Sunday, 16 December 2018

மனித உரிமையின் புனிதம் காப்போம்...!

மனித உரிமையின் புனிதம் காப்போம்...! வக்கீல்.கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. செய்தி தொடர்பாளர். இ ன்று (டிசம்பர் 10-ந்தேதி) சர்வதேச மனித உரிமைகள் தினம், மனித உரிமைகள் என்பது மனிதன் சிந்திக்க தொடங்கிய போது, ஏற்பட்ட தாக்கம் தான். வேட்டையாடி நாடோடியாக வாழ்ந்த மனிதன் கூட்டமாக ஒரு சமூக அமைப்பில் வாழத்தொடங்கினான். படிப்படியாக வேளாண்மை என்று கற்கால மனிதன் முழு மானிடத்தை நோக்கி பரிணாம வளர்ச்சியில் ஒரு இறுதி வடிவத்திற்கு வந்தபோது, ஆடு, மாடுகளை விற்பதுபோல, சந்தையில் மனிதர்கள் விற்கப்பட்டனர். இதைக்கண்டு பலர் வேதனையோடு போராடியது உண்டு. கொலம்பஸ் 1492-ல் அமெரிக்காவை கண்டுபிடித்த பின் அதை வளமாக்க ஆப்பிரிக்காவை சேர்ந்த கருப்பின மக்களை ஆயுத பலத்தால், அடிமைகளாக்கி அமெரிக்காவுக்கு கொண்டு வந்தனர். அவர்களை அடிமைகளாக விற்று கடுமையான பணிகளை கொடுத்து அவர்களை மனிதர்களாகவே நடத்தாமல், விலங்குகளை போல பாவித்தனர். இது குறித்து வால்ட் விட்மன் இந்த கொடூரத்தையெல்லாம் கண்டு கவிதைகளாக நமது பாரதியைப்போல கடும் கோபம் கொண்டான். மனித உரிமைநாள் டிசம்பர் 10. பாரதி எட்டையபுரத்தில் பிறந்தநாள் டிசம்பர் 11. பாரதியைப்போல்தான் வால்ட்விட்மன் ஆங்கிலத்தில் கவிதையாக வடித்தது இன்றைக்கும் சிரஞ்சீவியாக இருக்கிறது. அமெரிக்காவில் இந்த அடிமை முறையை அன்றைய அமெரிக்க அரசியல் சாசன சட்டமே (1789) அங்கீகரித்தது. இந்த கொடுமையை எதிர்த்து எமர்சன், ஸ்டோவோ, தோரோ, ஆபிரகாம் லிங்கன் போன்றோர் போராடினார்கள். இதன் விளைவாக 14-வது, 15-வது அரசியல் சாசன திருத்தத்தைக் கொண்டு கருப்பின மக்களின் முழு உரிமையை நிலைநாட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இந்நிலையில் 1789-ல் பிரெஞ்சு புரட்சி ஏற்பட்டது. சமத்துவம், சகோதரத்துவம் என்ற தாரக மந்திரத்தோடு முடியாட்சியை எதிர்த்து பிரான்சில் புரட்சி நடந்தது. தாமஸ் பெயின் என்பவர் மனித உரிமை என்ற நூலை எழுதி உலகளவில் பரப்புரை செய்தார். 1848-ல் கம்யூனிஸ்டு அறிக்கை வெளியிட்டபின், 1917-ல் ஜார் மன்னருக்கு எதிராக ரஷிய புரட்சி நடந்ததும் மனித உரிமையை நிலைநாட்டவே. தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 8 மணி நேர வேலை என்று அமெரிக்காவில் போராடி வெற்றி கண்டதுதான் மே தினம். முதலாம் உலகப்போர் நடந்தபோது ஏற்பட்ட அழிவையும், பின்னடைவையும் கண்டு உலக நாடுகள் அனைத்தும் இணைந்து ‘லீக் ஆப் நேஷன்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினர். அந்த அமைப்பு சரியாக செயல்படாமல் கலைந்தது. பிறகு இரண்டாம் உலகப்போரினால் ஏற்பட்ட மாபெரும் அழிவுகளால் உலக அமைதிக்காக ஐ.நா. மன்றம் அமைக்கப்பட்டது. அந்த மன்றம் அமைக்கப்பட்ட பிறகு டிசம்பர் 10 1948-ல் உலகளாவிய மனித உரிமை பிரகடனம் வெளியிடப்பட்டது. இந்த நாளே மனித உரிமை நாள். இப்படியாக ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்தனியாக உரிமைகள் பெற ஐ.நா. மன்றம் முனைப்பு காட்டியது. ஜெனிவாவில் 1958-ல் அகதிகள் உரிமைகளை பாதுகாக்கும் வகையில், ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கியது. ஆனால் இந்தியா அந்த ஒப்பந்தத்தை இதுவரை சரிவர நிறைவேற்றவில்லை. நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் அளிக்கவில்லை. 1989-ல் குழந்தைகள் உரிமை என்ற சாசனம் உருவாக்கப்பட்டு, 1995-ல் தீர்மானமாக ஐ.நா.மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பெண்கள் உரிமை என்ற சாசனம் 1993-ல் வியன்னா ஐ.நா. உச்சி மாநாட்டில் உருவாக்கப்பட்டது. சிறுபான்மையினர் உரிமை, ஆதிவாசிகள் உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இப்படியான ஒவ்வொரு தேவைகள் அறிந்து மாநிலத்தை பாதுகாக்க, உலகளவில் இந்த பாதுகாப்பு உரிமை பிரகடனங்களை ஐ.நா. மன்றம் அறிவித்தது. இதன்படிதான் இந்தியாவில் 1993-ல் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, தேசிய மனித உரிமை ஆணைய சட்டம் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றது. இதேப்போல அதே ஆண்டில் பல்வேறு மாநிலங்களில் மாநில மனித உரிமை ஆணையம் உருவாக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் 1997 வாக்கில்தான் அமைக்கப்பட்டது. சட்டத்தொகுதி மோசஸின் 10 கட்டளைகள், பிரிட்டனில் நிறைவேற்றப்பட்ட மகாசாசனம், 1776-ல் அமெரிக்க சுதந்திர அறிவிக்கை, நெப்போலியன் சட்டத்தொகுதி, 1864-ல் ஜெனிவா ஒப்பந்தம், 1945-46-ல் ஹிட்லருடைய பாசிச போர்க்குற்றங்கள் எதிர்ப்பான நுரம்பர்க் விசாரணை 1948-ல் இறுதியாக இதே நாளில் ஐ.நா. பிரகடனம் செய்ய மனித உரிமை சாசனம் என நீண்ட ஒரு பரிணாம வளர்ச்சி வரலாறு உண்டு. மனித உரிமை என்பது ஒரு புனிதமாக பாதுகாக்க வேண்டிய ஒரு அணுகுமுறை. நாளுக்குநாள் மானிடத்திற்குரிய தேவைக்கேற்ப மனித உரிமை சாசனத்தினுடைய வீச்சும், போக்கும் விரிவடைந்து வருகிறது. இந்த மனித உரிமைகளை பாதுகாக்கவேண்டியதில் சமுதாயத்திற்கும் பெரும் பங்கு உண்டு.

No comments:

Popular Posts