Monday, 24 December 2018

விமர்சனங்களை வெற்றியாக எதிர்கொள்வோம்

யாராவது நம்மை ஏதாவது சொல்லிவிட்டால் `நான் யார் தெரியுமா?’ என்று எகிறுகிறீர்களா, அல்லது “நம்மைப் போய் இப்படிச் சொல்லி விட்டார்களே என்று முடங்கிவிடுகிறீர்களா?” இரண்டுமே விமர்சனங்களை எதிர்கொள்ளும் சரியான அணுகுமுறையல்ல. மாணவப் பருவத்தில் இருந்தே விமர்சனங்களை எதிர்கொள்ளப் பழகிவிட்டால் வாழ்வில் வெற்றி கள் குவியும். விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றியாளராவது எப்படி? என்று பார்ப்போம்... மாணவப் பருவம் இனிமையானது. அப்போது கிடைக்கும் பாராட்டுகளும், மகிழ்ச்சியான அனுபவங்களும் வாழ்க்கை முழுவதும் உந்துசக்தி வழங்கக்கூடியது. மலரும் நினைவு களாக எதிரொலிக்கக் கூடியது. அதுபோலவே எதிர்மறையான கேலிகளும், கிண்டலும், மனதை காயப்படுத்தும் விஷயங்களும்கூட வாழ்க்கை முழுவதும் மனதில் வடுவாகப் பதிந்துவிடும். மோசமான விமர்சனங்கள் பலரை வாழ்வில் செயல்பட விடாமலேயே தடுத்திருக்கிறது. சக மாணவர்கள், வேடிக்கையாய் செய்யும் விமர்சனங்கள் உங்களை காயப்படுத்துகிறதா? உங்கள் உடையைப் பற்றியும், உருவத்தைப் பற்றியும் அவர்கள் பேசுவது மனதுக்கு சங்கடமாக இருக்கிறதா? ஒரு விஷயம் தெரியாமல் இருக்கும்போது, ‘உனக்கு இது கூட தெரியாதா?’ என்று ஆசிரியரும், மற்றவர்களும் கிண்டல் செய்கிறார்களா? தேர்வுகளில் மதிப்பெண் குறைவாகப் பெற்றதையோ, பதில்சொல்லும்போதும், எழுதும்போதும் நடந்த தவறுகளை ஆசிரியர்கள் கேலியாக சுட்டிக் காட்டுகிறாரா? மற்ற மாணவ- மாணவிகளுக்கு முன்பு உங்களை அப்படிச் சொல்லியது அவமானமாக தெரிகிறதா? இவர்கள்தான் இப்படியென்றால், வீட்டில் பெற்றோரும், மற்றவர்களின் கருத்தை ஆமோதிப்பதுபோல உங்களை மட்டம் தட்டி பேசி, வருத்தப்பட வைக்கிறார்களா? எல்லோரது விமர்சனத்துக்கும் விடையாய் அமைகிறது ஒரு தமிழ் பழமொழி. “வைவார்க்கு இன்பம் இல்லை; பொறுத்தார்க்குத் துன்பம் இல்லை”. அவர்களின் விமர்சனத்தில், கருத்துகளில் அர்த்தம் இருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களின் தவறுகளை திருத்தி முன்னேற்றம் காணுங்கள். பொருளற்ற விமர்சனங்களால், கேலி கிண்டல்களால் அவர்கள் அடையும் மகிழ்ச்சி தற்காலிகமானது. அது உங்களின் முன்னேற்றத்தால், நீங்கள் பெற்ற சிறப்பால் அவர்களுக்கு ஏற்பட்ட பொறாமையின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். அது போன்றவர்களின் கேலிகளை அலட்சியம் செய்துவிடுங்கள். அவர்களுக்கு பதில்களால் பதிலடி கொடுக்காமல், முன்னேற்றத்தால் அவர்களிடம் மனம் மாற்றம் ஏற்படச் செய்யுங்கள். ‘வைய வைய வைரக்கல், திட்டத் திட்ட திண்டுக்கல்’ என்னும் பொன்மொழிக்கேற்ப உங்கள் மனதை திடமான வைரமாக வைத்திருந்து ஜொலியுங்கள். உடல் அமைப்பு, ஆடைத் தோற்றம், பெற்றோரின் நிலை போன்ற பல காரணங்களுக்காக உங்களை பட்டப்பெயர் சூட்டி அழைப்பது சிலருக்கு வேடிக்கையாக தோன்றலாம். அதற்காக நீங்கள் கலங்க வேண்டியதில்லை. அவர்களே இன்னும் பண்பட வேண்டியவர்களாவார்கள். அப்படி பேசுபவர்களிடம் எதிர்த்து விவாதிக்க வேண்டாம். சிறு புன்னகையுடன் அலட்சியமாக கடந்துபோனாலே அவர்கள் சோர்வடைந்து போவார்கள். பள்ளிப்பருவத்தில் மட்டுமல்ல, வாழ்க்கை முழுவதுமே இதுபோன்ற விமர்சனங்கள், எதிர் கருத்துகளை எதிர்கொள்ளப் பழக வேண்டும். சொல்லப்போனால், அர்த்தமுள்ள சமூக வாழ்க்கையின் அடித்தளமே எதிர்க்கருத்துதான். சரியோ தவறோ, எதுவாக இருந்தாலும் ஒன்றைப் பற்றிய பல்வேறு பார்வைகள் இருக்க வேண்டும். உங்களைப் பற்றிய விமர்சனங்கள்தான் உங்கள் செயல்களின் அறுவடை. வெறும் பாராட்டுகளால் மட்டும் திருப்தி அடைபவர்களைவிட, விமர்சனத்தை சரியாக எதிர்கொண்டவர்கள், தங்கள் தவறுகளை திருத்திக் கொண்டவர்கள் என்றும் வெற்றியாளர்களாக நிலைப்பார்கள். எனவே பாராட்டுகளில் மயங்க வேண்டாம், விமர் சனங்களால் முடங்க வேண்டாம். நம்மை யாராவது விமர்சனம் செய்யும்போது அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். உண்மையிலேயே நம் மீது தவறு இருந்து, அதை ஒருவர் சுட்டிக்காட்டியிருந்தால் அதைக் களைய முன் வரவேண்டும். இது இறங்கி வருவதல்ல; வளர்ச்சிப் பாதையில் மேலே மேலே போவதற்கான வழி. ஒரு நேர்மையான விமர்சகர், தனிநபர் தாக்குதலில் இறங்க மாட்டார்; அவருடைய விமர்சனம் ஒருவரின் திறமையை அடையாளம் காட்டுவதாக இருக்கும். ஆசிரியர்களின் விமர்சனங்களை இந்த வகையில் சேருங்கள். விளையாட்டாய் விமர்சிப்பவர்கள் மாறிவிடுவார்கள். நண்பர்களின் கேலிகளை இந்த வகையில் சேருங்கள். போட்டியாளர்களும், எதிராளிகளும் தீய எண்ணத்துடன் விமர்சித்து சீண்டிப் பார்ப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள், உங்கள் வளர்ச்சியினால் பொசுங்கிப் போவார்கள். ஆனால் அதற்கு, அவர்களின் வார்த்தைப் பொறியில் சிக்கி நீங்கள் வாடி, முடங்கிப்போகாமல் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும். அதுதான் வெற்றி ரகசியம்!

No comments:

Popular Posts