காணாமல் போகிறதா கடித இலக்கியம்?
இரா.கோமதிசங்கர், பி.எஸ்.என்.எல்.அதிகாரி, திருநெல்வேலி.
க டிதம் எழுதுவதே தனிக் கலை. சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை படிப்பு, தொழில், உத்தியோகம் காரணமாக சொந்த மண்ணை விட்டுப்பிரிந்து பிரிதொரு இடத்துக்கு இடம் பெயர்ந்தவர்கள் தங்கள் உற்றார், உறவினர்களுக்கு சுக,போக விஷயங்களை கடிதம் மூலம் பறிமாறிக்கொண்டனர். தபால்காரரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்து அவர் வந்ததும் நெருங்கிய உறவினரைக் கண்டதைப் போல் வரவேற்று எனக்கு தபால் இருக்கிறதா என்று ஆவலுடன் கேட்ட காலம் இருந்தது. காதலன் மற்றும் காதலி தங்கள் உளக்கிடக்கையை வெளிப்படுத்தும் மனக்கண்ணாடியாக கடிதங்கள் விளங்கின. நமது இதயத்து எண்ணங்களை சுமந்து செல்லும் இனிய தூதர்களாய், தூர இடத்து சொந்தங்களுக்கு சுகத்தை சேர்க்கும் சொர்க்கமாய் இருந்தன. இப்போதெல்லாம் கடிதங்கள் கைவிடப்பட்டு விட்டன.
தகவல் ஊடகங்களின் வேகமான வளர்ச்சி கடிதம் எழுதும் பழக்கத்தை குறைத்து விட்டது. திருச்செந்தூர் அமலிநகர் கடற்கரை தபால் பெட்டியில் தகப்பன் இன்று போட்ட தபால் அட்டை எப்படியும் இரு நாட்களில் திருவொற்றியூர் கடற்கரையில் மகளின் நலம் விசாரித்துவிடும். கல்லூரியில் படிக்கும் மகனுக்கு பணத்தைக் கொண்டு சேர்த்த மணியார்டர் பாரத்தின் கீழே “பணம் அனுப்பியுள்ளேன், பெற்ற விவரத்தை எழுது”, என்ற சொற்களில், அந்தப் பணத்திற்கு அப்பன் பட்டபாட்டை பிள்ளை தெரிந்து கொண்டு விடுவான். ரெயிலிலோ, பஸ்சிலோ வழி அனுப்ப வந்த அப்பா மகனிடம் சொல்லும் பிரியாவிடை, “போனதும் கடுதாசி போடுப்பா” என்பதுதான். இப்படியெல்லாம் அன்பை, ஆசையை, பாசத்தைகொட்டி எழுதும் கடிதப்பழக்கம் நம்மிடையே மறைந்து போனதல்லவா! இலக்கியப் புகழ் பெற்ற, சரித்திரப் பிரசித்தி பெற்ற கடிதங்களும் உண்டு.
மகாத்மா காந்தியடிகள் தனக்கு வந்த கடிதங்களுக்கு தவறாமல் பதில் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தமிழரான, ஜே.சி.குமரப்பா விதிமுறைகளை பின்பற்றுவதில் கறாறான பேர்வழி. இவரைக் கேட்காமலே காங்கிரசின் ஒரு பணிக்கு இவரை செயலாளராக்கினார் காந்தியடிகள். குமரப்பா கோபித்துக் கொண்டு மகாத்மாவிற்கு கடிதம் எழுதினார். மகாத்மா, “உன் சம்மதத்தைக் கேட்காமலே இந்த முடிவை எடுத்தது தவறாக இருக்கலாம். ஆனால் இப்போது என்ன செய்வது? இந்த நடைமுறைகள் எல்லாவற்றையும் மறந்து விட்டு தயவு செய்துவேலையைத் தொடங்கு” என்று பதில் எழுதினாராம். காந்தியடிகளின் கடிதம் குமரப்பாவின் தயவை நாடியதால் சரித்திரத்தில் இடம் பெற்றுவிட்டது.
மகாகவி பாரதி தனது மனைவி செல்லம்மாளுக்கு எழுதிய கடிதத்தை, ‘எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு ஆசீர்வாதம் எனத் தொடங்கி, “நீ கவலைப்படும் நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோசமுறுவேன்.” என்று முடிக்கிறார்.
ஜவகர்லால் நேரு , தமது மகள் இந்திரா பிரியதர்சினிக்கு, எழுதிய கடிதங்கள் மிகவும் புகழ் வாய்ந்தவை. அக்கடிதங்கள் அத்தனையும் உலக வரலாற்றை அவர் தன் புதல்விக்கு கற்பித்தவை. அவற்றை அவர் தான் சிறையிலிருந்த போதே எழுதினார். அவைஅவர் தன் மகள் மீது கொண்ட பாசத்தையும், அவரது இலக்கிய மேதைமையையும், அவரது மகத்தான உலகப் பார்வையையும் ஒருங்கே கொண்டவையாகும். இந்திரா பிரியதர்சினிக்கு அவளது பதிமூன்றாம் பிறந்தநாளன்று நைனிடால் சிறையிலிருந்து நேரு எழுதிய கடிதத்தின் தொடக்கத்தைப் பாருங்கள். “உன்னுடைய பிறந்த நாளன்று உனக்குப் பரிசுகளும் நல்வாழ்த்துக்களும் கிடைப்பது வழக்கம். உனக்கு வேண்டிய மட்டும் நல் ஆசி கூறுகிறேன்: ஆனால் நைனி சிறையிலிருந்து உனக்கு நான் என்ன பரிசு அனுப்ப முடியும்? ஏன்னுடைய பரிசுகள் இம்மண்ணுலகத்தைச் சேர்ந்தவையாக இருக்கமுடியாது. வானத்துத் தேவதை உனக்கு வழங்கக் கூடியதைப் போன்று காற்றாலும், மனத்தாலும், உயிராலும் ஆன பொருளையே உனக்கு நான் அனுப்பக் கூடும். சிறையின் உயர்ந்தமதில் சுவரும் அதைத் தடுக்கமுடியாது” ‘தம்பிக்கு’, என்று விளிதது, அறிஞர் அண்ணா, ‘உடன்பிறப்பே’ என்று அழைத்து கலைஞர் கருணாநிதி ஆகியோர் எழுதியகடிதங்கள் அந்தத் தலைவர்களை இயக்கத்தினரோடு எப்பொழுதும் இணைத்தும் பிணைத்தும் வைத்திருந்தன. இந்த கடிதங்கள் தர்மான இலக்கியங்களாகவே பரிமளித்தன.
இன்று, கைப்பேசிக் கருவிக்குள், பேசிப் பதிவுசெய்து அனுப்பலாம். புகைப்படம் எடுத்து அனுப்பலாம். வாட்ஸ்அப் மூலமாக கதைத்துக் கொள்ளலாம். உலகின் எந்த மூலையிலிருந்தும் நொடிக்குள் தொடர்பு கொண்டு பேசலாம். தகவல் தொடர்பு மிகவும் வளர்ந்துவிட்டது. ஆயினும் கடிதங்கள் தந்த மனக்கிளர்ச்சியினை இந்தப் புதிய வசதிகள் தந்திட முடியுமோ? இப்போதெல்லாம் தபால்காரர் கொண்டுவருவது, அலுவல் ரீதியான கடிதங்களே. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கடிதக் கலையை கற்பியுங்கள். தங்கள் பெற்றோருக்கோ, பிள்ளைகளுக்கோ, கணவருக்கோ, மனைவிக்கோ, ஒரு கடிதம் எழுதிப் பாருங்களேன். காணாமல் போன கடிதப் பழக்கத்தை மீட்டெடுப்போமே!
Sunday, 16 December 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment