Sunday 16 December 2018

வங்கி கடன் வட்டியில் சில மாற்றங்கள்...!

வங்கி கடன் வட்டியில் சில மாற்றங்கள்...! டாக்டர். சோம வள்ளியப்பன் இ ந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, வருகிற 2019-ம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி முதல், தனி நபர்களும் சிறு குறு நிறுவனங்களும் வங்கிகளில் வாங்குகிற கடனுக்கான வட்டி விகிதங்கள் கணக்கிடப்படும் முறைகளில் மாறுதல் ஏற்படப் போகிறது. இரு சக்கர வாகனங்கள், கார்கள் போன்றவற்றுக்கு வாங்கும் ‘வாகனக் கடன்’கள், வீடு கட்ட வாங்கும் ‘ஹவுசிங் லோன்’கள், தனிநபர்கள் செலவுகளுக்காக வாங்கும் ‘பர்சனல் லோன்’கள் மற்றும் வியாபாரம், தொழில் செய்பவர்கள் வாங்குகிற ‘பிசினஸ் லோன்’ கள் போன்றவற்றுக்கு, கடன் வாங்குகிற நேரத்தில் நிலவுகிற வட்டி விகிதத்திலேயே, கடன் கட்டி முடிக்கும் வரை, வட்டித்தொகை கணக்கிடுவது, ‘பிக்செட் ரேட்’ கடன்கள். கடன் பணத்தையும் அதற்கான வட்டிப் பணத்தையும் பல்வேறு தவணைகளாக கட்டி முடிக்க சில ஆண்டுகள் ஆகும். அந்த கால கட்டத்தில் வெளிச் சந்தையில் வட்டி விகிதங்கள் மாறும். கடன் வாங்கும் போது இருக்கும் வட்டி விகிதத்தையே அந்த ‘கடன் காலம்‘ முழுவதற்கும் கணக்கிடாமல், அவ்வபோது சந்தையில் ஆகும் மாறுதல்களுக்கு ஏற்ப, வட்டி விகித்ததையும் மாற்றிக் கணக்கிடுவது, ‘புளோட்டிங் ரேட்’கடன்கள். பொதுவாக ‘பிக்செட் ரேட்’ வட்டிவிகிதம் , அதே சமயம் கிடைக்கும் ‘புளோட்டிங் ரேட்’ வட்டிவிகித்தை விட ஒன்று முதல் ஒன்றரை சதவிகிதம் வரை கூடுதலாக இருக்கும். காரணம், கடன் கொடுக்கப்பட்ட பின் சந்தையில் வட்டி விகிதங்கள் உயர்ந்தால், கடன் கொடுத்த வங்கியால் வட்டி விகிதத்தைக் கூட்ட முடியாது. நாட்டில் நிலவும் பணவீக்கம், ரிசர்வ் வங்கியின் ‘ரிப்போ ரேட்’ வட்டி விகிதம் மற்றும் நாட்டில் பணத்திற்கு இருக்கும் தேவை ஆகியவற்றைப் பொறுத்து விலைவாசி ஏறி இறங்குவது போல, கடனுக்கான வட்டி விகிதங்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு பாரத ஸ்டேட் வங்கியின் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதங்கள் வருமாறு:- 1994-ம் ஆண்டில் 16 சதவீதம்; நவம்பர் 1995-ல் 18.75சதவீதம் மே 2000- ல் 12.75 சதவீதம் ஏப்ரல் 2002-ல் 11 சதவீதம் மே 2003-ல் 9.25 சதவீதம் நவம்பர் 2004-ல் 8.75 சதவீதம். 2016-ல் 9.7 சதவீதம் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு, ‘புளோட்டிங் ரேட்’ வட்டி விகிதங்கள் பற்றியது. ‘பிக்செட் ரேட்’ கடன்கள் பற்றியது அல்ல. கடன் வாங்குகிறவர் இந்த இரண்டு முறைகளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யலாம் என்றாலும், சில சமயங்களில், சில வகையான கடன்களுக்கு, வங்கிகள் ‘பிக்செட் ரேட்’ கிடையாது என்று சொல்வதும் உண்டு. பல்வேறு காலகட்டங்களில் வட்டி விகிதங்கள் மாறுவது இயல்புதான். ஆனால் ஒரே நேரத்தில் எல்லா வங்கிகளிலும் ஒரே அளவு வட்டி விகிதம் இல்லை என்பதையும் கவனித்திருக்கலாம். காய்கறிகள், மளிகை போன்றவற்றில் ஒரே பொருட்களுக்கு, கடைக்கு கடை ஒன்றிரண்டு ரூபாய்கள் விலை வித்தியாசம் இருப்பது போல, வங்கிகள் வசூலிக்கும் வட்டி விகிதங்களிலும் சிறிய வேறுபாடுகள் இருக்கின்றன. அந்த வேறுபாடுகளுக்கு அந்தந்த வங்கிகளின் நிர்வாகங்களே காரணம். மொத்த சந்தையில் பொருளை வாங்குகிற எல்லா சில்லரை வியாபாரிகளும், அதே பொருளை ஒரே விலையில் விற்காதது போல,அவரவர் செலவுகள், லாப அளவுகள் மற்றும் விற்பனை செய்யும் திறன் வாங்குபவர்களின் தேவைகள், விற்கப்படும் இடம் ஆகியவற்றை பொறுத்து வாங்கிய விலையின் மீது ‘கூடுதல் தொகை’ வைத்து விற்பது போல வங்கிகளும் செய்கின்றன. பணத்தைப் பொறுத்தவரை நாட்டில், மத்திய ரிசர்வ் வங்கிதான் ‘பெரும்’ மற்றும் ‘மொத்த’ வியாபாரி. அவர் நிர்ணயிக்கும் விலைதான் ‘ரிப்போ ரேட்’ எனும் அது வங்கிகளுக்கு கொடுக்கும் வட்டி விகிதம். அதன் அடிப்படையில்தான் நாட்டில், சந்தையில், வங்கிகளில் வட்டி விகிதங்கள் மாறுகின்றன. ரிசர்வ் வங்கி ‘ரிப்போ ரேட்’டை அதிகரித்தால், எல்லா வங்கிகளும் அவர்கள் கடன்களுக்கு வசூலிக்கும் வட்டியை அதிகரிப்பார்கள். அதே போல ‘ரிப்போ ரேட்’ டை ரிசர்வ் வங்கி குறைத்தால், வங்கிகளும் அவர்கள் வசூலிக்கும் வட்டியைக் குறைக்கவேண்டும். ஆனால் அப்படி செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. மேலும், ‘ரிப்போ ரேட்’ தவிர பல்வேறு விஷயங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு கணக்கிடப்படும் ‘மார்ஜினல் காஸ்ட் ஆப் பண்ட்ஸ் லெண்டிங் ரேட்’ க்கு மேல் ‘ஒரு குறிபிட்ட சதவிதத்தை’ வைத்து (அதை ‘ஸ்பிரெட்’ என்கிறார்கள்), அந்த விகிதத்தில்தான் ‘புளோட்டிங் ரேட்’ கடன்களுக்கான வட்டி விகிதம் கணக்கிடப்படவேண்டும். இதெல்லாம் கடன் வாங்குகிறவர்களுக்குத் தெரிவதில்லை. கடன் வாங்கும் நேரத்திலாவது கொஞ்சம் கவனிப்பார்கள், விசாரிப்பார்கள். வங்கி அதிகாரிகளும் ஓரளவு சொல்வார்கள். ஆனால் அதன்பின், 5 அல்லது 10, 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு கடன்கள் தொடரும். அந்த காலகட்டங்களில் ‘ரிப்போ ரேட்’ அல்லது வெளிச்சந்தையில் வட்டி விகிதங்கள் குறையும் போது, அந்த அனுகூலம், கடன் வாங்கியவர்களுக்கு உரிய அளவில் போய்ச் சேர்வதில்லை. மேலும் வங்கிகள் வைக்கும் ‘மேல் தொகை’யான ‘ஸ்பிரெட்’ என்ன, எவ்வளவு என்பதும் கடன் பெறுகிற அனைவருக்கும் தெரியாது. அதில் மாறுதல்கள் செய்யப்படும் போதும் அவர்களுக்குத் தெரிய வராது.மேலும் கடன் கேட்பவரின் செல்வாக்கு, திறமைகளை பொறுத்து இந்த ‘ஸ்பிரெட்’ மாறும். எளிமையானவர்கள் கூடுதலாக கட்டவேண்டியதுதான். இந்த குறைகளை சரி செய்வதற்காக ரிசர்வ் வங்கி, ஏப்ரல் 2019 முதல், புளோட்டிங் ரேட் கடன்களுக்கான வட்டி விகிதம் கணக்கிடும் முறையை மாற்றி அறிவித்திருக்கிரது. அந்த புதிய முறைப்படி, வங்கிகள், அவர்கள் வழங்கும் கடன்களுக்கு வட்டி விகிதம் கணக்கிட, ரிசர்வ் வங்கியின் ‘ரிப்போ ரேட்’ அல்லது அரசின் 91 நாள் ‘டிரஷரி பில்’ லின் (பாண்ட் ) வட்டி யில் அல்லது 182 நாள் ‘டிரஷரி பில்’ லின் (பாண்ட் ) வட்டி யில் அல்லதுஎப்.பி.ஐ.எல்.தெரிவிக்கும் வேறு ஏதாவது ஒரு ‘பென்ச் மார்க்‘ வட்டி விகிதம்ஆகிய ஏதாவது ஒன்றுடன் இணைத்துக்கொண்டு, அதன் மீது ஒரு ‘ஸ்பிரெட்’ வைத்து, அதன் பின் கடன் காலம் முழுதும் ‘ஸ்பிரெட்’ ல் மாற்றம் இன்றி, சந்தையில் அந்த நான்கில் எதோடு இணைத்துகொண்டார்களோ அதன் போக்கில், கூட்டியோ குறைத்துக்கொண்டே இருக்கவேண்டும். இப்படி நடக்கிறதா என்பதை கடன் வாங்கியவர்கள், வங்கி உதவி இல்லாமலேயே தெரிந்துகொள்ளமுடியும். ரிசர்வ வங்கியின் இந்த நடவடிக்கையால், வசூலிக்கப்படும் வட்டி விகிதங்கள் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாறுதல், வசூலிக்கப்படும் வட்டித் தொகையில் வெளிப்படைத் தன்மை ‘கடன் காலம்’ முழுமைக்கும் ஆரம்பத்தில் நிர்ணயம் செய்யபட்ட அதே ‘ஸ்பிரெட்’ விகிதம் குறிப்பிட்ட வகை கடன்களில் ஒரே வட்டி விகிதம் ஆகிய பலன்கள் வங்கிகளில் ‘பர்சனல் லோன்’, வாகன கடன்கள், வீடு கட்ட வாங்கும் கடன்கள் மற்றும் சிறுகுறு தொழில் கடன்கள் வாங்குவோர் அனைவருக்கும் கிடைக்கும். கூடுதல் வழிகாட்டுதல்கள், செய்யப்பட வேண்டிய வழிமுறைகள் 2018 டிசம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் இந்த புதிய முறை 1.4.2019 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது.

No comments:

Popular Posts