வீரமங்கை வேலு நாச்சியார்
வீரமங்கை வேலு நாச்சியார்
எம்.குமார், வரலாற்று ஆய்வாளர்.
இ ன்று (டிசம்பர் 25-ந் தேதி) வீரமங்கை வேலு நாச்சியார் நினைவுதினம்.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சிவகங்கை சமஸ்தானத்தை வீரமங்கை வேலு நாச்சியார் ஆட்சி செய்தார் அவரது கணவர் முத்து வடுகநாத தேவரை கொன்று சிவகங்கை சமஸ்தானத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்டனர். கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக, பெண்ணரசி ஒருவர் ஆயுதம் ஏந்தி போராடி இழந்த தன் ராஜ்ஜியத்தை மீட்டு, அதன் அரியணையில் அமர்ந்தவர் இவரே. பெண் இனத்திற்கே பெருமை சேர்த்த மாதர்குல மாது. இளவயதிலேயே போர்க்கலைகள் பல கற்று, பல மொழிகள் அறிந்து பேரழகியாகவும் திகழ்ந்து போர்படை தளபதியாக போரை வழிநடத்தி தானும் முன்னின்று போரிட்டு இந்திய சுதந்திர போரில் ஈடுபட்டு ஆங்கிலேயர்களிடமிருந்து தன் ராஜ்ஜியத்தை மீட்டெடுத்த வீரப்பெண்மணி. அவர் மறையும் வரை அவரிடமிருந்து ஆங்கிலேயர்களால் அந்த சமஸ்தானத்தை கைப்பற்ற முடியவில்லை என்பது பெருமைப்பட வேண்டிய ஒன்று.
ராமநாதபுரத்தை ஆண்ட சேது மன்னர் அரசகுலத்து, அரசர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதியின் மகள் இளவரசி வேலு நாச்சியாருக்கும் முத்துவடுகநாத பெரியவுடையார் தேவருக்கும் 1746-ல் திருமணம் நடந்தது. இன்றைய விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில் உள்ள முக்குளம் கிராமத்தில் வாழ்ந்த உடையார் சேர்வை என்ற மொக்கைபழனியின் மகன்களான மருது சகோதரர்கள் இருவரும் நல்ல உடல் வலிமையும், அஞ்சாநெஞ்சமும் கொண்டவர்களாக இருந்தனர். இவர்கள் சிவகங்கை பேர்ப்படையில் வீரர்களாக போர் புரிந்து தங்களின் திறமையை வெளிப்படுத்தியதால் மன்னர் முத்து வடுகநாதர் இவ்விருவரையும் தன் போர்ப்படையில் முக்கிய பொறுப்புகளில் நியமித்தார். அரண்மனையில் இவ்விருவருக்கும் மிகுந்த செல்வாக்கு இருந்தது. இவர்கள் இருவரும் வேலு நாச்சியாருக்கு உறுதுணையாக இருந்தனர். பெரிய மருது பல அரிய போர் பயிற்சிகளையும் வேலு நாச்சியாருக்கு கற்றுக் கொடுத்தார். திருமணமாகி நீண்ட நாட்களுக்குப் பின் ராணி வேலு நாச்சியாருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு வெள்ளாச்சி நாச்சியார் எனப் பெயர் சூட்டினர்
மொகலாய ஆட்சியை வீழ்த்தி கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி இந்தியா முழுவதும் பரவத் தொடங்கியபோது சிவகங்கை ராஜ்ஜியத்திடம் வரிவசூலிக்கும் பொறுப்பை ஆங்கிலேயர்கள் ஆற்காடு நவாப்பிடம் வழங்கியிருந்தனர். ஆனால் மன்னர் முத்துவடுகநாதனார் உனக்கு நான் ஏன் வரிகட்ட வேண்டும் என கேட்டு வரிகட்ட மறுத்து வந்தார். கோபம் கொண்ட ஆங்கிலப்படை தன்னுடன் நவாப்பின் படையையும் சேர்த்துக் கொண்டு காளையார் கோயிலில் தங்கியிருந்த, முத்துவடுக நாதர் மீது வஞ்சகமாக குண்டு வீசி கொன்று சிவகங்கை ராஜ்ஜியத்தை கைப்பற்றிக் கொண்டது. தன் கணவர் இறந்ததை அறிந்த வேலுநாச்சியார், இழந்த ராஜ்ஜியத்தை மீட்க உறுதி பூண்டார்.
ராணி வேலு நாச்சியார் தன் கைக்குழந்தை வெள்ளாச்சியுடன் கொல்லங்குடியில் தலை மறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். வேலுநாச்சியாரும் அவரது மகள் வெள்ளாச்சி நாச்சியாரும், மருது சகோதரர்களின் பாதுகாப்பில் அங்கிருந்து விருப்பாட்சி பாளையத்திற்குத் தப்பிச் சென்றனர். விஜயநகரபேரரசின் ஆதரவோடு இருந்த அப்பாளையக்காரர் கோபால் நாயக்கர் இவர்கள் அனைவருக்கும் போதுமான வசதி செய்து கொடுத்தார். ராஜ்ஜிய பிரதானி தாண்டவராயப் பிள்ளையும் உடனிருந்தார். எட்டு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தனர்.
ஆற்காடு நவாப், ஆங்கிலேயர்கள் உதவியுடன் பிடித்து வைத்திருந்த சிவகங்கை, ராமநாதபுரம் ராஜ்ஜியங்களை மீட்டு தனது ஆட்சியை நிறுவ வேலுநாச்சியார் திட்டமிட்டார். அப்போது மைசூர் மன்னர் ஹைதர் அலி திண்டுக்கல்லில் தங்கியிருந்ததால் அவரின் உதவியை நாடினார். அது சம்பந்தமாக ராணியின் அறிவுரைபடி பிரதானி தாண்டவராயன் பிள்ளை விரிவான கடிதம் ஒன்றை ஹைதர் அலிக்கு எழுதினார். அதில் தங்களுக்கு ஐயாயிரம் குதிரைபடை வீரர்களையும், ஐயாயிரம் போர்ப்படை வீரர்களையும் அனுப்பி வைத்தால் உங்கள் படை உதவியுடன் இழந்த எங்கள் இரு ராஜ்ஜியங்களை ஆங்கிலேயரிடமிருந்து மீட்டு விடுவோம் என குறிப்பிட்டிருந்தார். ஹைதர் அலியின் பதிலுக்காக காத்திருந்த போது திடீரென வயது முதுமையின் காரணமாக பிரதானி தாண்டவராயன்பிள்ளை மறைந்தார். கவலை அடைந்த வேலுநாச்சியார் மனம் தளராது மருது சகோதரர்களின் பாதுகாப்போடு மைசூர் மன்னர் ஹைதர் அலியை ஆண் வேடத்தில் குதிரையில் சென்று சந்தித்து தனக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தை ரத்தின சுருக்கமாக உருதுமொழியில் எழுத்து மூலமாக நேரில் அளித்தார். அப்போது மருது சகோதரர்களும் உடனிருந்தனர். ஹைதர் அலி உங்கள் அரசியார் எங்கே? என்று நாச்சியாரிடமே கேட்டபோது, தன் தலையில் அணிந்திருந்த தலைக்கவசத்தை எடுத்துவிட்டு நான் தான் அரசி என்று உருதுமொழியில் கூறினார். சில நிமிடம் இருவரும் உருதுமொழியிலேயே கலந்துரையாடினர். இந்துப் பெண் ஒருவர் இவ்வளவு அழகாக உருது பேசியதை கண்டு நெகிழ்ந்து போன ஹைதர்அலி நாச்சியார் மீது பரிவு கொண்டு அவர் கேட்ட படைகளை அனுப்பி வைத்தார். ஆற்காட்டு நவாப்பிற்கும், மைசூர் மன்னர் ஹைதர் அலிக்கும் ஏற்கனவே பகைமை இருந்து வந்ததால் இது சாத்தியமாயிற்று.
மகிழ்ச்சி அடைந்த வேலு நாச்சியார் “சிவகங்கைப்பிரிவு”, “திருப்பத்தூர் பிரிவு”, “காளையார்கோவில் பிரிவு” என தன் படைகளை பிரித்தார். சிவகங்கைப்பிரிவு தனது தலைமையிலும், திருப்பத்தூருக்கு நள்ளியம்பலம் தலைமையிலும், காளையார்கோவிலுக்கு மருது சகோதரர்கள் தலைமையிலும் படை பிரிக்கப்பட்டு நவாப்படையையும், ஆங்கிலேயர்களின் படையையும் 1780-ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5-ம் நாள் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. சிவகங்கைப் பிரிவிற்கு தான் தலைமை ஏற்றதால், தான் கற்ற வித்தைகள் அனைத்தையும் பயன்படுத்தி வேலுநாச்சியார் போரிட்டார். ஆயுதக்கிடங்கு அழிக்கப்பட்டது. ஆயுதமின்றி திணறிப்போன ஆங்கிலேயப் படை விரட்டி அடிக்கப்பட்டது. அந்தப்போரில் மருது சகோதரர்களின் தீரமிக்கப் போர் வேலு நாச்சியாரின் தேசப்பற்றுள்ள தலைமைப்பண்பும் வெற்றியைத் தேடித்தந்தன. ராமநாதபுரம் இளவரசியாக பிறந்து, சிவகங்கையின் ராணி ஆகி, கணவனை இழந்து, கைக் குழந்தையுடன் போராடி தன் ராஜ்ஜியத்தை மீட்டு சிவகங்கை அரசியாக 1780-ம் ஆண்டில் முடிசூட்டிக் கொண்டார். 66-வது வயதில் 1796, டிசம்பர் மாதம் 25-ந் தேதி காலமானார். இந்திய சுதந்திர போர் வரலாற்றில் முதல் பெண் சுதந்திரப் போராட்ட தியாகி வீரமங்கை வேலு நாச்சியார் ஆவார். அவருடைய வரலாற்றை அனைவரும் அறிந்து கொள்வது மிக மிக அவசியம்.
Tuesday, 25 December 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment