Sunday, 16 December 2018

சாதனை படைக்க ஊனம் தடையல்ல...!

சாதனை படைக்க ஊனம் தடையல்ல...! கி.கோபிநாத், பொதுச்செயலாளர், தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்கம் இ ன்று (டிசம்பர் 3-ந் தேதி) சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம். உலக மக்கள் தொகையில் 15 சதவீதம் பேரும், இந்திய மக்கள் தொகையில் 2.1 சதவீதம் பேரும், தமிழக மக்கள் தொகையில் 1.8 சதவீதம் பேரும், ஏதாவது ஒரு குறைபாட்டுடன், மாற்றுத்திறனாளிகள் பட்டியலில் உள்ளனர். ஊனமாக குழந்தைகள் பிறப்பதற்கு, நெருங்கிய உறவினருடன் திருமணம் செய்துகொள்வதும், கர்ப்பகாலத்தில் தாய் ஊட்டச்சத்தான உணவுகள் எடுத்துக்கொள்ளாததும் தான் முக்கிய காரணிகளாக கருதப்படுகிறது. எனினும், போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் மூலம் மத்திய, மாநில அரசுகளால் எடுக்கப்பட்ட துரித மற்றும் தொடர் நடவடிக்கைகளால், போலியோவினால் பாதிப்பு என்பது தற்போது நாடு முழுவதிலும் முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது. முன்பெல்லாம் கருணை அடிப்படையில் செயல்பட்டு வந்த மாற்றுத்திறனாளிகள் நலன், தற்போது உரிமை அடிப்படையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளிகளுக்கான சம வாய்ப்பு, உரிமை பாதுகாப்பு, முழு பங்கேற்பு சட்டம்-1995, மத்திய அரசால் கடந்த 1995-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்படி, கண்பார்வையற்ற, கை, கால் பாதிக்கப்பட்ட, காது கேளாத மாற்றுத்திறன் பிரிவினருக்கு தலா 1 சதவீதம் விதம், மொத்தம் 3 சதவீதம் இடஒதுக்கீடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மத்திய, மாநில அரசுகளால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. இச்சட்டம் இயற்றப்பட்டு 21 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைச்சட்டம்-2016, கடந்த டிசம்பர் 2016-ல் மத்திய அரசால் இயற்றப்பட்டுள்ளது. இப்புதிய சட்டத்தில், அறிவு சார்ந்த இயலாமை பிரிவினரையும் சேர்த்து, வேலை வாய்ப்பில் மூன்று சதவீதம் இடஒதுக்கீடு என இருந்ததை 4 சதவீதமாகவும், உயர்கல்வியில் 5 சதவீதம் இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய சட்டத்தில், மூளை முடக்கு வாதம், தசைப்பிடிப்பு நோய், உயரம் குறைபாடுடையோர், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டோர், கேட்பதற்கு கடின குறைபாடுடையோர், கற்றலில் குறைபாடு, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு, நாட்பட்ட நரம்பியல் குறைபாடுகளான விழி வெண்படல குறைபாடு, நடுக்குவாத குறைபாடு மற்றும் ரத்த கோளாறு சம்பந்தப்பட்ட குறைபாடுகளான ரத்தம் உறையாமை, ரத்த சோகை, ரத்த அழிவுச் சோகை உட்பட்ட, 21 வகையான குறைபாடுகள், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகத்தில் சாதாரண மனிதர்கள் படைக்கும் சாதனைகளைவிட, மாற்றுத்திறனாளிகள் படைக்கும் சாதனைகள் பல என்றே சொல்லலாம். சாதனை படைக்க ஊனம் ஒரு தடையல்ல என்பதற்கு சான்றாய் உலகில் பலர் திகழ்ந்துள்ளனர், திகழ்கின்றனர். கண்பார்வையற்ற, காதுகேளாத, வாய்பேச இயலாத பெண்மணி பேராசிரியர் ஹெலன் கெல்லர் பிறவியிலேயே ஊனமுற்றிருந்தாலும், ஊனமுற்றோர் நலனுக்காக அரும்பாடுபட்டவர். ஆஸ்கர் போன்ற உயரிய விருதுகளை பெற்றுள்ளார். கண்பார்வையற்ற கிரேக்க கவிஞர் ஹோமர், இலியம், ஒடிசி போன்ற காவியங்களைப்பாடி இறவாப் புகழ் பெற்றவர். மதுரையைச் சார்ந்த அமுதசாந்தி என்ற பெண் தனக்கு ஒரு கை இல்லாவிட்டாலும், மாற்றுத்திறனாளி பெண்கள் பலருக்கு தன்னம்பிக்கையை தரும் ஊன்று கோலாக விளங்குகிறார். சென்னையைச் சார்ந்த இருகால்களும் செயல் இழந்த 100 சதவீதம் உடல் ஊனம் கொண்ட வரதகுட்டி என்பவர் பி.காம்., சி.ஏ., படிப்பில் கோல்டு மெடல் பெற்று, சிறந்த ஆடிட்டராக திகழ்வதுடன், மாற்றுத்திறனாளிகள் சமூகத்திற்கு கடந்த 35 ஆண்டுகாலமாக மிகவும் சிறப்பான முறையில் சேவைப்பணி ஆற்றி வருகிறார். அதேபோல, சென்னையைச் சார்ந்த 100 சதவீதம் கண்பார்வை இழந்த, பெனோஸெபைன் என்ற 26 வயது சாதனைப் பெண்மணி, இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில், ஐ.ஏ.எஸ். ஆக முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றதுடன், இந்திய வெளிநாட்டு சேவை அதிகாரியாக டெல்லியில் பணியாற்றி வருகிறார். தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை, கண்பார்வையற்றவர்களுக்கு உள்ளூர் பேருந்துகளில் இலவச பயணச் சலுகை, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கும், அவருடன் உதவிக்காக உடன் செல்லும் உதவியாளருக்கும், வெளியூர் பேருந்துகளில், தமிழகம் முழுவதும் பயணம் செய்ய நான்கில் ஒரு பங்கு கட்டணச் சலுகை, திருமண நிதியுதவி, இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட இலவச பெட்ரோல் ஸ்கூட்டர், கல்வி உதவித்தொகை, பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக்கடன், சுய தொழில் செய்ய மானியம், உதவி உபகரணங்கள் வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு, வேலைவாய்ப்பில், மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்படும் முன்னுரிமை போன்று மாற்றுத்திறனாளிகளின் வாரிசுகளுக்கும் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். அதேபோல, கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினருக்கு, வேலைவாய்ப்பில் தமிழக அரசால் வழங்கப்படும் முன்னுரிமை போன்று, மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும், மாற்றுத்திறன் அல்லாத சாதாரண நபருக்கும், வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கிட தமிழக அரசு முன்வரவேண்டும். இதன்மூலம், மாற்றுத்திறனாளிகள் தன்னிறைவு பெறவும், அவர்களின் குடும்ப வாழ்வாதாரம் மேம்படவும் வழிபிறக்கும். ஊனமுற்றவர்களை குறைபாடுகள் உடையவர்களாய் கருதும் மனப்போக்கை இச்சமூகம் மாற்றிக் கொள்ள வேண்டும். பெற்றோர்களும் மனம் நொந்து போகாமல், தம் குழந்தைகளை ஊக்கப்படுத்தி, உரிய கல்விதரும் வழிவகைகளை ஆய்ந்து, அவர்களை நல்லமுறையில் வாழவைக்க முன்வர வேண்டும். உடற்குறைபாடு, புலன்குறைபாடு, அறிவுத்திறன், உளவியல், பிற நோய்கள் தொடர்பான குறைபாடு என்பவை ஊனமுற்றோர் நம்பிக்கையை எக்காலத்திலும் கைவிடக் கூடாது. உரிய முறையில் அரசு அளிக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக்கொண்டு, தாழ்வான எண்ணம், ஊக்கமற்ற சிந்தனை, சிறுமையுணர்வு போன்றவைகள் மனத்தைப் பாதிக்கவிடாமல், எதிர்காலத்தை மாற்றுத்திறனாளிகள் ஒளிமயமாக்கி வாழ வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உலகத்தை மாற்றும் திறன் படைத்தவர்கள்.

No comments:

Popular Posts