Sunday 16 December 2018

பாரதியார் காட்டும் பாதை...!

பாரதியார் காட்டும் பாதை...! பேராசிரியர் கா.செல்லப்பன் இன்று (டிசம்பர்11-ந்தேதி) மாகாகவி பாரதியார் பிறந்ததினம். பாரதியார், தேசவிடுதலை பற்றியும், நாட்டின் ஒருமைப்பாடு பற்றியும் பாடிய மக்கள் கவி என்பதில் ஐயமில்லை. ஆனால் அதையும் தாண்டி மானுட விடுதலையையும், பிரபஞ்ச ஒருமைப்பாட்டையும் பாடிய மகாகவி என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர் வீழ்ந்து கிடந்த பெல்ஜியம் வீறு பெற்று எழுந்திட வாழ்த்தினார். புதிய ரஷியாவில் எழுந்த புரட்சியை, மாகாளி பராசக்தியின் கடைக்கண் பார்வையோடு இணைத்துப் பாடினார். இவையனைத்தும் தன் தேச விடுதலை பற்றிப் பாடும்போது பாடினார். ஏனென்றால் இந்திய விடுதலையை மானுட விடுதலையின் ஒரு பகுதியாகவே கருதினார். ‘பேசாப்பொருளைப் பேச நான் துணிந்தேன் கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்’ என்று பாரதி விநாயகரிடம் கேட்பது, தனக்கோ, ஏன் தன் தேசமக்களுக்கோ மட்டுமல்ல, “மண் மீதுள்ள மக்கள், பறவைகள், விலங்குகள், பூச்சிகள், புற்பூண்டு, மரங்கள்’ யாவும் இன்பமுற்று இணைந்து வாழ்ந்திட வேண்டியே. இதில் எல்லா உயிர்களும் இன்புற்று இணைந்து வாழ வேண்டுகிறான். புற்பூண்டு, பூச்சிகளைக் கூட பரம்பொருளின் வடிவங்களாகவே கண்டான். இதையே, ‘ஜெயபேரிகை’ என்ற பாடலிலும் ‘காக்கை, குருவி எங்கள் ஜாதி-நீள் கடலும் மலையும் எங்கள்கூட்டம். நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம்’ என்று எக்காளமிட்டுப் பேசுகிறான். நந்தலாலா பாடலிலே, ‘காக்கைச் சிறகினிலே கண்ணனின் கரியநிறத்தைக் கண்டு களிக்கிறார்.காக்கையின் கரிய நிறத்திலும் தெய்வீக அழகைப் பார்த்து, அதையும் தன் தோழனாகப் பாவிக்கிறார். அதே பாடலில், பார்க்கும் மரங்களில் எல்லாம் கண்ணனின் பச்சைநிறத்தைக் காண்கிறார். இப்படி படைப்புக்கள் எல்லாவற்றிலும் பரம்பொருளின் வடிவத்தைக் காண்கிறார்.இதன் வழி இறைவன் எங்குமிருப்பதைக் காட்டுவதோடு, பிரபஞ்சத்தின் ஒருமைப்பாட்டையும் உணர்த்துகிறார். கரிய காக்கையோடு, சின்னஞ்சிறு சிட்டுக் குருவியையும் மானுடஜாதியாகவே கருதுகிறார். காக்கை சகோதரத்துவத்துக்குக் குறியீடு என்றால் குருவி விடுதலைஉணர்வின் குறியீடு. விட்டு விடுதலையாகி சிட்டுக் குருவிபோல் வாழ விரும்புகிறார். சிட்டுக்குருவிப் பாடலிலே. அந்தப் பாடலில், அது வானில் ஒளியோடும் காற்றோடும் கலந்து திரிவதையும், கூடுகட்டிப் பெட்டையோடு கோடி இன்பம் பேசிமகிழ்வதையும், முற்றத்திலேயும் கழனி வெளியிலும் கண்ட தானியத்தைக் கொண்டு, உண்டு, தூங்கி, காலை வருமுன் பாடி விழிப்பதையும் விவரிக்கிறார். கட்டுகளை விட்டுத் திரியும் விரிவாக, கட்டுகள், ஜாதிகள், எல்லைகளைத் தாண்டிய விடுதலை மற்றும் சமத்துவ வேட்கையின் வெளிப்பாடாக சிட்டுக் குருவியைக் காண்கிறார் கவிஞர். ‘சின்னஞ்சிறு குருவிபோல் நீ திரிந்து பறந்துவா பாப்பா’ என்று குழந்தையின் இயல்பான இயக்கத்துக்கு குருவியை உவமையாக்குகிறார். ‘திரிந்து, பறந்து வா’ என்ற சந்தம் நிறைந்த சாதாரணச் சொற்கள் குழந்தையுள்ளத்தின் விட்டு விடுதலையான தன்மையைக் காட்டுகிறது.அவரது “சிட்டுக்குருவி“ என்னும் கட்டுரையில் குருவியைக் கவலைகளிலிருந்து விடுபட்ட ‘வீடு’ நிலையாக உருவகிக்கிறார். ஆனால், அவர், அதற்கு புதுவிளக்கம் தருகிறார்.‘விடு, விடு, விடு, தொழிலைவிடாதே, உண்மை விடாதே, பேட்டை விடாதே, கூட்டை விடாதே, குஞ்சை விடாதே; உள்ளக் கட்டை அவிழ்த்து விடு, வீண் யோசனையை விடு, துன்பத்தை விடு“ என்ற, வாழ்ந்து கொண்டே வாழ்க்கையை விடும் நிலையைக் காட்டுகிறது. இதை, பாரதியை மிகவும் கவர்ந்த ஆங்கிலக்கவி ஷெல்லியின் வானம்பாடிப் பாடலுடன் ஒப்பிடலாம்.ஷெல்லியின் வானம்பாடி லட்சிய வானத்தின் மேலே மேலேபறந்து சென்று, இந்த மண்ணுக்கு வர மறுக்கிறது. மேலும் ஷெல்லியில், மனிதம் முற்றிலும் குறைவுள்ளதாக காட்டப் படுகிறது. ஆனால் பாரதி மனிதத்துவத்தை இழக்கத் தயாராய் இல்லை. ‘ஆராய்ச்சி, பக்தி, சங்கீதம், கவிதை முதலிய இன்பங்கள் மனிதனுக்குக் கை கூடும்.குருவிக்கு இயல்பில்லை. ஆனாலும் அந்த இரண்டு வித இயல்பும் பெற்றால், நான் பரிபூரண இன்பத்தை அடைய மாட்டேனா?” என்றுகூறுகிறார். இயற்கையும் மனிதமும் இணைந்துதான் முழுமை பெற முடியும் என நம்புகிறார் பாரதி.“ஜெயபேரிகை”யில், காக்கையையும் குருவியையும் எங்கள் ஜாதி என்று இணைத்துக் கொண்ட பின் நீள்கடலையும் மலையும் தம் சொந்தங்களாகச் சொல்கிறார். கடல் பரப்பையும், ஆழத்தையும், மலை உயரத்தையும் குறிக்கின்றன. இப்படி பிரபஞ்சம் முழுவதையும் தன் உறவாக அணைத்தபின், ‘நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை” என அழுத்தமாகப் பறைசாற்றுகிறார். இங்கே “பிரம்மம் ஒன்றே; அதுவன்றி வேறில்லை” என்ற அத்வைதம், புதிய பிரபஞ்ச ஒருமைப்பாடாக மாறுகிறது. பாரதி வேதத்தைப் புதுமை செய்கிறார். இறுதியாக, இந்த விரிவு பரமானந்தமாக உணரப்பட்டு, ‘நோக்க நோக்கக் களியாட்டம்’ எனக் கூவுகிறார்.காக்கை, குருவியைப் போல, பாரதி குயிலையும் நேசித்து, ‘குயில்’ என்ற ஒரு அருமையான சிறு காவியம் படைத்துள்ளார். புதுவை நகரின் மேற்கேயுள்ள மாஞ்சோலையில் பெண்குயில் ஒன்று கிளையில் அமர்ந்து மற்ற பறவைகள் எல்லாம் காலைக் கடனில் கருத்தின்றிக் கேட்கும்படி அமுதத்தைக் காற்றில் கலந்தது போல் பாடியதைக் கவிஞன் கேட்கிறான்.அது அவனது கற்பனையைத் தூண்டி ஒரு காதல் காவியமாக மலர்கிறது. அது, ‘காதல், காதல், காதல்; காதல் போயிற் சாதல், சாதல், சாதல்’ என்று பாடுகிறது. ஜீவாத்மா -பரமாத்மா காதலை, மானுட -பறவைக் காதலாக உருவகமாகக் கூறும் இந்தபாடல், இந்தப்பிரபஞ்சத்தின் அடிப்படைச் சக்தி காதல் தான்; அதனால்தான் குயில், காதலை வேண்டிக் கரைகிறது. இது ஆத்மாவுக்கும் இறைவனுக்கும் உள்ள காதலை மட்டுமன்றி, எல்லா உயிர்களையும், மனிதர்களையும் இயக்கும் சக்தியாகக் காட்டப்படுகிறது. குரங்கு, மாடு ஆகியவற்றோடு குயில் காதலிப்பதாகக் காட்டப்படுவது, அதன் பூர்வ ஜென்ம உறவையே. ஆனால் அது இறுதியில் பெண்வடிவம் பெற்று கவிஞனோடு இணைகிறது. காதலால் மரணத்தையும் வெல்லாம் என்பதையே இப்பாடல் காட்டுகிறது. மொத்தத்தில் பாரதியின் பறவைக் காதல் அவருடைய வேதாந்தப் பார்வையின் புதிய வடிவம் எல்லா உயிர்களிலும் இறைவனைப் பார்த்த பாரதி எல்லா உயிர்களும் ஒன்றே எனக்கருதி அவற்றோடு உறவாடினார்.காக்கையின் சகோதரத்துவம், குருவியின் விடுதலை உணர்வு, குயிலின் காதல் கீதம் ஆகியவற்றால் மனிதர்கள் பிரபஞ்சத்தோடு ஒன்றி வாழ்ந்தால், இந்தப் பிரபஞ்சமே ஒரு குடும்பமாகிவிடும். அப்போது இயற்கைக்கும் மனிதருக்கும் மோதல் இருக்காது .சூழலைப் பாதுகாக்க இந்த உறவும் உணர்வும் உதவும். இது பாரதி காட்டும் பாடம்.

No comments:

Popular Posts