Sunday 16 December 2018

ஆபத்துக்கு அழைப்பு விடுக்கும் ஆன்லைன் சூதாட்டம்...!

ஆபத்துக்கு அழைப்பு விடுக்கும் ஆன்லைன் சூதாட்டம்...! ம காபாரத பெரும் யுத்தத்துக்கு காரணமாக இருந்தது சூதாட்டம். பொழுதுபோக்கு விளையாட்டுகள் சூதாட்டமாக மாறும்போது சண்டை சச்சரவுகள் பெரும் கொலைகளாக இன்றும் மாறி வருகிறது. எனவேதான் சீட்டாட்டம், சேவல் சண்டை போன்ற சூதாட்டங்கள் இன்றைய காலகட்டம் வரை தடை செய்யப்பட்ட விளையாட்டுகளாக இருக்கின்றன.

 வட்டமாக உட்கார்ந்து சீட்டுக்கட்டு வைத்து காசுவைத்து சூதாடியவர்கள் கைது என்கிற செய்தி அடிக்கடி நாளிதழ்களில் வரும். அதுபோன்று சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது என்றும் வழக்குகள் பதிவு செய்யப்படும். இதனால் பொழுதுபோக்குக்கு சீட்டு விளையாடுபவர்கள் கூட, கைகளில் ராஜா, ராணி சீட்டுக்கள் இருந்தாலும் மறைந்திருந்து திருட்டுத்தனமாகவே விளையாட வேண்டியது இருக்கும். கிராமப்புறங்களில் அக்கம்பக்கம் யாராவது வருகிறார்களா? என்று ஆள் பார்த்துக்கொண்டே வெட்டாட்டம் என்ற சூதாட்டத்தை விளையாடுவது இன்னும் நடந்து கொண்டு இருக்கிறது. இதுபோல் நகரங்களில் கிளப்புகள் என்ற பெயரில் சூதாட்டங்கள் பல்வேறு பெயர்களில் நடந்து வருகிறது. இதுபற்றி தகவல் தெரிந்தால் துரத்தி துரத்தி பிடிக்க போலீசார் தயாராக இருக்கிறார்கள். கணக்குக்கோ, வழக்குக்கோ போலீசார் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவது கட்டாயமாக இருக்கிறது. இது தவறல்ல... சமூகத்தின் தவறான ஒரு பழக்க வழக்கத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரி.

 ஆனால் சமீப காலமாக இணையம் மூலம் ரம்மி என்கிற சூதாட்டம் ஆடுவதற்கு அழைப்பு வருகிறது. முகநூல் உள்ளிட்ட தனிநபர் சுதந்திரம் கொண்ட செயலிகளிலும் சூதாட்ட அழைப்பு எந்தவித தடையும் இன்றி உலவுகிறது. கூகுள் தேடு பொறியில் ஏதோ ஒரு நல்ல விஷயத்தை தேடிச்செல்லும்போது ஆபாசங்கள் தென்படுவதைப்போல, முகநூல் நண்பர்களின் பதிவுகளையும் கருத்துகளையும் பார்வையிடும் போது அழையாத விருந்தாளியாக ரம்மி விளையாட்டுக்காள அழைப்பு வந்து சேருகிறது. இந்த தொடர்ச்சியான அழைப்பு சிறிது சபலப்படுபவர்களையும் படுகுழியில் தள்ளுவதுபோல, சூதாட்டத்தை ஊக்குவிப்பதாக இருக்கிறது. எங்கோ கிராமத்தில் மரத்தின் மறைவிலோ, சுவரின் மறைவிலோ இருந்து கொண்டு சில்லரை காசு வைத்து சீட்டாட்டம் ஆடுபவர்களை கைது செய்ய சொல்லும் சட்டம், ஆன்-லைன் மூலம் சீட்டு ஆடுவதை ஊக்குவிக்கிறதா?. தவறு என்பது எந்த இடத்தில் யார் செய்தாலும் தவறுதானே?. ஆனால் ஆன்-லைன் ரம்மி விளையாட்டு பிரபல நடிகர்கள் மூலம் விளம்பரப்படுத்தப்படுகிறது. தொலைக்காட்சிகளிலும் இந்த விளையாட்டு விளம்பரப்படுத்தப்படுகிறது. ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாக விளம்பரப்படுத்தப்படவில்லை. ரம்மி விளையாடினால் பணம் சம்பாதிக்கலாம் என்ற அறிவிப்புடனே விளம்பரம் செய்யப்படுகிறது. ஒருவேளை அதில் விளையாடுபவர்களுக்கு பணம் கிடைக்கலாம்.

ஆனால் ஏதோ ஒரு மூலையில் ஒருவர் இழக்கும் பணம்தானே இன்னொருவருக்கு கிடைக்கும். புளூவேல் எனப்படும் விளையாட்டு இளைஞர்களையும், பள்ளிக்கூட மாணவ-மாணவிகளையும் காவு வாங்குவதுபோன்று ஆன்-லைன் சூதாட்டம் ஏதோ ஒரு குடும்பத்தலைவனை காவு வாங்கிக்கொண்டுதான் இருக்கும். இன்று பெரும்பாலான நிறுவனங்களில் கணினி பயன்பாடு அதிகமாக இருக்கிறது. கணினியில் வேலை பார்த்துக்கொண்டே இப்போது சீட்டு விளையாடுவது சுலபமாகி இருக்கிறது. இதனால் வேலைகள் கெடுவதும், விளையாடுபவர் மனம் அலைவதும், மன அழுத்தம் அடைவதும் சாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. அதைவிட ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்தும் ஒவ்வொருவரின் உள்ளங்கையிலும் இருக்கிறது. அவர்கள் தங்கள் மொபைல் போனில் முகநூல் திறக்கும்போதெல்லாம் வந்து தனது முகத்தை காட்டுகிறது ரம்மி விளையாட்டு.

பல்வேறு பெயர்களில் வலையத்தில் இயங்கும் இந்த விளையாட்டில் சிக்கிக்கொள்பவர்கள் பலரும் தங்கள் பணத்தை இழப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படியே இல்லை என்றாலும், சட்டப்படி தவறு என்று கூறப்படும் சூதாட்டம் பொதுவெளியில் விளம்பரப்படுத்தப்படுவதும், அது மக்களை ஈர்க்கும் வகையில் செயல்படுவதும் ஏற்க முடியாதது. பொது ஒழுக்கத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் வளரும் தலைமுறையையும், குடும்பத்தலைவர்கள், பெண்களையும் ரகசியமாக சூதாட வழிவகை செய்யும் இதுபோன்ற நடவடிக்கைகள் தடுக்கப்பட வேண்டும். பாலியல் வன்முறை போன்று இதுவும் ஒரு வன்முறைதான் என்பதை கருத்தில் கொண்டு தடை செய்ய வேண்டியது அரசின் கடமையாகும். -முடிவேல் மரியா

No comments:

Popular Posts