Sunday 16 December 2018

மலைகளைக் காப்போம்

மலைகளைக் காப்போம் சுந்தர்ராஜன்,பூவுலகின் நண்பர்கள். ஈராயிரம் ஆண்டுகால சங்கத்தமிழில் மலைக்கென்று 350 பாடல்கள் இருப்பதாக குறிப்புகள் சொல்கின்றன. ஆதி மனிதன் மலைகளில் வாழ்ந்தான். மலை மீது வாழ்ந்த மனிதனின் அறிவும் பரந்த மனமும் எப்படிப்பட்டதென்று கட்டியம் கூறி நிற்கிறது பறம்பு நாட்டு பாரியின் வரலாறு. தமிழ் மண்ணும் நிலமும் இலக்கியமும் பண்பாடும் அறிந்த மலைகளின் சிறப்பை உலகின் பிற பகுதிகள் இப்போதுதான் அறியத் தொடங்கியிருக்கின்றன. ஐ.நா.வின் வழிகாட்டுதலின் பேரில் 2003-லிருந்து ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 11-ந் தேதியை சர்வதேச மலைகள் தினமாக கடைபிடித்து வருகிறது உலகம். அதற்கு முன்பு 2002 மலைகளின் வருடமாக அறிவித்திருந்தது ஐ.நா. மலைகளின் வளம் காப்பதும், அதன் நீடித்த பயன்களை பாதுகாப்பதும்தான் நோக்கம். மலைகள் மீதான உலகத்தின் கவனம் முதல்முதலாக படிந்தது 1992-ம் ஆண்டுதான். ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற “பூமி’ குறித்தான உச்சிமாநாட்டில்தான் அருகிவரும் வெப்பமண்டல காடுகள், சதுப்புநிலங்கள் போன்ற சூழல் அமைப்புகளுக்கு கொடுத்துவரும் முக்கியத்துவத்தை மலைகளுக்கும் கொடுக்கவேண்டுமென்று முடிவுசெய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட சாசனத்திலும் அதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது மானுட வரலாற்றை உற்றுநோக்கினால், வெப்பமண்டல அல்லது குறைந்த வெப்பமண்டல பகுதிகளிலுள்ள சமூகங்களில் மலைகள் மைய புள்ளியாக இருந்து வந்ததை அறிந்து கொள்ளமுடிகிறது. மற்றவர்களுக்கு அவை அடைக்கலம் கொடுக்கக்கூடியதாக இருந்துவருகின்றன. பூமியிலுள்ள நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பங்கு மலைகள் உள்ளன, கிட்டத்தட்ட 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் மலைகளில் வாழ்வதோடு மட்டுமல்லாமல் விவசாயமும் செய்வதாக தரவுகள் சொல்கின்றன. அது மட்டுமல்ல, உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும், ஆற்றலுக்காகவும் மலைகளைதான் நம்பியிருக்கின்றனர். மலைகளில் உருளை, காபி, ரப்பர் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் அருகிவரக் கூடிய பல உயிரினங்களின் வாழ்விடமாகவும் மலைகள் உள்ளன. தற்கால நவீன அறிவியல் சூழல்தொகுதிகளாக உள்ள மலைகள், ஆறுகள், காடுகள் போன்றவற்றை தனித்தனிக் கூறுகளாக பார்க்கக் கூடிய பார்வையை ஏற்படுத்திவருகின்றன. ஆனால் மேற்சொன்னவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை “இயற்கையின் அறிவியலும் பூர்வகுடி மக்களும் உணர்த்திவருகிறார்கள். மலைகளில் உள்ள காடுகள் மழையை தருவிக்கின்றன, அவை சிற்றோடைகளாக உருவாகி, பின்பு நதிகளாகி அவை செல்லும் பாதையிலுள்ள உயிர்களுக்கு குடிநீரும் உணவும் வழங்கி கனிமங்களை கொண்டு பெருங்கடல்களில் சேர்ப்பதால்தான் உயிர்சூழல் இந்த பூமியில் இருக்கிறது. மலைகளும் காடுகளும் தாய் என்றால், பெருங்கடல் பிள்ளை, இந்த இரண்டையும் இணைக்கக்கூடிய தொப்புள் கொடிதான் நதி, இந்த புரிதல்தான் பூமியிலுள்ள மலைகள் உள்ளிட்ட சூழல் தொகுதிகளை காக்க உதவும். மலைகள்தான் உலகத்தின் ‘நீர் கோபுரங்கள்’ எனவும், நமது பூமியிலுள்ள அனைத்து நன்னீர் வளங்களில் 60 முதல் 80 சதவிகிதம் வரை மலைகள்தான் வழங்குகின்றன என்கிற தரவும் மலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது . ஆனால் இன்று மலைகளின் நிலை என்ன? காலநிலை மாற்றத்தால் கடுமையான அச்சுறுத்தலை சந்தித்துக் கொண்டிருக்கின்றன உலகெங்கும் இருக்கும் மலைகள். இமய மலையின் நிலையை எடுத்துக் கொள்வோம். காலநிலை மாற்றத்தால் அதிகமாக பாதிக்கப்பட்ட பிரதேசமாக இமயமலை இருப்பதாகச் சொல்கிறார்கள் அறிவியலாளர்கள். 1977 தொடங்கி 2000 வரையிலான காலகட்டத்தில் இமய மலையின் தட்பவெட்ப நிலை ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் 0.6 டிகிரி செல்சியஸ் அதிகரித்திருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது. கால நிலை மாற்றத்தின் காரணமாக பனிப்பாறைகள் அதிகம் உருகுவது, பருவமழையில் மாற்றங்கள், மற்றும் நிலச்சரிவு, பனிச்சரிவு, வெள்ளம் போன்ற ஆபத்துகளும் அதிக அளவில் நிகழ வாய்ப்பிருக்கிறது. இதனால் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் விவசாயம் மட்டுமல்லாமல் நீராதாரம், உணவு பாதுகாப்பு ஆகியவை பாதிக்கப்படும்.இமய மலை மட்டுமல்ல, நியூட்ரினோ போன்ற திட்டங்களால் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கும் ஆபத்து இருக்கிறது. காலநிலை மாற்றம் ஏற்படுத்தப்போகும் விளைவுகளை முன்னரே நமக்கு தெரிவிப்பவை மலைகள், புவியின் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க மலைமக்களின் “உணவு பாதுகாப்பு“ கேள்விக்கு உள்ளாகி வருகிறது. மலையிலுள்ள பூர்வகுடிகள் ஏற்கனவே விளிம்பு நிலையில் வாழக்கூடியவர்களாக உள்ளனர். புவிவெப்பமயமாதலால், முன்னெப்போதும் இல்லாத விகிதத்தில் மலைகளிலுள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகிவருகின்றன, அதனால் கீழே நிலப்பரப்பில் வாழக்கூடிய மக்களின் குடிநீர், பாசன ஆதாரங்கள் அருகிவருகின்றன. நிலப்பரப்பில் உள்ள மக்களை காட்டிலும் மலைகளில் வாழக் கூடிய பூர்வகுடிகளிடம் மாறி வரும் காலநிலைகளை எதிர்கொள்ள போதிய அறிவும் அனுபவமும் உள்ளது.காலநிலை மாற்றம், காலநிலை மாறுபாடு மற்றும் காலநிலை மாற்றத்தால் உந்தப்பட்ட பேரழிவுகள் இவற்றோடு அரசியல், பொருளாதார மற்றும் சமூக காரணிகளுடன் இணைந்து, மலை மக்களை அதிக பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. மேலும் அவர்களுக்கு உணவு பற்றாக்குறையும், வறுமையும் அதிகரிக்கும். தற்போது, வளரும் நாடுகளில் 3 பேரில் ஒருவருக்கு போதிய உணவு கிடைக்காமல் அவர்களுடைய உணவு பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உலகெங்கும் மலைகள் ஆபத்தை எதிர்கொண்டிருக்கும் சூழலில், மலைகளின் தினம் மட்டுமன்றி ஒவ்வொரு நாளுமே மலைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை மலைகள் தினம் வழங்கும். இந்த வருடத்தின் கருபொருளாக “மலைகள்தேவை“ உள்ளது. நன்னீர், பல்லுயிரியம், பேரிடர் பாதுகாப்பு, சுற்றுலா, உணவு உற்பத்தி, பூர்வகுடிகள் நலம், என அனைத்துக்கும் மலைகள் அவசியம், சுருங்கச்சொன்னால் இந்த புவியில் உயிர்கள் தழைத்து வாழவேண்டுமென்றால் மலைகள் அவசியம், இன்று(டிசம்பர் 11-ந்தேதி) சர்வதேச மலைகள் தினம்.

No comments:

Popular Posts