Monday 17 December 2018

ஓய்வூதியம்: அரசின் கருணையா? ஊழியரின் உரிமையா?

ஓய்வூதியம்: அரசின் கருணையா? ஊழியரின் உரிமையா? கா.நந்தகோபால், தாசில்தார் (ஓய்வு), சின்னமனூர் இ ன்று (டிசம்பர் 17-ந் தேதி) ஓய்வூதியர் தினம். ‘அரைக்காசு உத்தியோகம் என்றாலும், அரண்மனை உத்தியோகம்’ என்பது பழமொழி. இதன் அர்த்தம் அரசாங்க பணி என்பது, பணி பாதுகாப்பு மற்றும் நிரந்தர வருமானம் என்பதே ஆகும். அரசாங்கத்தில் வேலைபார்க்கும் போது ஊதியம் வழங்குவது சரிதான். ஓய்வுபெற்று வீட்டில் சும்மா இருக்கும் போதும் ஓய்வூதியம் என்ற பெயரில் சம்பளம் வழங்குவது என்ன நியாயம்? என்ற கேள்வி எழத்தான் செய்யும். அப்படி என்றால் ஓய்வூதியம் என்பது அரசாங்கம் வழங்கும் கருணைத்தொகையா? அல்லது அரசு ஊழியரின் உரிமையா? என்பது குறித்து சற்று விரிவாக பார்ப்போம். நமது தேசத்தை ஆங்கிலேயர்கள் பிடித்து அரசாள்வதற்கு முன்பு இங்கு மன்னராட்சியே நிலவியது. அப்போது அரண்மனையிலும், அரசாங்க நிர்வாகத்திலும் வேலை செய்தவர்களுக்கு மாதாந்திர அல்லது வருடாந்திர ஊதியமாக தானியம் அல்லது பணமாக ஊதியம் வழங்கும் நடைமுறை இருந்து வந்துள்ளது. பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஓய்வூதியமோ அல்லது இறந்த ஊழியரின் குடும்பத்துக்கு ஓய்வூதியமோ வழங்கப்பட்டதாக தகவல்கள் எதுவும் இல்லை. மன்னருக்காகவும், நாட்டுக்காகவும் உயிர் தியாகம் செய்த ஊழியர்களின் குடும்பத்துக்கு வீடுகள், நிலம் என்று மானியம் வழங்கப்பட்டதாக மட்டும் சில வரலாற்று பதிவுகள் உண்டு. அரசாங்க ஊழியர்களுக்கு ஓய்வூதியம் என்பது இந்திய தேசத்தில், பிரிட்டிஷ் ஆட்சியின் போது 1857-க்கு பிறகே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிகிறோம். 1871-ம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் இந்திய ஓய்வூதிய சட்டம் 1871 என்ற ஒரு சட்டத்தை இயற்றி ஓய்வூதியம் வழங்குவது சட்டப்பூர்வமாக்கப்பட்டது. அந்த சட்டத்தில் “ஓய்வூதியம் என்பது மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கும் கருணைத்தொகை. அது அரசு ஊழியரின் அடிப்படை உரிமை இல்லை” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் இதே நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்திய அரசுப்பணியில், மத்திய பாதுகாப்புத்துறையில் சட்ட ஆலோசகராக பணியாற்றிய டி.எஸ்.நகரா என்பவர் 1972-ல் தமது பணியில் இருந்து ஓய்வுபெற்றார். அவருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியத்தில் சில முரண்பாடுகளும், சிக்கல்களும் இருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடுத்தார். பல ஆண்டு காலம் அந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு, 1982-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி அப்போதைய தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில், “ஓய்வூதியம் என்பது அரசின் கருணைத்தொகையோ, நன்கொடையோ அல்ல, ஒரு அரசு ஊழியர் பல ஆண்டு காலம் அரசாங்கத்துக்கும், பொதுமக்களுக்கும் பணியாற்றியமைக்காக அவர் பெறும் உரிமை தொகையாகும். அரசு ஊழியர் ஓய்வுபெற்ற பின்னர் அவர் அமைதியாகவும், கவுரவமாகவும் வாழ்வதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்ததுடன், டி.எஸ்.நகராவுக்கு தகுதியான ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தான் ஒவ்வொரு முறையும் ஊதியக்குழு அமைத்து, பணியில் இருப்பவர்களின் ஊதியம் திருத்தி அமைக்கப்படும்போதெல்லாம், ஓய்வூதியமும் திருத்தி அமைக்கப்படுவதுடன், பணியில் இருப்பவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும் போதெல்லாம், ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுகிறது. இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட டிசம்பர் 17-ந் தேதியை ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியர் தினமாக அரசு ஊழியர் சங்கங்கள் கொண்டாடி வருகின்றன. இதில் உள்ள இயற்கை நீதி என்னவென்றால், தனது இளமைக்காலம் தொடங்கி, 58 அல்லது 60 வயது வரை அரசாங்கத்துக்கும், பொதுமக்களுக்கும் சேவை உணர்வோடு பணியாற்றிய அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகு தனது முதுமை காலத்தில் நிர்க்கதியாக விடப்படாமல் அமைதியாகவும், கண்ணியமாகவும் வாழ உதவி செய்வது ஓய்வூதியம் தான். இந்த நிலையில்தான் புதிய ஓய்வூதியத் திட்டம் அல்லது பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் எனும் திட்டத்தை அகில இந்திய அளவில் தமிழ்நாட்டில் முதன் முதலாக 1-4-2003 முதல் அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களிடம் அமல்படுத்தப்பட்டது. இதே திட்டத்தை மத்திய அரசு 1-1-2004 முதல் அமல்படுத்தி 1-1-2004-க்கு முன்பு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது என அறிவித்தது. இந்த திட்டத்தின்படி அரசு ஊழியர்களிடம் இருந்து பிடிக்கப்படும் 10 சதவீத தொகைக்கு இணையான தொகையை அரசு தன் பங்காகச் செலுத்தும் என்றும் இந்த நிதியை மேலாண்மை செய்வதற்கு ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தை ஏற்படுத்தி நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இந்த நிதியை முதலீடு செய்யும் பொறுப்பை அரசு நிதி நிறுவனங்கள் தனியார் முதலீட்டு நிதி நிறுவனங்கள், பெரு வணிக நிறுவனங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை நிதிமேலாளர்களை அரசு நியமித்துள்ளது. முந்தைய ஓய்வூதிய திட்டப்பலன்களை விட புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியம் குறைவாகவே கிடைக்கும் என்பதாலும், தனியார் நிறுவனங்களிடம் ஓய்வூதிய நிதிமேலாண்மையை ஒப்படைப்பதன் மூலம், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் பணம் அரசு பங்களிப்பு பணம் ஆகியவற்றுக்கு சரியான உத்தரவாதம் இல்லை என்பதாலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஒன்றிணைந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு இதற்காக வல்லுநர் குழு ஒன்று அமைத்து அறிக்கை பெறப்பட்டுள்ளது. தற்போது இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் வயதான பல லட்சம் ஓய்வூதியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசும், நீதிமன்றங்களும் இதில் நியாயமான தீர்வுகாண வேண்டும் என்பதே, அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் எதிர்பார்ப்பாகும்.

No comments:

Popular Posts