உறவு இன்றி அமையாது உலகு
சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறை தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி.
ந ம் வாழ்வின் வசந்த நிமிடங்கள் இனிய உறவுகளால் உருவாக்கப்படுகிறது. ஒன்றின் விழுது, அடுத்தடுத்து வேராய் தரை நோக்கிக் கால்பரப்பிப் பாரத்தைத் தாங்குவதால் குடும்பமும் ஒருவகையில் கால மரம்தான். பாட்டி, தாத்தா, அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, மாமா, அத்தை, தம்பி, தங்கை, மகன், மகள் என உறவுகளால் இணைத்து ஒவ்வொரு குடும்பங்களும் நிம்மதியின் சன்னிதிகளாகக் காலம் கட்டமைத்திருக்கிறது.
திருக்கடையூர் போனால் மூத்தோரின் எண்பதுக்கு எண்பது கல்யாணக் காட்சிகளைக் காணமுடிகிறது. அறுபது ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்து பேரன் பேத்திகள் எடுத்து, அவர்களுக்கு முன்னால் பாட்டிக்குத் தாலிகட்டும் பொழுதில் எண்பது வயதுப் பெரியவரின், பெரிய மனிஷியின் முகத்தில்தான் எவ்வளவு வெட்கம் கலந்த பெருமிதம்.
அரை நூற்றாண்டு இல்லறத்தில் எத்தனை சிகரங்களை, எத்தனை சறுக்கல்களை அவர்கள் சந்தித்திருப்பார்கள். ஆனாலும் அவற்றைத் துணிச்சலோடு எதிர்கொண்டு இதோ இந்த நிமிடம் வரை அவர்களை அன்போடு வைத்திருப்பது அவர்கள் கொண்டாடி கொண்டிருக்கும் உறவுகள்தான்.
ஆனால் இன்றைய கால கட்டத்தில் உறவுகளின் இனிய பக்கங்களில் உன்னதமாகப் பதிவு செய்யப்பட வேண்டியவர்களை நாம் வேரோடு பிடுங்கிக்கொண்டிருக்கிறோம். சில நிமிட சினத்தால் சின்னாபின்னமாகிப்போன உறவுகள் எத்தனை? நம் இனிய இருப்பை வெறுப்பால் ஏன் நிரப்பவேண்டும்? புரிதல்களில் சரிதல்கள் ஏற்பட்டு கண்ணாடிபோல் கண்எதிரே நொறுங்கிப் போவதைப் பார்க்கிறோமே.
வீட்டில் மனம் விட்டுப் பேசும் பேச்சு சுருங்கிவிட்டது, கைக்கொரு செல்போனோடு மாயத்திரையில் மயங்கி ஆளுக்கொருபக்கம் தலைகுனிந்தபடி தனித்தனியே சிரித்துக்கொண்டிருக்கிறோம். நேரில் சந்தித்து அரட்டை அடித்துச் சிரித்த உறவுகள் இன்று வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்திகள் அனுப்பி கொண்டிருக்கிறார்கள். முகநூலில், பத்தாண்டுகளுக்கு முன் எப்படி இருந்தேன் தெரியுமா? என்று ஊருக்குக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
கூட்டுக் குடும்பங்களின் சிதைவு குடும்ப உறவுகளைப் பெரிதும் பாதித்துள்ளது. பின்பற்ற வேண்டிய முன்மாதிரி உறவுகள் இல்லாத நிலையில் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. பிடிவாதங்களும் சந்தேகங்களும் கணவன்-மனைவி உறவைச் சிதைத்து சின்னாபின்னமாக்கி அவர்களை நீதிமன்றங்களில் கொண்டு நிறுத்திக்கொண்டிருகின்றன.
சொந்த கிராமத்திற்குச் சென்று உறவினர்களுடன் ஒன்றாக இணைந்து குலதெய்வ வழிபாடுகள் நடத்திய காலங்கள் பழங்கனவாய் அப்பால் போய்க்கொண்டிருக்கின்றன. குழந்தைகளுடன் ஒன்றாக உறவினர் இல்லத்திருமணத்திற்குச் செல்லும் வழக்கம் குறைந்துவிட்டது.
அன்பான இதயங்களால் நிரப்பவேண்டிய இல்லங்களைப் பொருட்களால் நிரப்பி வைத்திருக்கிறோம். வரவுக்கு ஏற்ப செலவு செய்யக் குழந்தைகளைப் பழக்கும் இடம் இல்லம்தான். விட்டுக்கொடுத்தலையும் பொறுமையையும் எல்லோரிடமும் அன்பாகப் பழகுவதையும் சகமனிதர்களை வேறுபாடு இல்லாமல் ஏற்றுக்கொள்வதையும் குடும்பம்தான் கற்றுத்தருகிறது.
குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும்தான் நாம் இவ்வளவு பாடுபடுகிறோம், ஆனால் அவர்களுடன் நிம்மதியாக இருக்கமுடியவில்லை எனும் போது எதற்காக இப்படி ஓடியாடி உழைக்கிறோம் என்று நம்மை நாமே கேட்கத் தோன்றுகிறது. நம் வாழ்வின் முதல்பகுதி பொருளைத் தேடி ஓடுவதிலும் இரண்டாம் பகுதி அவற்றைக் காப்பற்றுவதிலுமே கழிகிறது.
பொதுவாழ்வில் சாதனை படைத்த மனிதர்கள்கூடக் குடும்பவாழ்வில் மனஅழுத்தம் தாங்கமுடியாமல் உயிரை மாய்த்துக்கொள்வதைக் காண்கிறோம். இன்றைய காலகட்டத்தில் காதலை விட கள்ளக்காதல் மேன்மையானது, புனிதம்மிக்கது என்ற மோசமான செயல்பாடுகளை நோக்கி சமூகம் சென்று கொண்டிருக்கிறது.
இந்த கொடிய நோயின் பிடியில் சிக்கி பலர் தங்கள் குடும்ப உறவுகளை தொலைத்து வருகின்றனர். இந்த மோசமான காதலுக்காக பெற்ற மகனை உயிரோடு எரித்தல், கணவனை கொள்ளுதல், மனைவியை கொள்ளுதல் என்ற கொடூரமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவதை காண்கிறோம்.
இந்த கொடூர எண்ணங்களுக்கு எல்லாம் விதை போடுவது உறவுகளை விட்டு மெல்ல, மெல்ல பிரிந்து வருவதுதான். கணவனோ, மனைவியோ, பிள்ளைகளோ மனம் விட்டு பேசினால் இத்தகைய மோசமான செயல்களை நோக்கி எண்ணம் ஓடவே செய்யாதே.
இந்த வாழ்வில் எல்லாம், வாழப் பொருள்தேட ஓடியோடி ஒருவினாடியில் மூச்சு இறைக்க நின்று திரும்பிப் பார்க்கும்போது நாம் தூக்கிவளர்த்த குழந்தைகள் பெரியவர்களாகி நம்மை விட்டு விலகி நிற்கிறார்கள், வாழ்வின் பொருளை இழந்து நிற்கிறோம். அப்போது நாம் விலக்கிவைத்த உறவுகள் நம்மைவிட்டு வெகுதூரத்தில் போய்க்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை அனுபவங்களைக் கற்பிக்கும் செய்முறைக்கூடம். கற்றுக்கொள்வதற்கும் வாழ்விலிருந்து பெற்றுக் கொள்வதற்கும் நம் உறவுகளிடம் நிறைய உண்டு.
நேற்று என்பது முடிந்த ஒன்று. நாளை என்பது வந்தால் உண்டு. இன்று மட்டுமே உண்மை என்று உணர்ந்து நம்மைப் போற்றும் உறவுகளை நாம் போற்றினால் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாட்களும் சுகமே!
Tuesday, 29 January 2019
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment