Sunday, 16 December 2018

2.இமயமே இலக்காகட்டும்!

2.இமயமே இலக்காகட்டும்! இமயமலையின் எவரெஸ்ட் சிகரம். இதன் உயரம் 8848 மீட்டர். இதைவிட உயரமான இடம் இந்தப் பூமியில் இல்லை. மணிக்கு 2 ஆயிரம் கி.மீ. வேகத்தில் சுற்றும் எந்தக் கோளிலும் இதைவிட உயரமான இடம் இருந்தால் அது கீழே சரிந்து விழுந்துவிடும். 1953-ம் ஆண்டு வரை எவரெஸ்டில் மனிதர்கள் காலடி பட்டதில்லை. அதை வெற்றிகொள்வதே பலரின் வாழ்நாள் லட்சியமாக இருந்தது. எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடிக்க எண்ணற்றோர் முயன்றனர். அதில் பலர் தங்கள் உயிரையும் பறிகொடுத்தனர். இரு நூறுக்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்களின் சடலங்கள் இன்னும் அந்தப் பனி முடியெங்கும் பரவிக் கிடக்கின்றன. 1953-ம் ஆண்டு டென்சிங் என்ற உதவியாளரும் அவரது நியூசிலாந்து எஜமானர் எட்மண்ட் ஹிலாரியும் பலகட்ட முயற்சியின் முடிவாய் எவரெஸ்டில் கொடி நாட்டினர். அதன்பின் ஏராளமானோர் எவரெஸ்ட் ஏறிவிட்டனர். ஓர் இலக்கு, குறிக்கோளுக்கு நாம் இன்று எவரெஸ்ட் சிகரத்தை குறியீடாகப் பயன்படுத்துகிறோம். சிலர் சிறுவயதிலேயே தமது குறிக்கோளை முடிவு செய்துவிடுகிறார்கள். சிலருக்கோ குறிக்கோள் மாறிக்கொண்டே இருக்கும். டாக்டர், கலெக்டர், விமானி, போலீஸ் அதிகாரி, வழக்கறிஞர், நடிகர், தொழிலதிபர், அரசியல்வாதி என்று மனம் நிலையற்று அலைபாயும். கடைசியில், செலுத்துவார் இல்லாத கட்டுமரம் போல வாழ்க்கை அலையால் எப்படி எப்படியோ அலைக்கழிக்கப்பட்டு, எங்கோ ஒதுங்கிவிடுகிறார்கள். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, மாலுமி இல்லாத கப்பல் போல. தான் போய்ச் சேரவேண்டிய இடம் அறியாத மாலுமியால் எங்கே செல்ல முடியும்? மனம் போன போக்கில் கப்பலைச் செலுத்தினால் என்ன ஆகும்? அப்படித்தான், இலக்கு இல்லாத வாழ்க்கையும். ஒரு கால்பந்து மைதானத்தில் கோல் போஸ்ட் இல்லை என்றால் எப்படி இருக்கும்? வீரர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்களே தவிர, அவர்களால் கோல் அடிக்க முடியாது. குறிக்கோளற்ற வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கும். எந்த நோக்கமும் இன்றி எப்போதும் ஓடிக்கொண்டே இருப்போம். குறிக்கோள் பலவிதமாக இருக்கலாம். கல்லூரி- சென்னை மருத்துவக் கல்லூரி. பணி- இதய சிகிச்சை நிபுணர். வாழப்போகும் இடம்- கலிபோர்னியா, அமெரிக்கா. உடல்நலம்- 75 கிலோ எடை, 80 ஆண்டு வாழ்க்கை. பொருளாதாரம்- மாதம் ரூ.10 லட்சம் ஊதியம். உதவி- 10 ஏழைகளுக்கு வீடு கட்டித் தர வேண்டும். சமுதாயப் பணி- ஓர் ஊரை தத்தெடுக்க வேண்டும். இப்படி எந்தத் துறையாக இருந்தாலும் இலக்கு நிர்ணயித்திட வேண்டும். அதோடு அந்த இலக்கை எவ்வளவு காலத்தில் தொட வேண்டும் என்றும் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அதை நோக்கிய பயணத்தில் அந்தந்த ஆண்டு இலக்குகளை வருடத்தின் தொடக்கத்தில் நம் டைரியில் எழுதிட வேண்டும். அதை தினமும் ஒருமுறையாவது எடுத்துப் பார்த்து நம் இலக்கை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். நம் குறிக்கோளை நோக்கிய செயல்களை இன்று செய்திருக்கிறோமா என்று தூங்கும்முன் யோசித்துப் பார்க்க வேண்டும். சரி, இலக்குகளைப் பட்டியலிடுவதால் என்ன நன்மை? ஒரு தொலைதூரப் பார்வை நமக்கு ஏற்படும். அவ்வப்போது ஓர் உடனடி ஊக்குவிப்பு கிடைக்கும். தேவையான தகவல்களைச் சேகரிப்போம். வாழ்வதற்கு ஓர் உறுதியான காரணம் கிடைக்கும். நேரத்தை வீணடிப்பதைத் தவிர்ப்போம். கெட்ட பழக்கங்களுக்கு இடம் கொடுக்க மாட்டோம். மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்த ஆசைப்படுவதில் தவறே இல்லை. ஆனால் அதற்கு நாம் தகுதி யுடையவர்களாக இருக்கிறோமா எனப் பார்க்க வேண்டும். சில தகுதிகளை நாம் இயற்கையாகப் பெற்றிருப்போம், சில தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லாத தகுதிகளை வளர்த்துக்கொள்ள சிரமப்படத்தான் வேண்டும். சிரமப்படாமல் சிகரம் தொட முடியாது. பளுதூக்கும் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றால் அதற்கேற்ற வலு வேண்டும். அவ்வாறின்றி ஒலிம்பிக் பதக்கத்துக்கு ஆசைப்படுவது வீண். இயல்பாகவே நம்மால் எட்டிப் பிடிக்க முடியாத இலக்கு களுக்கு முயல்வதால் நம் நேரம்தான் விரயமாகும். சிலர் போதுமான உயரம் இல்லாவிட்டாலும் போலீஸ் வேலைக்குத்தான் செல்வேன் என்று அடம்பிடிப்பார்கள். அது வீண் முயற்சி. போலீஸ் வேலைக் கனவு நனவாகாது. மாறாக, மற்றொரு நல்ல பணிக்கு முயலலாம். நாம் நிர்ணயிக்கும் இலக்கு சிறப்பு மிக்கதா என்று சோதித்துக்கொள்ள வேண்டும். அந்த இலக்கு மிகச் சாதாரணமாகவும் இருக்கக்கூடாது, மிகவும் அரிதானதாகவும் இருந்துவிடக் கூடாது. சற்று சவாலானதாகவும், முனைப்பாக உழைத்தால் உரிய காலத்தில் அடையக்கூடியதாகவும் அமைய வேண்டும். குறிப்பிட்ட கால வரையறை இல்லாத இலக்கு அர்த்தமற்றது, பயனற்றது. அது தெளிவாகவும் இருக்க வேண்டும். 2022-ம் ஆண்டில் நான் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மேலாண்மைப் படிப்பு முதலாமாண்டு பயின்றுகொண்டிருப்பேன் என்பது ஓர் இலக்கு. கடினமான இலக்கைத் தேர்ந்தெடுத்தால்தான் அது நிறைவேறும்போது பூரிப்பும் நிறைவும் ஏற்படும். மிகவும் எளிதாக சாதிக்கக்கூடிய ஓர் இலக்கு, நம் தகுதிக்கும் ஆற்றலுக்கும் குறைவாக அமைந்துவிடும். எனவே உங்கள் இலக்கு இமயம் போல பெரிதாக இருக்கட்டும். உயர்ந்த நோக்கமே காலையில் உற்சாகமாக கண் விழிக்க வைக்கும். அந்த நாள் முழுவதையும் புத்துணர்ச்சியுடன் கடந்துசெல்ல உந்துசக்தியாகும். நாளை நாம் உயர்ந்த இடத்தில் இருப்போம் என்ற எண்ணமே நம்மை துடிப்பாகவும், ஆர்வமாகவும் இருக்க வைக்கும். நாம் ஒரு குறிக்கோளை அடைந்ததும் அப்படியே நின்றுவிடக் கூடாது. 5 கி.மீ. தூரம் ஓடிவிட்டோம். இனி அடுத்த ஆண்டும் இதே தூரத்துக்கு ஓடலாம் என்று எண்ணிவிடக் கூடாது. அடுத்த ஆண்டு 10 கி.மீ. தூரம் நம் இலக்காக இருக்க வேண்டும். தொடர்ந்து அடுத்த ஆண்டு 21 கி.மீ., அதற்கு அடுத்த ஆண்டு 42 கி.மீ. என்று ஒரு முழு மாரத்தான் ஓடும் திருப்தியை எட்ட வேண்டும். நேற்றைய தினத்தைவிட இன்று ஓர் அடி முன்னே இருக்கிறோம் என்ற எண்ணமே மகிழ்வு தரும். ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, ஒருவரோடு அல்லது ஒரு பொருளோடு நாம் இணைந்திருப்பதைவிட ஒரு நோக்கத்தோடு நம்மை இணைத்துக்கொள்வது நல்லது. உங்கள் நோக்கம் பெருமைக்குரியது, உங்கள் மனதுக்கு நெருக்கமானது என்றால் அதை அடைவதற்கான வழிகளை தேடத் தொடங்குவீர்கள். அதற்கான முயற்சிகளை மேற்கொள்வதைத் தவிர்க்க சாக்குப்போக்குச் சொல்ல மாட்டீர்கள். ஏற முடியுமா என்று நம்மை மலைக்கச் செய்யும் மரத்தின் உச்சியில்தான் இனிய தேன் இருக்கும். உள்ளே புக அஞ்சும் குகைக்குள்தான் புதையல் இருக்கும். சிரமங்களையும் ஆபத்துகளையும் தாண்டி அடைவதே குறிக்கோள். அப்படியின்றி, போகிறபோக்கில் செய்யக்கூடியதெல்லாம் குறிக்கோள் ஆகாது, நமக்குச் சிறப்பும் சேர்க்காது. குறிப்பிட்ட குறிக்கோள், உங்களைச் சற்று மிரட்ட வேண்டும், ‘வென்று காட்டு பார்க்கலாம்’ என்று சவால் விடுக்க வேண்டும். தனிமனிதரான உங்களுக்குச் சில இலக்குகள் இருப்பதைப் போல, உங்கள் நண்பர்கள் குழுவுக்கும், உங்கள் குடும்பத்துக்கும், நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்துக்கும்கூட இலக்கு இருக்கும். அதையும் நாம் புரிந்துகொண்டு, அதை நமது குறிக்கோளாக ஏற்று உழைக்க வேண்டும். மாபெரும் நமது நாட்டுக்கும் குறிக்கோள்கள் உண்டு. அவற்றை அடைய நமது தேசக்கடமையையும் நாம் ஆற்றிட வேண்டும்.

No comments:

Popular Posts