Monday 17 December 2018

மாணவர்களின் ஆராய்ச்சி, அறிவு வளர்ச்சிக்கு உதவும் ‘கூகுள் எக்ஸ்புளோர்’!

நீங்கள் கூகுள் மேப் அப்ளிகேசனை பயன்படுத்தி வழி தேடி இருப்பீர்கள், ரெஸ்டாரண்ட் தேடி புதிய சுவையை அனுபவித்திருப்பீர்கள்? கூகுளில் உங்கள் கல்விக்கும், ஆராய்ச்சிக்கும் உதவும் எக்ஸ்புளோர் என்ற பகுதி இருப்பதை நீங்கள் அறிவீர்களா? கூகுள் எக்ஸ்புளோரின் பயன்பாடு என்ன? மாணவர்கள் அதை பயன்படுத்துவது எப்படி என்பது பற்றி அறிவோமா...

எக்ஸ்புளோர் எதற்காக?

கூகுள் எக்ஸ்புளோர் அப்ளிகேசன் 2016-ல் அறிமுகம் செய்யப்பட்ட கூகுள் வசதியாகும். நாம் உள்ளீடு செய்யும் தகவல் களுக்கு ஏற்ப சில பதில்களையும், பட்டியலையும் தானியங்கி முறையில் தயாரித்து தரக்கூடியது. கூகுள் ஷீட்ஸ், கூகுள் டாக்ஸ், கூகுள் ஸ்லைட்ஸ் போன்ற வசதிகளும் இதன் உள்ளடங்கியதாக பயன்படுத்த முடியும். ஆரம்பத்தில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்பட்ட இது தற்போது ஐ.ஓ.எஸ். தளங்களிலும் செயல்படுகிறது.

கூகுள் எக்ஸ்புளோர் அப்ளிகேசன் மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டதல்ல. பொதுமக்களின் செயல்திட்டங்களை வடிவமைப்பதற்கான பிரத்தியேக வசதிகளை கொண்ட அப்ளிகேசனாக உருவாக்கப்பட்டது. இதை மாணவர்களும் பயனுள்ள வகையில் பயன்படுத்தலாம். நம்மை விழிப்படையச் செய்யும் அலாரம் போல, நம் பார்வையை விசாலமாக்கித் தரும், வித்தியாசமான கோணங்களில் நம்மை சிந்திக்க வைத்து வழிநடத்தும் ஒரு வழிகாட்டியாக இதை பயன்படுத்தலாம். இது நமது கூடுதல் கரங்களாக உதவும். குறிப்பாக நாம் உள்ளீடு செய்யும் தகவல்களை நமக்கு பயனுள்ள பல பட்டியல்களாக தானியங்கி முறையில் செயல்படுத்தித் தரவல்லது.

எப்படி பயன்படுத்துவது?

கூகுள் எக்ஸ்புளோரை பயன்படுத்த முதலில் ஒரு கூகுள் அக்கவுண்ட் கணக்குத் தேவை. நியூ யூசர் என்பதில் சென்று உங்கள் பெயருக்கு கணக்கை தொடங்கிக் கொள்ளுங்கள். பின்னர் கூகுள் எக்ஸ்புளோர் அப்ளிகேசனை உங்கள் கணினி அல்லது ஸ்மார்ட் போனில் நிறுவிக் கொண்டால் இதன் பல்வேறு பயன்பாடு களையும் அனுபவிக்கத் தொடங்கலாம்.

அப்ளிகேசனை திறந்து உள்ளே சென்றதும் புதிய ஸ்பிரட்ஷீட் உருவாக்கிக் கொள்ளுங்கள். அதில் உங்கள் திட்டத்தை எழுதுங்கள்.

நாள் அடிப்படையிலோ, நேர அடிப்படையிலோ, எண் வரிசை அடிப்படையிலோ, பெயர் அடிப்படையிலோ நீங்கள் தகவல்களை கொடுத்துக் கொள்ளுங்கள்.

உதாரணமாக நீங்கள் தினமும் நேரத்தை எப்படி செலவிடுகிறீர்கள் என்பதை பதிவு செய்யுங்கள். 5 மணி அல்லது 6 மணிக்கு எழுந்திருப்பதில் இருந்து, எவ்வளவு நேரம் படிக்கிறீர்கள், காலைக்கடன்கள், பள்ளி புறப்பாட்டிற்கான நேர அளவை குறியுங்கள். பள்ளியில் இருக்கும் நேரத்தையும், அதில் பாட வேளைகள், ஓய்வு வேளைகள், நண்பர்களுடன் உறவாடும் வேளைகள் என உட்பிரிவு நேரங்களாக குறிக்கலாம். பள்ளி சென்று வரும் பயண நேரம், டியூசன் செல்லும் நேரம், டி.வி. பார்க்கும் நேரம், போனில் செல விடும் நேரம், பெற்றோருடன் செலவிடும் நேரம், டயரி எழுதும் நேரம், தூங்கச் செல்லும் நேரம், தூங்கும் நேரம், தூங்கி விழிக்கும் நேரம் எல்லாவற்றையும் பதிவு செய்யலாம்.

சிறப்புகள்...

இதேபோல ஒவ்வொரு பருவத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள், ஆசியர்களின் வார தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றை பதிவு செய்து வைக்கலாம். இந்த விவரங்களை ஒப்பிட்டு பல பட்டியல்கள், புள்ளிவிவரங்களை பகுப்பாய்வு (analyzing) செய்து தருவதுதான் எக்ஸ்புளோரரின் சிறப்பு வசதியாகும்.

இப்படி பதிவு செய்த தகவல்களில் எந்தப் பாடத்தில் நாம் அதிக மதிப்பெண் பெற்றிருக்கிறோம், (Which lesson/test has the top score?) பாடங்களின் சராசரி மதிப்பெண் என்ன? தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி என்ன? என்பதுபோன்ற கேள்விகளை கொடுத்து, அதற்கான பதில்களை தனியே தேடிப் பெற முடியும்.

இதை செயல்படுத்த கூகுள் எக்ஸ்புளோரை திறந்து புதிய கூகுள் ஷீட் உருவாக்கி விவரங்களை உள்ளீடு செய்யுங்கள்.

இப்போது அதன் அடிப்பகுதியின் வலது ஓரத்தில் பச்சை நிற எக்ஸ்புளோர் பொத்தான் தெரியும். அதை கிளிக் செய்து ஆன்சர்ஸ் (Answers) என்ற இடத்தின் கீழே, உங்கள் கேள்விகளை பதிவு செய்யுங்கள.

1. Which subject has the top score on Test 1?”

2. What is the average of test 1? என்பதுபோல பல கேள்விகளை கொடுத்து பதிலை பெறலாம். இதற்கு பாடங்கள் வாரியாகவும், தேர்வு வாரியாகவும் நீங்கள் விவரங்களை பதிவு செய்திருப்பது அவசியமாகும்.

வரைபடம் உருவாக்கலாம்

இப்படி கேள்வி கேட்டு பதிலைப் பெறுவதுபோல, இந்த தரவுகளை புள்ளி விவர வரைபடமாகவும் தயாரிக்க முடியும். உதாரணமாக நீங்கள் உள்ளீடு செய்த விவரங்கள் அடங்கிய ஷீட்டின் அடிப்பகுதியில் எக்ஸ்புளோர் பொத்தான் வழியே சென்று சார்ட் (chart) என்ற வசதியை சொடுக்கினால் உள்ளீட்டு விவரங்கள் தானியங்கி முறையில் வரைபடமாக தயாரிக்கப்பட்டுவிடும். தேர்வும் - மதிப்பெண் உயர்வும், ஏற்ற இறக்கங்களுடன் வரைபடமாக காட்டப்படும்.

இந்த சார்ட்டுகளை நீங்கள் எடிட் கொடுத்து மாற்றம் செய்ய முடியும். குறிப்பிட்ட புள்ளியை இழுத்து நகர்த்தினாலே எளிமையாக சார்ட்டை எடிட் செய்ய முடியும். புதிய சார்ட்டையும் தயாரிக்கலாம்.

தனியே கூகுள் சார்ட் அப்ளிகேசன் சென்றால் இன்னும் ஏராளமான வகையில் சார்ட் வசதிகளை பயன்படுத்தலாம். வீட்டு உபயோகம் தொடங்கி, வணிகம், அலுவலகப் பயன்பாடு என ஏராளமான சார்ட் வசதிகள் உள்ளன. எக்ஸ்புளோர் வசதியிலும் குறிப்பிட்ட அளவில் சார்ட் வசதிகள் இருக்கின்றன. இவை சார்ட் பக்கத்தின் மேல்புற வலது மூலையில் கொடுக்கப்பட்டிருக்கும்.

இன்னும் பல்வேறு விதங்களிலும் நாம் உள்ளீடு செய்த விவரங்களை பகுப்பாய்வு செய்து பார்க்க கூகுள் எக்ஸ்புளோரில் வழிகள் உள்ளன. குறிப்பிட்ட ஒரு காலத்தை மட்டும் தேர்வு செய்து கொண்டு ஹைலைட் கொடுத்தால் அதுபற்றிய விவரங்களை தனியே பார்க்கவும், வேறுசில வகையில் பயன்படுத்தவும் வசதிகள் வழங்கப்படும். 8 விதங்களில் நமது தரவுகளை பகுப்பாய்வு செய்து பட்டியல்படுத்தி தரக்கூடியது கூகுள் எக்ஸ்புளோர்.

மாணவர்கள் இந்த வசதிகளை நன்கு பயன்படுத்தி தங்கள் நேரத்தையும், பாடத்திட்டங்களையும் பட்டியலிட்டு வெற்றிப்பாதையில் பயணிக்கலாம். ஆராய்ச்சி மாணவர்களும் தங்களுக்குத் தேவையான புள்ளிவிவரங்களைக் கொடுத்து வரைபடங்களை உருவாக்கி ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆசிரியர்களும் வழிநடத்தலாம்..

கூகுள் எக்ஸ்புளோர் மாணவர்களுக்கானது மட்டுமல்ல. ஆசிரியர் மாணவர்களை வழி நடத்தவும், பெற்றோர் பிள்ளைகளை வழிநடத்தவும், தங்கள் சொந்த புள்ளிவிவரங்களை பதிவு செய்து பட்டியல் தயாரிக்கவும் முடியும்.

ஆசிரியர்கள் தங்கள் பாடவகுப்பு உள்ளிட்ட கால அட்டவணையை பதிவு செய்து வைத்துக் கொண்டு செயல்படலாம். மாணவர்களின் வருகை, மதிப்பெண் விவரம், தேர்வு வாரியான விவரம் ஒவ்வொன்றையும் கொடுத்து வைக்கலாம். தேவையான வினாக்களை எழுப்பி, முதல் மதிப்பெண் பெற்றவர் யார்? அதிக சராசரி பெற்றவர் யார், கடைசி 5 மாணவர்கள் யார், அதிக விடுப்பு எடுத்தவர் யார்? என்பது போன்ற கேள்விகளை கேட்டு விவரங்களை பதிலாக பெற முடியும். ஒரு மாணவரின் பெயரையும் அவர் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களையும் ஒரு அட்டவணையாகவோ, இரு மாணவர்களை ஒப்பிட்டு புள்ளிவிவர சார்ட் தயாரித்தோ பிரிண்ட் எடுக்கலாம். நீங்களாவும் இதுபோல சார்ட் வடிவமைக்கலாம். பெற்றோர்கள் குழந்தைகளின் (மாணவர்களின்) நேர நிர்வாக அட்டவணை, தங்களின் வரவு செலவு உள்ளிட்ட திட்ட விவரங்களை சார்ட்டாக தயாரித்து பயன்பெறலாம்.

No comments:

Popular Posts