Sunday 16 December 2018

பெண்களுக்கு ஆபத்தான இடமா, வீடுகள்?

பெண்களுக்கு ஆபத்தான இடமா, வீடுகள்? இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதையும் சமீபத்தில் ‘மீ டூ’ என்ற பெரும் புயல் ஒன்று தாக்கி ஓய்ந்திருக்கிறது. ஆண்டாண்டு காலமாக பணித்தலங்களிலும், சமூகத்திலும் தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைக்கு எதிராக பெண்கள் வெகுண்டெழுந்ததன் விளைவுதான் அந்த சூறாவளியாக சுழன்றடித்தது. சமூகத்தில் நல்லவர் போல வேடமிட்டு திரியும் பல பெருந்தலைகளின் பொய் முகங்கள் இந்த புயலில் அடித்து செல்லப்பட்டு உண்மை முகம் வெளிப்பட்டன. ஆணாதிக்க சமூகத்துக்கு சவுக்கடி கொடுத்தது மட்டுமின்றி, மங்கையர் அனுபவித்து வரும் துயர்களுக்கு எதிரான விழிப்புணர்வையும் ஏற்படுத்தியதில் ‘மீ டூ’ இயக்கம் பாராட்டு பெற்றது. ஏராளமான பெண் பிரபலங்கள் பகிரங்கமாக பாலியல் புகார் கூறிய போது, உலகறிந்த மகளிருக்கே இந்த நிலை என்றால், ஊரறியா பெண்டிரின் நிலைமை எப்படியிருக்கும்? என்ற கேள்வி எழுந்தது. பெண்களுக்கு வெளியில் எங்குமே பாதுகாப்பு இல்லை என்ற எண்ணமும் தோன்றியது. ஆனால் வெளியிடங்களை விட பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய வீட்டில்தான் அவர்களுக்கு அதிக பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு உதாரணமாக சமீபத்திய 2 நிகழ்வுகளை கூற முடியும். ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த கடீரா என்ற இளம்பெண் கடந்த 13 ஆண்டுகளாக தனது சொந்த தந்தையால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு 2 குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். இடையில் சிலமுறை கருக்கலைப்பும் செய்திருக்கும் அவர், தற்போது தந்தையின் கொடூரத்தை உலகறியச்செய்து தண்டனை பெற்றுத்தருவதற்காக கோர்ட்டுகளின் படியேறி வருகிறார். அடுத்ததாக மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த 4 வயது சிறுமியின் நிலை இன்னும் மோசமானது. இரவில் குடிபோதையில் வரும் அவளது தந்தை பெல்ட்டால் அடிப்பது, கடிப்பது, ஊசியால் குத்துவது என தனது பாலியல் வக்கிரங்களை சிறுமியிடம் காட்டியுள்ளார். மாதர் சங்கத்தினரின் தலையீட்டால் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. மேற்படி சம்பவங்கள் அனைத்தும் ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பது போலத்தான். ஏனெனில் சமீபத்தில் ஐ.நா. வெளியிட்டு இருக்கும் அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவொன்று இதைத்தான் உறுதி செய்திருக்கிறது. அதாவது பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்தான இடமாக அவர்களது சொந்த வீடே இருப்பதாக ஐ.நா.வின் போதைப்பொருள் மற்றும் குற்றத்தடுப்பு அமைப்பு கண்டுபிடித்து உள்ளது. அதற்கு ஆதாரமாக சில புள்ளி விவரங்களை அந்த அமைப்பு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி உலக அளவில் கடந்த ஆண்டு மட்டும் சுமார் 87 ஆயிரம் பெண்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதில் 34 சதவீதம் பேர் தனது துணைவராலும், 24 சதவீதம் பேர் பெற்றோர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் போன்ற உறவுகளாலும் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். குறிப்பாக ஒரு மணி நேரத்துக்கு 6 பெண்கள் என நாளொன்றுக்கு சராசரியாக 137 பெண்கள் குடும்ப அங்கத்தினரால் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இப்படி கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இந்தியாவிலும் இத்தகைய குடும்ப வன்முறைக்கு பலியாகும் பெண்களின் எண்ணிக்கை அபரிமிதமாகவே இருக்கிறது. இங்கு 15 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 27 சதவீதம் பேர் குடும்பத்தினரால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. தேசிய குடும்ப நல ஆய்வு என்ற பெயரில் மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அந்த ஆய்வு முடிவுகளின்படி, 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 3-ல் ஒருவர் இத்தகைய வன்முறையில் சிக்கியிருக்கிறார். இந்த வன்முறை சம்பவங்கள் நகர்ப்புறங்களை விட (23 சதவீதம்) கிராமங்களிலேயே அதிகமாக (29 சதவீதம்) இருக்கிறது. திருமணமான பெண்களில் 31 சதவீதத்தினர் உடல், உணர்வு மற்றும் பாலியல் ரீதியாக தங்கள் துணையால் (கணவர் மற்றும் முன்னாள் கணவர்) துயர்களை அடைகின்றனர். இதில் 27 சதவீதத்தினர் உடல் ரீதியாகவும், 13 சதவீதத்தினர் உணர்வு ரீதியாகவும் துன்பங்களை அடைவதாக அந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. தங்கள் வாழ்க்கை துணையால் வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் 3-ல் ஒருவருக்கு உடல் ரீதியான காயங்கள் உண்டாகிறது. திருமணமாகாத பெண்களை பொறுத்தவரை தாய் அல்லது மாற்றாந்தாய் மூலம் 56 சதவீதத்தினரும், தந்தை அல்லது சித்தப்பா மூலம் 33 சதவீதம் பேரும், சகோதர-சகோதரிகள் மூலம் 27 சதவீதம் பேரும் துயர்களை சந்திக்கின்றனர். மேலும் உறவினர் (27 சதவீதம்), முன்னாள் அல்லது இந்நாள் ஆண் நண்பர் (18 சதவீதம்), நண்பர் அல்லது அறிமுகமானவர் (17 சதவீதம்) மற்றும் குடும்ப நண்பர் (11 சதவீதம்) போன்றவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர். இப்படி வீட்டில் அரங்கேறும் வன்முறையை சந்திக்கும் இந்திய பெண்களின் துயரப்பட்டியல் நீளுகிறது. இந்தியாவை பொறுத்தவரை வரதட்சணை பிரச்சினை, ஆணவக்கொலை, குழந்தை திருமணம், பாலியல் அத்துமீறல் போன்ற குற்றங்களால் வீட்டுக்குள்ளே பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. கல்வியறிவு இல்லாத பாமரர்கள் முதல் கற்றறிந்த அறிஞர்கள் வரை பெண்களை இரண்டாம் தர மக்களாகத்தான் பார்க்கின்றனர். வீட்டுக்குள் அடைபட்டு கிடந்த பெண்கள் வெளியே வந்து வியத்தகு சாதனைகள் பல புரிந்த போதும், அவர்களுக்கு எதிரான குற்ற செயல்கள் இன்னும் குறைந்தபாடில்லை. சமூகத்தின் கண்கள் என வர்ணிக்கப்படும் அவர்கள் உலகம் தோன்றிய காலம் முதலே தங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போராட்டத்தில்தான் வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர். நாகரிகமும், கலாசாரமும் எவ்வளவுதான் உலகை நவீனத்துவத்தை நோக்கி நகர்த்தினாலும் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் என்னவோ மனிதகுலம், இன்னும் பின்தங்கி இருப்பதாகவே கூற முடியும். இதில் வீட்டு அங்கத்தினர்களாலும் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவது வேதனை அளிப்பதாகவே இருக்கிறது. அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு, மன்னிப்பு, நட்பு போன்ற பண்பு நலன்களால் உருவாக்கப்பட்டது தான் வீடு. அதை விடுத்து வெறும் நான்கு சுவர்களால் மட்டும் கட்டப்பட்ட ஒரு மாளிகையை வீடு என்று கூற முடியாது. அது வெறும் உயிரற்ற கட்டிடமாகவே இருக்க முடியும். - வினி ஜெசிகா, விரிகோடு.

No comments:

Popular Posts