Follow by Email

Saturday, 29 December 2018

இதயம் கவர்ந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்...!

இதயம் கவர்ந்த இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார்...! நம்மாழ்வார் தங்க.சண்முகசுந்தரம்,மாநில தலைவர், அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் விவசாய பிரிவு. நா ளை (டிசம்பர் 30-ந் தேதி) இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தினம். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு என்ற கிராமத்தில் 1938-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி விவசாய குடும்பத்தில் கோவிந்தசாமி-அரங்கநாயகி தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் நம்மாழ்வார். தன்னுடைய இயற்கை அறிவை பயன்படுத்தி விவசாயிகள் மட்டும் இன்றி அனைத்து துறையினரையும் தன் பக்கம் ஈர்க்க செய்த நிகழ்வுகள் நெகிழச்செய்தன. ஆண்டுதோறும் செயற்கைகோள் வரை படத்தில் வறண்ட பூமியாக பல மில்லியன் ஆண்டுகள் ஆனாலும் மாறாது என கைவிடப்பட்ட நிலத்தை குறுகிய காலத்தில் வளமாக்கி சாதனை படைத்தது நம்மாழ்வாரின் சாதனை மைல்கல்லே என்று சொன்னால் மிகையாகாது. கரூர் மாவட்டம் கடவூர் கிராமத்தில் வானகம் என்ற இயற்கை வேளாண்மை பண்ணையை தேர்ந்தெடுத்து அதில் இயற்கை முறையில் வேளாண்மை பணி செய்யும் அளவிற்கு 3 வருடங்களில் தயார்படுத்தியது அனைத்து விஞ்ஞானிகளின் பார்வையையும் இவரது பக்கம் திரும்ப வைத்தது. இயற்கை வேளாண் தொழில்நுட்பத்தை அவர் உலகிற்கு உணரவைத்தார். தஞ்சை தரணியில் பிறந்த நம்மாழ்வார் எடுத்த உடன் வேளாண் விஞ்ஞானியாக மாறிவிடவில்லை. தஞ்சையில் இருந்து சென்று தாமிரபரணி பாயும் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் பணி புரிந்தபோது தான் ரசாயன பயன்பாடு முறைகளை கண்டு வெகுண்டெழுந்து தன் பணியை ராஜினாமா செய்துவிட்டு வேளாண்மையில் பூச்சி மருந்துக்கு எதிராக பொதுமக்களிடையே தனது பிரசாரத்தை தொடங்கினார், நம்மாழ்வார். தமிழகத்துக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் வகையில் துடிப்புடன் தன்னுடைய பணிகளை தொடங்கிய அவர் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்தார். இயற்கை வேளாண்மையை குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எளிமையான முறையில் கொண்டு சென்று இன்று அனைத்து இடங்களிலும் இயற்கையாக விளைந்த பல வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் குறிப்பாக மாப்பிள்ளை சம்பா, ஆத்தூர் கிச்சிலி சம்பா உள்ளிட்ட பல்வேறு ரகங்களை மீட்டெடுத்து இயற்கை விவசாயத்தில் பெரும் புரட்சி ஏற்பட காரணமாக இருந்தார். அது மட்டுமின்றி 2004-ம் ஆண்டு சுனாமியால் நாகை மாவட்டத்தில் உப்பாக மாறிய கடுமையான நிலம் உரிய மண் வளத்தை இழந்த நிலையில் 6 மாதங்களுக்குள் மீண்டும் புத்துயிர் பெறச்செய்து சாதித்து காண்பித்தார். ரசாயன வேளாண்மைக்கு எதிரான பிரசாரத்தை, படித்த இளைஞர்களை தன்னுடைய எளிமையான பயிற்சி முறைகளால் காந்தம் போல் கவர்ந்து இழுத்து அவர் மறைவுக்கு பிறகும் அவர் காட்டிய வழிமுறைகளை பின்பற்றி வருவது கண்கூடு. வேம்புக்கான காப்புரிமையை வெற்றிகரமாக ஜெனீவா நீதிமன்றம் வரை சென்று போராடி நீதிமன்றத்தில் இயற்கை வேளாண் மீது கொண்ட காதலின் காரணமாக நுட்பமான முறையில் வாதாடி பெருமை சேர்த்தார். இயற்கை வேளாண்மை, இயற்கை வாழ்வியல் நீர் மேலாண்மை என்று பயணித்த இவரது வாழ்வில் திருப்புமுனையாக இயற்கைக்கு எதிராக நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கு எதிராக போராட்ட களத்தில் ஈடுபட வைத்தது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் அழைப்பே அரசின் சூழ்ச்சிகளுக்கு எதிராக போராடும் போராட்ட களம் காண வைத்தது. இந்த போராட்டம் மூலம் மண் மீட்பு போராளி எனவும் அடையாளம் காணப்பட்ட இவர் பட்டுக்கோட்டையை அடுத்த அத்தி வெட்டி அருகே உள்ள பிச்சினிக்காட்டில் 2013-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி இயற்கை அன்னையின் மடிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தஞ்சாவூரில் அவருக்கு மணிமண்டபம் கட்டி அவரது திருவுருவ சிலையை நிறுவி அதன் அருகிலேயே அவருடைய வேளாண் அறிவை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் நூலகம் ஒன்று அமைக்கப்பட வேண்டும். இயற்கை வேளாண் பல்கலைக்கழகம் அமைத்து அதற்கு நம்மாழ்வார் பெயரை சூட்டி கவுரவப்படுத்த வேண்டும். மேலும் நம்மாழ்வாரின் கருத்துக்களை பின்பற்றும் வகையில் அவருடைய நினைவு தினமான டிசம்பர் 30-ந் தேதியை தமிழக அரசு உழவன் உரிமை தினமாக அறிவிக்க வேண்டும்.

No comments:

Popular Posts