Thursday, 10 January 2019

ஊழலை ஒழிக்க உறுதி கொள்வோம்...!

ஊழலை ஒழிக்க உறுதி கொள்வோம்...! பேராசிரியர் மா.ராமச்சந்திரன், உடன்குடி. வே கமாக வளர்ந்து வரும் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு இருந்தாலும் ஊழல் மலிந்த நாடு என்ற சிறுமையும் அதற்கு இருக்கத்தான் செய்கிறது. வளர்ந்த நாடுகளிலும் கூட ஊழல் இருக்கிறது என்று ஆறுதல் கொண்டாலும் நம் நாட்டில் நிலவி வரும் ஊழல் அதன் விரைந்த வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. ஊழல் என்ற சொல்லுக்கு நரகம், அருவருப்பு, தாறுமாறு என்று அகராதிகள் பொருளுரைக்கும். அருவருக்கத்தக்கது ஊழல் என்பது இதனால் புலனாகும். ஏனெனில் ஒரு நாட்டின் வளர்ச்சியைச் சிதைத்து, நிலைகுலையச் செய்வது ஊழல். ஊழல் என்னும் முறைகேட்டைச் சமுதாய ஒழுக்கக்கேடு என்று கூறலாம். ஊழல் என்று பொதுவாகக் குறிப்பிடப்பெறும் இது முறையற்ற செயல், முறையற்ற பணப்புழக்கம் என்று இரண்டு வழிகளில் நடைபெறுகிறது. முறையற்ற செயல் என்பது அதிகார துஷ்பிரயோகம். அதாவது செல்வாக்கைப் பயன்படுத்தித் தமக்கு வேண்டியவர்களுக்குச் சலுகை காட்டும் கீழ்த்தனம். தகுதியுடையோரைப் புறந்தள்ளிவிட்டு சிபாரிசின் பேரில் தகுதியற்றவர்களை நியமிக்கும் கள்ளத்தனம். அரசுப் பணிகளிலும் அரசு ஒப்பந்தங்களிலும் இத்தகைய நடைமுறையைக் காணலாம். தனியார் நிறுவனங்களிலும் கூட இத்தகு அவலங்கள் பெருகிவிட்டன. சில நேரங்களில் பணம் கைமாறிக்கொண்டும் சிபாரிசு நடைபெறுகிறது. முறையற்ற பணப்புழக்கம் என்பது லஞ்சம். காரியம் ஆகவேண்டும் என்பதற்காக உயர் அதிகாரிக்கோ, அரசியல்வாதிக்கோ, வேறு எவருக்கோ முறைகேடாகக் கொடுக்கும் பணம் அல்லது பொருள் லஞ்சமாகும். பத்திரப்பதிவு செய்ய உரிய கட்டணம் போக சார்பதிவாளருக்கும் பணம் கொடுக்க வேண்டியிருக்குது” என்று ஒருவர் புலம்புகிறார். “பட்டா மாறுதலுக்கு அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணம் போக நில அளவையாளருக்கு ஐந்தாயிரம் கொடுத்தேன்” என்று ஒருவர் அங்கலாய்க்கிறார். “பள்ளி ஆசிரியர் பணிக்கு நாற்பது லட்சம் கேட்கிறார்கள்” என்பது ஒருவரின் ஆதங்கம். பிள்ளைக்கு எல்.கே.ஜி.யில் இடம் கிடைக்க கணிசமாக ஒரு தொகை வேண்டும்” என்று கவலைப்படுகிறார் ஒரு தந்தை. “அரசு ஒப்பந்தம் பெறுவதற்கு இரண்டு சதவீதம் கமிஷன் கொடுத்தாக வேண்டும்” இது ஒப்பந்தக்காரர் ஒருவரின் புலம்பல். “அரசு தரும் மானியத்தைப் பெறுவதற்கும் ஒரு தொகை கொடுத்தாக வேண்டும்” என்று ஒருவர் கண்ணீர் வடிக்கிறார். “பணியிட மாறுதலுக்குப் பல லட்சம் கேட்கிறார்” என்று ஒருவர் பதறுகிறார். நாடுகளுக்கிடையே நடைபெறும் ஒப்பந்தங்களிலும் ஊழல் மிகுந்துள்ளதாக அன்றாடம் செய்திகள் வருகின்றன. மாதச்சம்பளம் வாங்கும் உயர் அதிகாரிகளும், மக்கள்பணி ஆற்றும் அரசியல்வாதிகளும் லஞ்சக் கையேந்திகள் ஆகிவிட்டனர். சேவை செய்யவேண்டிய பள்ளி நிர்வாகங்களோ பணம் பறிக்கும் கொள்ளைக்கும்பல் ஆகிவிட்டன. இப்படி எல்லாத்துறைகளிலும் கையூட்டு சர்வசாதாரணம் ஆகிவிட்டது. ஒரு காலத்தில் இலைமறை பிஞ்சாக இருந்த ஊழல் இப்போது இலையை மறைக்கும் பெரும் பூசணிக்காயாகப் பருத்துவிட்டது. ‘ஊழல் என்பது குற்றமே இல்லை. கொடுப்பதும் வாங்குவதும் தப்பில்லை. இது சகஜம். ‘இப்படி ஒரு மனநிலை இளையோரின் மனதில் வேரூன்றிவிட்டது. இப்படி ஊழல் மலிந்ததற்கு யார் காரணம்? அரசியல்வாதிகளா? அதிகாரிகளா? பொதுமக்களா? இவர்கள் மூவருந்தான். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் தங்களிடமுள்ள அதிகாரத்தால் எதையும் செய்யலாம் என்று துணிந்துவிட்டார்கள். பேராசையும், குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணமும் ஊழல் செய்ய அவர்களை உந்தித்தள்ளுகிறது. அதேபோல் எந்த வழியிலாவது காரியத்தை முடிக்கவேண்டும் என்ற பொதுமக்களின் ஆர்வம் அவர்களை ஊழலுக்குத் துணைபோகச் செய்கிறது. மொத்தத்தில் ‘யார் எப்படிப் போனால் நமக்கென்ன. நம்ம காரியம் ஆனால் சரி’ என்னும் மக்களின் சுயநல உணர்வுதான் ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கிறது. லஞ்சம் அல்லது சிபாரிசு என்ற பெயரில் ஒருவரின் நியாயமான உரிமையை மற்றொருவர் தட்டிப் பறிக்க நினைப்பது அநியாயமாகும். ஊழல் தடுப்புச்சட்டம் 1988-ல் இருந்தே நடைமுறையில் உள்ளது. அமைச்சர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சட்டம் தண்டனை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறது. லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றமென்று எல்லோருக்கும் தெரியும். போதாக்குறைக்கு லோக் ஆயுக்தா சட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் ஊழல் ஒழியாமல் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. ஊழலை ஒழிக்க முடியாதா? நாட்டை விட்டு அதனை வெளியேற்ற முடியாதா? முடியும். ஊழலின் ஊற்றுக்கண் அடைக்க முடியாத ஒன்று அன்று. அடைக்கக் கூடியதுதான். அதற்கு மக்களின் மனப்பான்மை மாறவேண்டும். அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பொதுமக்களுள் அடக்கம்தான். ஒட்டுமொத்த சமுதாயமும் மனம் வைத்தால் ஊழல் எளிதாக ஒழிந்துவிடும். ஊழல் என்பது ஒரு வகையான திருட்டு. அதனால் வரும் பணம் திருட்டுப் பணம். இதனை ஊழல்வாதிகள் உணரவேண்டும். லஞ்சம் கொடுத்துக் காரியம் முடிக்க நினைக்கும் மக்களும் தாம் திருட்டுத்தொழிலுக்கு உடந்தையாக இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த மனப்பான்மை உருவாவதற்குத் தன்னலமில்லாப் பொதுநலன் கருதும் பெருந்தன்மை இருக்க வேண்டும். தொண்டுள்ளம் கொண்ட அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வரவேண்டும். கடமை உணர்வும், கண்ணியமும் கொண்ட அதிகாரிகள் பணியில் அமரவேண்டும். மக்களிடம் நேரிய நெஞ்சம் இருக்கவேண்டும். இப்படியொரு சூழல் அமைந்தால் ஊழல் ஒழிந்துவிடும். பொத்தல் உள்ள குடத்தில் எவ்வளவு தண்ணீர் ஊற்றினாலும் குடம் நிரம்பாது. அதனைப் போன்று ஊழல் நிறைந்த நாட்டில் எத்தனைத் திட்டங்கள் தீட்டி எவ்வளவு நிதி ஒதுக்கினாலும் குறிப்பிட்ட வளர்ச்சியை அடையமுடியாது. எனவே நாடு நல்வளர்ச்சி பெறுவதற்கு ஊழலை ஒழிக்க உறுதிகொள்வோம்.

No comments:

Popular Posts