Monday 17 December 2018

உயர்கல்வியில் துணைவேந்தரின் பங்களிப்பு

உயர்கல்வியில் துணைவேந்தரின் பங்களிப்பு. டாக்டர் மா.பா.குருசாமி, (காந்திய பொருளாதார நிபுணர்) உ யர்கல்வியின் வழிகாட்டும் ஒளி விளக்காக விளங்குவது பல்கலைக் கழகம். கல்லூரி கல்வியின் வாழ்வும், வளர்ச்சியும், சீரும்-சிறப்பும், மேன்மையும், மாண்பும் பல்கலைக்கழகங்களை சார்ந்தே அமைகின்றன. “வரப்புயர நீருயரும்; நீருயர நெல்லுயரும்” என்பார்கள். இந்த கருத்து கல்விக்கும் ஏற்றது. உயர்கல்வியின் வரப்பாக விளங்குவது பல்கலைக்கழகம். நமது நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு நீண்ட மரபும், வரலாறும் உள்ளன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கல்வியை முறைசாராததாக உருவாக்கினர். தொடக்கக் கல்வி, இடைநிலை, உயர்நிலை பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வி என பகுத்தார்கள். உயர்நிலை பள்ளிக்கல்வி வரை அரசின் கட்டுப்பாட்டிலும், கல்லூரி கல்வியை தனி அமைப்பான பல்கலைக்கழகத்திடமும் விட்டு வைத்தார்கள். நாடு விடுதலை பெற்ற பிறகும் இந்த கட்டமைப்பில் ஏறத்தாழ அந்த நடைமுறையையே பின்பற்றுகின்றோம். உள்ளடக்கத்தில் நிறைய மாற்றங்களை செய்துகொண்டு இருக்கிறோம். நாடு விடுதலை பெற்றபோது, 2 பல்கலைக்கழகங்கள் மட்டும் தான் இருந்தன. ஒன்று சென்னை பல்கலைக்கழகம், மற்றொன்று அண்ணாமலை பல்கலைக்கழகம். சென்னை பல்கலைக்கழகம் அரசின் நேரடி கட்டுப்பாட்டிலும், அண்ணாமலை பல்கலைக்கழகம் தனியார் வசமும் இருந்தன. உயர்கல்வியில் தமிழகத்துக்கு என்று சிறப்பும், பெருமையும் இருந்தது. வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் கூட மாணவர்கள் இங்கு வந்து கல்வி பயின்றனர். சென்னை பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி செயல்பட்ட கல்லூரிகளின் எண்ணிக்கை குறைவு. ஆனால் ஒவ்வொரு கல்லூரிக்கும் நல்ல பெயர் இருந்தது. அரசு கல்லூரிகளும், தனியார் கல்லூரிகளும் போட்டி போட்டு செயல்பட்டன. சில கல்லூரிகளின் முதல்வர்கள் மக்களால் போற்றப்பட்டனர். நாடு விடுதலை பெற்றபோது, சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக உயர்ந்து விளங்கியவர் டாக்டர் லட்சுமணசாமி முதலியார். இவர் திறமைமிக்க மருத்துவராகவும், சிறப்புமிக்க துணை வேந்தராகவும் விளங்கினார். அப்போதைய கல்வி அமைச்சர் அவரை பார்க்க விரும்பியபோது, “பல்கலைக்கழக அலுவலகத்தில் வந்து பார்க்கும்படி கூறுங்கள்” என்றாராம். இது அன்றைய துணை வேந்தரின் நிலை, மேன்மை, சிறப்பு.நாடு விடுதலை பெற்ற பின்னர் கல்லூரிகளின் எண்ணிக்கை பல்கி பெருகியுள்ளது. அதுவும் சுயநிதி கல்லூரிகள் அமைக்க அரசு அனுமதி அளித்த பிறகு, கல்வி வாணிபமாக மாறியது. இதனால் எங்கு பார்த்தாலும் கல்லூரிகள் நிறைந்துள்ளன. அதற்கேற்ப பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளன. பரவல்முறையின் அடிப்படையில் இந்த கல்வி நிறுவனங்களின் உயர்கோபுர வளர்ச்சி தேவையை ஒட்டியதாக தோன்றலாம். இது நமது மாநிலம் மட்டுமல்ல, நாட்டின் நிலைமையும் கூட. பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கையில் அதிகரித்த அளவுக்கு, கல்வி தரத்தில் உயரவில்லை. உலகில் உள்ள பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகின்றனர். இதில் முதல் 100 பல்கலைக்கழகங்களில் நமது நாட்டு பல்கலைக்கழகங்கள் ஒன்றுகூட இடம் பிடிக்கவில்லை. இதுதான் நம் நாட்டு உயர்கல்வியின் நிலை. பொதுவாக நமது நாட்டு பல்கலைக்கழகங்களில், குறிப்பாக தமிழ் பல்கலைக்கழகங்களில் சில குறைபாடுகள் ஊடுருவி நிற்கின்றன. அவற்றை தீர்க்க இயலவில்லை. இதில் ஒரு வகையான தடுமாற்றம் தொடருகின்றது. புதிய பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்ட காலத்தில் எல்லாம் அவை நன்றாகத்தான் நடைபெற்றன. விடுதலைக்கு பிறகு தமிழகத்தில் தோன்றிய முதல் பல்கலைக்கழகம் மதுரை பல்கலைக்கழகம் ஆகும். இதன் முதல் துணை வேந்தர் பேராசிரியர் பொ.மீனாட்சி சுந்தரனார். அவரை தொடர்ந்து டாக்டர் மு.வரதராசனார் துணை வேந்தராக பொறுப்பேற்றார். இவர்கள் நேர்மையான முறையில், பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைத்தனர். தொடர்ந்து வந்த துணை வேந்தர்களும் பல்கலைக்கழக மேம்பாட்டுக்கு தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக வழங்கினர். இடைப்பட்ட காலத்தில் அரசியல் நுழைந்துவிட்டதால், 2010-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு துணை வேந்தரின் தகுதி குறித்து திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்தது. துணை வேந்தராக வருகின்ற ஒருவர் குறைந்தது 10 ஆண்டுகள் பேராசிரியராக சிறப்பாக பணியாற்றி இருக்க வேண்டும். நல்ல ஒழுக்கமும், நேர்மையும், திறமையும் உடையவராக விளங்க வேண்டும். இவை நியமன நியதிகள். சில ஆண்டுகளாகவே நமது பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனத்தில் சில தாழ்நிலைகள் ஏற்பட்டு இன்றும் தொடர்கின்றன. துணை வேந்தர் நியமனத்தில் அரசியல் தலையீடு மிகுந்துள்ளது. ஆளுங்கட்சியை சார்ந்து, சாதி, மத, சமயம் பார்த்து துணை வேந்தர்களை நியமிக்க முயன்றனர். அதனை தொடர்ந்து வந்த கொடுமை தான், கோடிக்கணக்கில் பணத்தை பெற்று துணைவேந்தரை நியமிக்கும் இழி நிலை. இதனை தற்போதைய தமிழக ஆளுநரே மிகுந்த வேதனையோடு குறிப்பிட்டது நினைவுகூரத்தக்கது ஆகும். எடுத்துக்காட்டாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கடந்த 2 துணை வேந்தர்களை குறிப்பிடலாம். அவர்களது தகுதிகள் பற்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இறுதி துணை வேந்தர் மீது தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தால் அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இவற்றை போல வேறு சில பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற சீர்கேடுகளையும் கூறலாம். புதிய துணை வேந்தர் நியமனத்தில் பல சிக்கல்கள் எழுகின்றன. இது துணை வேந்தர் தேடுதல் குழுவை அமைப்பதில் இருந்தே தொடங்குகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இதற்கு சான்று. நமது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியாற்றுபவர்களில் நல்ல கல்வி தகுதியும், 10 ஆண்டுகளுக்கு மேல் பேராசிரியர் அனுபவமும், கல்லூரியின் பல்வேறு நிர்வாக திறமைகளும், ஆய்வு சிறப்பும், நேர்மையும், வழிகாட்டும் திறனும் கொண்டவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நியமிக்க பரிந்துரை செய்வதுதான் தேடுதல் குழுவின் பணியாகும். இன்று உயர் கல்வி ஒரு நெருக்கடி நிலையில் உள்ளது. துணைவேந்தர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் நியமனத்திலும், அவர்களுடைய தேர்வு சரியாக இல்லை என்று கூறப்படுகிறது. எல்லாவற்றிலும் ஊழல், லஞ்சம் தலைவிரித்தாடுகிறது என்கின்றனர். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் பேராசிரியர்கள் பற்றி நாள்தோறும் வருகின்ற செய்திகள் பெருமைபடக்கூடியதாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். சரிந்து, நிலைகுலைந்திருக்கும் பல்கலைக்கழகங்களை, நீதிமன்றங்கள், கல்வியாளர்களின் வழிகாட்டுதலின்படி சரிசெய்ய, அரசு விரைந்து தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உயர்கல்வியை காப்பது, நமது நாட்டை உலக அளவில் உயர்த்தும்.

No comments:

Popular Posts