Sunday 16 December 2018

இறுதி வெற்றி நேர்மைக்கே...!

இறுதி வெற்றி நேர்மைக்கே...! பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி இன்று (டிசம்பர் 9-ந்தேதி) சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம். ‘இன்னைக்கி நான் ஊருக்குப் போயே ஆவணும்... ‘எதாவது’ செய்யுங்களேன். ‘இங்கதான் படிப்பேன்.. இந்த ‘கோர்ஸ்’ தான் வேணும்னு அடம் பிடிக்கறான்.. எப்படியாச்சும்’ ஒரு இடம் ஏற்பாடு பண்ணுங்களேன்.. “எதாவது..’ ‘எப்படியாவது..’ இவைதாம் ஊழலின் ஊற்றுக் கண். மரபு, வழக்கம் அல்லது சட்டத்தின் படி, தமக்கு உரிமை இல்லாத ஒன்றை முறையற்ற வகையில் பெறுகிற வழிமுறைகள் அனைத்துமே ஊழல்’ தான். யாருக்கேனும் பணத்தை லஞ்சமாகக் கொடுப்பதுதான் ஊழல் என்று கருதுகிறோம். அது மட்டுமே அல்ல. முன் கூட்டியே தகவல் தெரிவிப்பது, சட்டப்படி அல்லாது தனிப்பட்ட முன்னுரிமை தருவது, தெரிந்தே சட்டத்தின் குறைகளைச் சாதகமாகப் பயன்படுத்துதல், பயன்படுத்தத் துணை போதல்....இவை எல்லாமே ஊழலின் வெவ்வேறு வடிவங்கள்தாம். தனக்குள்ள அதிகாரத்தை, அதன் நேரடிப் பயன்பாட்டுக்கு இன்றி, வேறு எதற்குப் பயன் படுத்தினாலும், அது தவறு; முறைகேடு; ஊழல். திருமணங்களில், கோவில் திருவிழாக்களில், சமுதாயக் கூட்டங்களில், சில ‘முக்கியஸ்தர்கள்‘ வரிசையில் இருப்பவர்களைக் கருத்தில் கொள்ளாமல் ‘நேரே‘ செல்கிறார்கள் அல்லவா..? இது வெறுமனே, ‘அநாகரிகம்’ மட்டுமல்ல; ஒரு வகையில் அதிகார துஷ்பிரயோகம் கூடத்தான். வெளிப்படையான சட்டமோ, விதிமுறையோ மாறாக இல்லாத போது, முன்னே வருபவருக்கே முன்னுரிமை.’ எல்லாக் களங்களிலும், எல்லாக் காலங்களிலும் இதுவே பொது விதி. எங்கெல்லாம் இந்த விதி மீறப்படுகிறதோ, அங்கெல்லாம் அநேகமாக, ஊழல் இருக்கிறது. ஊழல், வலியவர்களுக்குப் பயனையும் வறியவர்களுக்கு பாதிப்பையும் தரக் கூடியது. ஒருவருக்கு நன்மை செய்து, ஊருக்கே தீமை விளைவிப்பது.ஊழலின் குணம் இது. அதனை மாற்ற முடியது. ஊழல் நடவடிக்கையில் தருகிறவர், பெறுகிறவர் ஆகிய இருவருமே குற்றவாளிகள். இதனால், ஊழலை நிரூபிப்பது, பெரிய சவாலாக மாறி விடுகிறது. இதிலே, இன்னொரு சிக்கலும் இருக்கிறது. ‘அவரு கிட்ட இருக்குது, குடுக்கறாரு... அவருக்கு வர்ற லாபத்துலதானே நமக்கு ஒரு பங்கு தர்றாரு..?‘ போன்ற நியாயமான‘ வாதங்கள். இவை எல்லாம், பொய்யானவை; புறம் தள்ள வேண்டியவை. தருகிறவர்‘, ‘பெறுகிறவர்‘ ஆகிய இருவருக்கும் பிரச்சினை இல்லை; அப்புறம் என்ன..? என்று நம்மில் பலரும் நினைக்கிறோம். நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். ஊழல் இந்த இருவருக்கும் அப்பால், மூன்றாமவரையும் தாக்கும். அதைத் தாண்டியும் பயணிக்கும்; பாதிக்கும். நெறிமுறைகளை மீறிய செயல்கள், மனித இனத்தில் காலம் காலமாகவே இருந்து வருகின்றன. ஆனால் அவற்றைச் சமூகம் அங்கீகரித்தது இல்லை. தவறு இழைத்தவர்களை ஏற்றுக் கொண்டதும் இல்லை. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, நமக்கு முந்தைய தலைமுறையினர், கொலை, கொள்ளை, அபகரிப்பு வரிசையில்தான் ஊழலை வைத்து இருந்தனர். அதனால் ஊழல் பெரிய அளவில் தீமை விளைவிக்கக் கூடியதாய் இல்லை. இப்போது நிலைமை முற்றிலும் மாறி விட்டது. ஊழலைக் கண்டிக்கிற தார்மீக உரிமையைக் கூட இழந்து வருகிறோம். எப்படி மாற்றுவது...? சட்டத்தைத் தீவிரமாக அமல் படுத்துவது, தண்டனையைக் கடுமையாக்குவது. அதை விடவும், உண்மையை நாசூக்காக எடுத்துரைத்து, உணரச் செய்வது. அருமையாகக் கூறுகிறார் தமிழ் மூதாட்டி ஔவையார்: “ஏற்பது இகழ்ச்சி”. (ஆத்தி சூடி) தனக்கு உரிமை அல்லாத ஒன்றை ஏற்றுக் கொள்வது, இழிந்த செயல்.ஒரு விருந்து. பந்தியில் அமர்ந்து உணவருந்திக் கொண்டு இருக்கிறோம். நமக்குப் பரிச்சயம் இல்லாத ‘முகம் தெரியாத‘ ஒருவர், நமக்கு அடுத்ததாக அமர்ந்து இருக்கிறார். நம் இலையில் வைத்த சோறு, காலியாகி விட்டது; மீண்டும் வைப்பார்களா என்று தெரியவில்லை. என் இலையில நிறைய வச்சுட்டாங்க.. வீணாத்தான் போவுது.. எடுத்துக்குங்களேன்...‘ என்று பக்கத்து இலைக்காரர் தந்தால், ஏற்றுக் கொள்வோமா...? நேர் வழியில் அன்றி வேறு எப்படிப் பெற்றாலும், என்னவாக இருந்தாலும், அது இழிவானதுதான். இந்த எண்ணம் ஆழப் பதிந்து விட்டால் போதும் யாரிடம் இருந்தும் பெறுவதற்குக் கை கூசும்; மனம் வெறுக்கும். ஊழலுக்கு ஒருவரைத் தள்ளி விடுவது எது..? பேராசை. ஆடம்பரத்தின் மீதுள்ள மோகம்.அடிப்படையில் மனிதன், ஒரு சமுதாய விலங்கு. தனது குடும்ப நலன், சமூகத்தில் ‘அந்தஸ்து‘ ஆகியன, அவனுக்கு மிக முக்கியம். இதனைப் பணம், பட்டம், பதவி தரும் என்று தவறாகக் கருதுகிறான். உண்மையில், குறைந்த தேவைகளுடன் வாழ்க்கையை நடத்திச் செல்வதில், தனி சுகம் உள்ளது. இதையெல்லாம், காந்தி காலத்துத் தத்துவம் என்று ஏளனம் செய்கிறோம். ஆனால், இன்றைய உலகில் எளிய வாழ்க்கைதான், சிறந்த ஆரோக்கியமான வாழ்க்கை. இது புரியாமல்தான், பணம், புகழின் பின்னால் ஓடிக் கொண்டு இருக்கிறோம். இன்னும் எத்தனை யுகங்கள் கடந்தாலும், நேர்மையானவர்களுக்குச் சமூகம் தருகிற மரியாதை, மாறவே மாறாது. அதே போன்று, தவறானவர்களைப் போலியாக வேண்டுமானால் போற்றலாமே தவிர்த்து, உள்ளன்போடு ஒருக்காலும் ஒருவரும் மதிப்பதே இல்லை. ஊழலின் எதிர் வினைகள், அது ஏற்படுத்தும் தீய விளைவுகள் குறித்து எடுத்துச் சொல்லி, ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துகிற நோக்கத்தில், ஐக்கிய நாடுகள் சபை, 2003-ம் ஆண்டு முதல், டிசம்பர் 9 அன்று ‘ஊழல் எதிர்ப்பு நாள்’ அனுசரித்து வருகிறது. இந்தியாவில் 1988-ம் ஆண்டு ‘ஊழல் தடுப்பு சட்டம்‘ கொண்டு வரப் பட்டது. 2018 ஜூலை 26, இச்சட்டம் திருத்தம் செய்யப் பட்டது. நம்ப முடியாத ஓர் உண்மை இந்தச் சட்டத்தில் எங்கும், ‘ஊழல்’ என்பதற்கான வரையறுக்கப்பட்ட பொருள் தரப்படவே இல்லை!! என்னதான் இருந்தாலும், சட்டத்தின் மூலமாக, ஊழலை முற்றிலுமாக அகற்றி விட முடியாது. ‘என் ஊதியத்துக்கு மேலாய், பிறர் பொருள் எனக்கு வேண்டாம்’ என்கிற வைராக்கியம்; ‘எனக்கு வேண்டியதை என்னால் நேர்வழியில் சம்பாதித்துக் கொள்ள முடியும்’ என்கிற நம்பிக்கை ஊழலை ஒழித்து விடும். அதற்கு உதவுகிறது இந்தக் கேள்வி நேர்மையாக இருப்பதால், நான் எந்த விதத்தில் குறைந்து போய் விட்டேன்..?’

No comments:

Popular Posts