Sunday 16 December 2018

ஊர் கூடி துயர் துடைப்போம்...!

ஊர் கூடி துயர் துடைப்போம்...! பேராசிரியர் ராமதாஸ், முன்னாள் எம்.பி. புதுச்சேரி. இயற்கை சீற்றங்கள் இயற்கை நீதிக்கு மாறாக மனித இனத்தை தொடர்ந்து அழித்து வருவதையே சமீபத்திய கஜா புயல் நமக்கு உணர்த்துகிறது. சமுதாயம் ஒரு அடி முன்னேறினால், அதை இயற்கை சீற்றங்கள் இரண்டடி பின்னேறச் செய்கிறது. கஜா புயல் தமிழகத்தின் 12 மாவட்டங்களின் வளர்ச்சியை 10 ஆண்டுகளுக்கு பின்னோக்கித் தள்ளியுள்ளதோடு, ஏழை பணக்காரர் கிராமத்தார் நகரகத்தார், ஆண்-பெண் என்ற பாகுபாடின்றி எல்லோரையும் உள்ளத்தால் அழ வைத்துள்ளது. அப்பாவி மக்களுக்கு சொல்லமுடியாத இன்னலையும், வேதனையையும் அளித்திருக்கிறது. இப்புயலில் 63 பேர் உயிரிழந்து உள்ளனர். பல்லாயிரக்கணக்கான ஆடு, மாடுகள், பறவைகள் இறந்திருக்கின்றன. தோட்டக்கலைப் பயிர்கள் 88,102 ஹெக்டரிலும், 30 ஆயிரம் ஹெக்டரில் தென்னை மரங்களும், 32,706 ஹெக்டரில் நெற்பயிர்களும், 11,32,686 மரங்களும், 4044 மீன் படகுகளும் சேதமடைந்துள்ளன. மின்கம்பங்கள் ஒடிந்து, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் மீட்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் கல்விக்கூடங்கள் மற்றும் சாலை அகக்கட்டுமானம் பழுதடைந்துள்ளது. தமிழகம் அனுபவித்துள்ள பேரிடர்களில் ஒன்றாக கஜாவும் இடம் பெற்று விட்டது. அதனால் பெரும் துயருற்றுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் அளித்து அவர்களது துயர் துடைக்க தமிழக அரசு நிதியைச் செலவிட்ட போதும் மக்கள் இன்னும் தீராத துன்பத்தில் உழன்று வருகின்றனர். புயலின் கோரமும், அதன் போக்கும் அரசின் எதிர்பார்ப்பை பொய்ப்பித்ததால் அரசு அந்தசவாலை சமாளிக்க சிறிது காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. முதல்-அமைச்சரும், பிரதமரும், மத்திய அமைச்சர்களும் புயலால் பாதித்த மக்களை நேரில் சந்தித்திருந்தால் மக்கள் ஓரளவு சாந்தமடைந்திருப்பார்கள், நிலை ஓரளவு சீரடைந்திருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதுவே மக்களின் இன்னலைத் தீர்த்திருக்க முடியாது. சேதத்தை மதிப்பிட வந்த மத்திய குழு கூட எல்லா மக்களையும் சந்திக்கவில்லை. ஒரு பெரிய கோவில் தேரை பத்து பலசாலிகளால் மட்டுமே இழுத்துவிட முடியாது. ஊர் கூடினால்தான் அத்தேரை இழுக்க முடியும். அண்மையில் கேரளம் வெள்ளத்தால் சீரழிந்து உருக்குலைந்தபோதும், 2015 டிசம்பரில் பெருவெள்ளம் சென்னையை மூழ்கடித்தபோதும், தமிழகமே தட்டி எழுந்தது. அப்படிப்பட்ட உணர்வு இப்போது தேவை. யாரும் யாரையும் குற்றம் சுமத்தாமல், குறைசொல்லாமல் ஒரு கூட்டு மனப்பான்மையுடன் நிவாரணப் பணிகளை விரைந்து முடிப்பதிலேயே அனைவரின் கவனமும் இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் அமைதி பெறுவர். மத்திய அரசு, அரசு ஊழியர்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் உள்ள என்.எஸ்.எஸ்., என்.சி.சி மாணவர்கள், மருத்துவத்துறையைச் சார்ந்தவர்கள், நேரு யுவகேந்திராவின் தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள், திரை உலகினர், அரசின் சலுகைகளால் பயன் பெற்றவர்கள், சமுதாயத்தின் இதர பிரிவினர் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஆகியவை ஒன்று கூடி உதவிக்கரம் நீட்டி நம் மக்களைக் காப்பாற்றும் நேரம் இது. போர்க்கால அவசரத்தோடு காரியத்தில் இறங்கி மக்களின் இன்னலைப் போக்கும் நேரம். நாம் ஒன்று கூடி உதவி செய்ய வேண்டும் என்பது சக மனிதனுக்கு நாம் காட்டும் மனித நேயம் மட்டுமல்ல. ஒருவகையில் அது நமது கடமையாகவும் பார்க்கப்பட வேண்டும். பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் நம்மிடம் உள்ள இயற்கை வளங்களைக் கண்மூடித்தனமாக பயன்படுத்துகிறோம். இதனால், மனிதனுக்கும், இயற்கைக்கும் உள்ள சமன்பாடு பாதிக்கப்பட்டு, இயற்கைச் சீற்றங்கள் நிகழ்கின்றன. இவற்றால் சமுதாயம் பாதிக்கப்படும் போது அதன் தாக்கத்தை சமாளிக்க வேண்டியது சமுதாயத்தின் கடமையாகிறது. மத்திய அரசைப் பொறுத்தவரை கஜா புயலை தேசிய பேரிடராக அறிவித்து உடனடியாக இடைக்கால நிவாரணமாக தமிழக அரசுக்கு ரூ.5,000 கோடியை வழங்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு இனத்துக்கும் நிர்ணயிக்கப்பட்ட நிவாரண உதவியின் அளவை தற்போது நிலவும் விலைவாசிக்கு தகுந்தாற்போல் உயர்த்தித்தர வேண்டும். மத்திய மதிப்பீட்டு குழு அறிக்கை சமர்ப்பித்த 15 நாட்களுக்குள் முழு நிவாரண நிதியையும் மாநில அரசுக்கு அளிக்க வேண்டும். மத்திய பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, வேளாண்துறை ஆகியவற்றிலிருந்து பணியாளர் குழுவையும், நவீன இயந்திரங்களையும் புயல் பாதித்த இடங்களுக்கு மத்திய அரசு அனுப்பி சீரமைப்பு பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும். மாநில அரசு, நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்ட எல்லோரையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் எங்கெங்கு மக்களின் உண்மையான பிரச்சினைகளை வெளிக் கொணர்கின்றனவோ அங்கே உடனடியாக அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அனுப்பி நிவாரணத்தை வழங்க வேண்டும். பல பகுதிகளில் இருந்துவரும் நிவாரணப் பொருட்களையும், சேவைகளையும் ஒருங்கிணைத்து, மக்களிடம் திறம்பட சேர்ப்பதற்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருநிவாரண ஒருங்கிணைப்புக்கு குழு உருவாக்கப்படல் வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பணியாற்ற 5 ஆயிரம் இளைஞர்கள் கொண்ட தொண்டர்படை ஒன்றை மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பில் செயல்பட செய்ய வேண்டும். நிவாரணத் தொகையின் அளவை மறு ஆய்வு செய்து விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சமுதாயத்தின் இதர பிரிவினர்களின் பிரதிநிதிகளைக் கலந்து உயர்த்திக்கொடுக்க வேண்டும். மின் வசதியைச் சீர் செய்ய ஜேசிபி, கிரேன் போன்ற எந்திரங்களை அதிக எண்ணிக்கையில் அளிக்க வேண்டும். அரசியல் கட்சிகள் நிவாரண நிதியும், பொருட்களும் அனுப்புவதோடு, அரசுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்க வேண்டும். கட்சிக்காரர்களை மாவட்ட ஆட்சியரின் ஆலோசனைப்படி களப்பணி ஆற்றச் சொல்லலாம். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தற்போது மக்களுக்கு தேவைப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகைப் பொருட்கள், வேட்டி, லுங்கி, புடவை, நைட்டி, நாப்கின், கோரைப்பாய், போர்வை, தார்பாலின், மெழுகுவத்தி, கொசுவத்திச் சுருள், டார்ச், குடிநீர் பாட்டில், மருந்து, மாணவர்களுக்கான புத்தகங்கள் போன்ற நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியரின் ஒருங்கிணைப்பு குழு மூலம் மக்களுக்கு அளிப்பதோடு அங்குள்ள தொண்டர்படையிலும் சேர்ந்து பணியாற்ற வேண்டும். சமுதாயத்தின் இதர பிரிவினரும் பணமாகவோ, பொருளாகவோ, உழைப்பாகவோ தங்கள் பங்கினை செலுத்தலாம். இயல்பு நிலை திரும்பிய பிறகு எதிர்கால நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் சில முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். புயலின் போக்கு மற்றும் தாக்கத்தை துல்லியமாக கணக்கிடும் ஆராய்ச்சிகளில் விஞ்ஞான நிறுவனங்களை ஈடுபடுத்துவது, இயற்கை சீற்றம் நிகழ்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே சேதமதிப்பீட்டு குழுவை மாநிலத்துக்கு அனுப்பி சேதத்தைக் கணக்கிடுவது, அதனடிப்படையில் ஒருவாரத்திற்குள் இடைக்கால நிவாரணத்தை வழங்குதல், நிவாரணத்தின் நஷ்டஈட்டின் அளவை உயர்த்துதல், இயற்கை சீற்றம் நிகழ்ந்தவுடன் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்குதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விரிவுபடுத்துதல், மாநில அரசு வல்லுநர்கள் அடங்கிய குழுவால் இயற்கை சீற்ற சேதத்தை மதிப்பீடு செய்தல், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் தொண்டர்படை அமைத்தல், உள்ளாட்சி அமைப்புகளின் பேரிடர் மேலாண்மையை வலுப்படுத்துதல் போன்றவை எதிர்காலத்தில் மக்களின் இன்னலைப் போக்க உதவும்.

No comments:

Popular Posts