல்...? அப்படியே எதிர். எப்போதுமே வேகம்தான். பொறுமையோ, வேகமோ தன்னளவில் நல்லதோ தீயதோ அல்ல. யார் யார் எவ்வப்போது பொறுமை அல்லது வேகம் காட்ட வேண்டும்..? சூட்சுமம், திட்டம், தீர்வு, வெற்றி எல்லாம் இதில்தான் அடங்கி இருக்கிறது. இதனைத் துல்லியமாக எடுத்துச் சொன்னவர் சுவாமி விவேகானந்தர். ஒரு முதியவரைப் போலவோ, அன்றி, ஒரு குழந்தையைப் போலவோ ஓர் இளைஞன் சிந்திக்கவோ, செயல்படவோ முடியாது; கூடாது. இசை மகத்தான கருவி. அதனால், ஒருவரின் மனதை மயக்கலாம்; மகிழ்விக்கலாம். அதே போல, அது ஒரு வலிமையான ஆயுதமும் கூட. தூங்கிக் கிடப்போரை, எழுந்து ஓட வைக்கலாம். மெல்லிசை கேட்டுக் கேட்டு நம் நாட்டு இளைஞர்கள், கோழையாகிப் போய்விட்டார்கள். நம் நாட்டில் முரசுகள் முழங்குவது இல்லையா..? பறைகள் ஒலிக்கப் படுவது இல்லையா? என்று சுவாமி விவேகானந்தர் கேள்வி எழுப்பும் போதுதான், மனம் ஒரு கணம் சிந்திக்கவே செய்கிறது. தாலாட்டுகளும் தத்துவங்களும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் இருக்கட்டும். இளைஞர்கள், தலையாட்டி பொம்மைகள் அல்லர்; தலைமை ஏற்கப் போகிறவர்கள். தத்தம் துறையில் சாதிக்கப் பிறந்தவர்கள். இவர்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம், ‘செயல்’. செயல் அன்றி வேறில்லை.
இந்தச் செயல் வேகம்தான், விவேகானந்தர் தம் வாழ்நாள் முழுக்க, இளைஞர்களிடம் வலியுறுத்தி வந்த ஒரே வழிமுறை. என் சகோதரர்களே, நாம் எல்லோரும் கடுமையாக உழைப்போம். தூங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்தியா நம்முடைய உழைப்பைப் பொறுத்தே அமையப் போகிறது. என்னதான் ஆழ அமுக்கினாலும், காற்று நிரம்பிய பந்து, தண்ணீரில் இருந்து வெளி வரவே செய்யும். இளைஞர்களின் ஆற்றலும் அப்படித்தான். உலக நியதிகள், வாழ்க்கையின் சவால்கள் அவர்களை அடிமைப்படுத்தி விட முடியாது. விவேகானந்தருக்கு இதில் முழு நம்பிக்கை இருந்தது. இளைஞர்களின் முன்னேற்றம், ஒருக்காலும் எந்த நிலையிலும் நின்று விடுதல் கூடாது. அது ஒரு தொடர்வினை. ஒரு இலக்கை எட்டிப் பிடித்து விட்டால், அந்தக் கணமே அடுத்த உச்சிக்கான முயற்சி தொடங்கிவிடுகிறது; தொடங்கி விட வேண்டும். இதுதான், விவேகானந்தரைச் சரியாகப் பின்பற்றுகிற வழிமுறை. அவர் வலியுறுத்திச் சொன்ன மற்றொரு கருத்துதான், இன்று மிக முக்கியமாகப்படுகிறது.
“மற்றவர்களைக் காப்பி அடிக்காதீர்கள்”. காப்பி அடிப்பது ஒருபோதும் நாகரிகம் ஆகாது. நான் அரசனுடைய உடை தரிக்கலாம். ஆனால் அது என்னை அரசன் ஆக்கி விடுமா? சிங்கத்தோல் போர்த்தினாலும் கழுதை எந்தக் காலத்திலும் சிங்கம் ஆக முடியாது. காப்பியடித்தல், கோழைத்தனமானது இந்தப் போலித்தனம் ஒருபோதும் முன்னேற்றத்தைத் தராது”. ஒவ்வொரு இளைஞனும் சுயமாகச் சிந்தித்து சொந்தமாக உழைத்து முன்னேற வேண்டும். படிப்பு, அனுபவம் மற்றும் சமூகம் கற்றுத் தருகிற எல்லாப் பாடங்களையும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால், ‘வளர்ச்சி’ தனக்கே உரித்தான தனித்தன்மை உடையதாய் இருத்தல் வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
“விதையை நிலத்தில் போடுகிறீர்கள். அது வளர ஏராளமான மண்ணையும் காற்றையும் தண்ணீரையும் அளிக்கிறீர்கள். விதை, கன்றாகவும் பிறகு பெரிய மரமாகவும் வளர்கிறது. அந்த விதை மண்ணாக மாறியதா, காற்றாக மாறியதா, இல்லை, நீராகத்தான் மாறியதா? அது தனக்கு அளிக்கப்பட்ட எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு, தன் இயல்புக்கு ஏற்றவாறு செடியாகியது, பெரிய மரமாக வளர்ந்தது. உங்கள் நிலையும் அப்படி இருக்கட்டும்”. தனது வாழ்நாள் முழுக்க, இளைஞர்களைச் செயல்புரிய வைப்பதிலேயே விவேகானந்தர் முழு கவனம் செலுத்தினார். வெட்டிப் பேச்சில் உங்கள் ஆற்றல்களை வீணாக்குவதற்கு பதிலாக, ஏதாவது வழி கண்டுபிடித்தீர்களா..? என்கிற அவரின் கேள்விக் கணை, சிந்தனையைத் துளைக்கட்டும்; தூக்கம் கலையட்டும். எதிர்காலத்தைப் பற்றி முடிவு செய்ய ஏற்ற தருணம், உங்களிடம் இளமைத் துடிப்பு ததும்புகின்ற இந்த நேரம்தான்; களைத்து ஓய்ந்து போகும்போது அல்ல. இளமையின் வேகமும் உற்சாகமும் இருக்கும் இந்த நேரம்தான் உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கு உரிய நேரமாகும். வேலை செய்யுங்கள். அதற்கான நேரம் இதுதான்.
நமது சென்னையில் அவர் கூறிய இந்த வாசகம், அனைத்தையும் கூறி விடுகிறது; நமது எண்ணங்களைக் கீறி விடுகிறது. ஒரு துளி செயல், இருபதாயிரம் வெற்றுப் பேச்சுகளை விடச் சிறந்தது.
Friday, 11 January 2019
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment