ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி...!
ராஜாஜி
எச்.வி.ஹண்டே, முன்னாள் தமிழக சுகாதார அமைச்சர்
இ ன்று (டிசம்பர் 10-ந்தேதி) ராஜாஜி பிறந்தநாள்.
1965-ம் ஆண்டு முதல், இறுதிவரை (25.12.1972) ராஜாஜியின் அடிசுவட்டில் பணியாற்றக்கூடிய பாக்கியத்தைப் பெற்றவன். ராஜாஜியின் தொலைநோக்கு, பல்வேறு சந்தர்ப்பங்களில் எவ்வாறு இருந்தன என சுருக்கமாக விளக்கி கூறுவது இன்றைய தலைமுறையினருக்கு உதவியாக இருக்கும். 1921-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியினரால், ராஜாஜி, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சமயத்தில், நமக்கு சுதந்திரம் கிடைக்குமென்று யாரும் எண்ணி பார்த்து இருக்கமாட்டார்கள். சிறையில் இருந்தபடி, ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு அவர் தன் நாட்குறிப்பில் எழுதிய சில வரிகளே சான்று.
“நாம் ஒரு விஷயத்தை நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். நாட்டுக்கு சுதந்திரம் வந்து விட்டால், உடனேயே ஒரு சிறந்த அரசாங்கம் வந்துவிடாது. மக்களுக்கு அதிக மகிழ்ச்சி கிடைத்துவிடாது. நீண்ட காலத்துக்கு இவை கிடைக்காதென்றே நான் நினைக்கிறேன். தேர்தல்கள், அதையொட்டிய ஊழல்கள், அநியாயங்கள், பணக்காரர்களின் பலம், ஆணவம், நிர்வாகத்தினரின் திறமையின்மை, இவையெல்லாம் ஒன்று சேர்ந்து, நமக்கு சுதந்திரம் கிடைத்தவுடன், நமது வாழ்க்கையை நரகமாக்கும். நீதி, திறமை, அமைதி, நேர்மையான நிர்வாகம் ஆகியவை, சுதந்திரத்துக்கு முன்னால் இருந்த அளவுக்கு இப்போது இல்லையே, என்று பலர் எண்ணி வருந்தும் நிலை ஏற்படும். அகவுரவம், அடிமைத்தனம், ஆகியவற்றிலிருந்து நமது இனம் காப்பாற்றப்பட்டுவிட்டது, என்பது ஒன்றுதான் நமக்குக் கிடைத்த லாபமாக இருக்கும். அனைவருக்கும் பொதுவான முறையில், ஒழுக்கம், தெய்வபக்தி, அன்பு, இவற்றை குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்க்கக்கூடிய கல்வி ஒன்று தான் நமது ஒரே நம்பிக்கை. இதில் வெற்றியடைந்தால் தான் நாட்டு சுதந்திரம் நமக்கு மகிழ்ச்சியைத் தரும். இல்லாவிட்டால் அது பணம் படைத்தோரின் அடக்குமுறைக்கும், அக்கிரமத்துக்கும்தான் நம்மை அழைத்துச் செல்லும்.”
நாடு சுதந்திரம் அடைவதற்கு 27 ஆண்டுகள் முன்னதாக, இப்படி ஒரு கருத்தை அவரால் எப்படி எழுதமுடிந்தது? என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அடுத்தது, பாகிஸ்தானை பற்றிய ராஜாஜியின் கருத்துகள் நம்மை சிந்திக்க வைக்கிறது. “ஜின்னா இடத்தில், என்ன சமரசம் செய்தாலும், இந்தியா, பாகிஸ்தான், இரண்டாக பிரியக்கூடியதை தவிர்க்க முடியாது. இதற்கு, நாம் முன்கூட்டியே நம்மை தயார் படுத்திக் கொள்வது அவசியம்” என நமக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பாகவே, மகாத்மா காந்திக்கும் மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கும் (ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல், பாபு ராஜேந்திர பிரசாத் உள்பட) ராஜாஜி கூறிக் கொண்டே வந்தார். இதை பற்றி காலம் சென்ற ஸ்ரீபிரகாசா (முன்னாள் தமிழக ஆளுனர்) கருத்து, நாட்டு மக்களுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும்.
ராஜாஜி, தவறாத தொலைநோக்கு படைத்தவர். எந்த பிரச்சினை, எப்படி மாற்றமடைந்து வளரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளக்கூடியவர். பாகிஸ்தான் உருவாகும் என்பதை அவரால் முன்னதாகவே கண்டுகொள்ள முடிந்தது. ஒவ்வொருவரையும் இது குறித்து அவர் எச்சரித்தார். அவருடைய கருத்து ஏற்றுக்கொள்ளப்படாததால் நிலைமை மோசமடைந்தது, ராஜாஜியின் சொற்களை முதலிலேயே கேட்டு நடந்திருந்தால், கண்ணீர் சிந்தவேண்டிய அவசியமில்லாமல், நியாயமான பாகிஸ்தானை நாம் அண்டை நாடாக அடைந்திருக்கலாம். ஆனால் தீர்க்கமுடியாத வடிவில் பிரச்சினைகளைத் தரக்கூடியதொரு பாகிஸ்தானை நாம் பெற்றோம். நண்பர்களாகத் தொடர்ந்து இருக்க வேண்டிய மக்களிடையே, காழ்ப்புணர்ச்சியும், பகைமையும் வளர்ந்தோங்க வழிவகுத்தோம்.”
அடுத்தது நாட்டின் பொருளாதாரத்தைப்பற்றிய ராஜாஜியின் சிந்தனை. 1955-ம் ஆண்டிலேயே, ராஜாஜி தன்னுடைய சுயராஜ்யா இதழின் மூலமாக பண்டித நேருவிற்கு ஆரோக்கியமான எச்சரிக்கையை விடுத்தார். “ரஷியா நாட்டின் மீது நீங்கள் கொண்டிருக்கிற மோகத்தின் காரணமாக, நம் நாட்டில் ‘சோசலிச’ முறை பொருளாதார கொள்கையை திணிக்க பார்க்கிறீர்கள். இது இறுதியில், பெர்மிட் - லைசென்ஸ் கோட்டாராஜ் ஆக முடிவடையும். இதனை மாற்றி, போட்டி சந்தை பொருளாதார முறையை நீங்கள் கொண்டு வந்தால், நம் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரம் வேகமாக உயரும்.” இந்த யோசனையை பண்டித நேரு நிராகரித்தார். இறுதியில், 1991-ம் ஆண்டில் நம்முடைய பொருளாதாரம் மிகவும் மோசமடைந்த நேரத்தில், பி.வி.நரசிம்மராவ், இந்திய பிரதமரானார். 36 ஆண்டுகளுக்கு முன்பு ராஜாஜி கூறிய கருத்துகளை, வேறு வழியில்லாமல், நடைமுறைபடுத்த ஆரம்பித்தார், பிரதமர் பி.வி.நரசிம்மராவ்.
ராஜாஜி வலியுறுத்தியபடியே போட்டிச்சந்தைப் பொருளாதாரத்தையும் தனியார் மயமாக்குதலையும், முன்னரே ஏற்றுக் கொண்டிருக்கலாம். 1991-ல் பி.வி.நரசிம்மராவ் தலைமையில், அரைகுறை மனதோடு, வேறுவழியுமின்றி, நாட்டுப் பொருளாதாரம், ராஜாஜி வலியுறுத்திய திசையில் திருப்பிவிடப்பட்டது. 36 ஆண்டுகளுக்கு முன்னதாக 1957-ல் ராஜாஜி இதே நடவடிக்கைகளுக்காக, எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். பெர்மிட்-லைசன்ஸ் கோட்டா ராஜை, ஒழித்துக்கட்ட வேண்டுமென்று அறைகூவல் விட்டார்! அப்போதே ராஜாஜியின் கருத்துகளை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்றைய இந்தியா, இன்னும் வளமிக்க நாடாக விளங்கியிருக்கும் என்பதில் ஐயமில்லை. தென்கொரியாவைவிட, மலேசியாவைவிட நம்முடைய நாடு முன்னேறி, பொருளாதார ரீதியாக ஜப்பான் நாட்டிற்கு ஈடாக வளர்ந்திருக்கும்.
ராஜாஜி தமது காலத்திற்கு மிகவும் அப்பாற்பட்டு, தொலைநோக்குடன் சிந்தித்தார், செயலாற்றினார். உலகளாவிய சிந்தனை அவருடையது. இவ்வுலகே அவருக்கு சிறியதோர் கோளாகத் தோன்றியது எனலாம். நாடுகளின் எல்லைகளை கடந்து, மனித இனத்தை முழுதும் தழுவிய நிலையில் அவர் சிந்தித்தார். எழுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, இந்நாடு முழுதும், தனது செல்வாக்கை நிலைநிறுத்திய மாமனிதனாக அவர் விளங்கினார். எதிர்காலச் சந்ததியினருக்கு ஒரு படிப்பினை மட்டுமல்ல, அவரது வாழ்க்கை வரலாறு, அது நாட்டுமக்களை நன்னெறியில் செயலாற்றுவதற்கு, ஊக்கந்தரும் உண்மை நிகழ்ச்சிகளின் தொகுப்பும்கூட.
Sunday, 16 December 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment