எப்படி வேண்டுமென்றாலும் வாழலாம். வாழ்க்கை ஒரு பரிசு என்றால் பெற்றுக்கொள்வோம். சவால் என்றால் அதை ஏற்றுக்கொள்வோம். புதிர் என்றால் கண்டுபிடிப்போம். கேள்வி என்றால் விடை காண்போம். விளையாட்டு என்றால் விளையாடிப் பார்ப்போம். போராட்டம் என்றால் நடத்திப் பார்ப்போம். வாய்ப்பு என்றால் பயன்படுத்துவோம். அது ஒரு போர் என்றால் தீரத்தோடு களமாடிப் பார்ப்போம்.
எப்படி எடுத்துக்கொண்டாலும், இங்கே எதையும் போராடித்தான் பெற வேண்டும். இந்தப் போரில் நாம் விரும்புவதை வேறு சிலரும் விரும்பக்கூடும். எனவே போட்டி வந்துவிடுகிறது. நண்பன்கூட, போட்டி என்று வருகிறபோது எதிரி ஆகிவிடுகிறான். செல்வமும் பதவியும் வந்ததும் ஏராளமான எதிரிகளும் தோன்றிவிடுகிறார்கள்.
எதிர்பாராத நிகழ்வுகள் எதிரிகளால் நேரும். அப்போதெல்லாம் ஒரு போர்வீரனுக்குச் சற்றும் பொருந்தாத ஒரு நடத்தை என்ன தெரியுமா? போர்மேகக் கூட்டங்கள் சூழும்போது, போர்க்களத்தை விட்டு ஓடிவிடுவதுதான். அப்படி ஓடுபவர்களுக்கு போர்க்களத்தில் இடமில்லை. அங்கேயே நிலைத்து நின்று போர் புரிபவனுக்கு மட்டும்தான் வெற்றி, தோல்வி. தன்னையும், அதேவேளையில் எதிரியையும் நன்கு அறிந்தவனுக்கு எல்லா சண்டைகளிலும் வெற்றிதான் என்கிறார், சன் சூ என்ற சீனப் போர் வரலாற்று ஆசிரியர்.
நீங்கள் வளரும்போது எதிரிகள் உங்களைப் பற்றி பொய்ப் பிரசாரம் செய்வார்கள். உங்களிடமே நட்புடன் பேசி தகவல்களைச் சேகரித்து அதை உங்களுக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள். உங்களுக்கு எதிராகக் கூட்டணி அமைத்து உங்களை ஒழித்துக்கட்ட சதித்திட்டம் தீட்டுவார்கள். இவை அனைத்தும் உங்களுக்குத் தெரியாமலே நடந்து முடியும். இந்தச் சதித்திட்டத்தை கண்ணால் பார்க்கவும், காதால் கேட்கவும், மூக்கால் நுகரவும், கை களால் உணரவும் ஆற்றல்மிக்க போர்வீரனாக நீங்கள் விளங்க வேண்டும். நயவஞ்சகர்களைப் பார்த்துப் புன்னகை புரியும் ஆற்றலை வளர்க்க வேண்டும்.
‘முடியாது’ என்ற எண்ணத்தை மாற்றிக் கொண்டால் இந்தச் சண்டை மைதானம் கூட மகிழ்ச்சியான விளையாட்டு மைதானமாக மாறிவிடும்.
முன்னேறும் நம்மை எதிரிகள் பின்னோக்கித் தள்ளிவிட்டால், தொடர்ந்து முன்னேற முயற்சி செய்ய வேண்டும். அம்பு பின்னோக்கித் தள்ளப்படும்போதுதான் அதிக விசையாற்றல் பெறுகிறது என்பதை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.
உண்மையான வீரன் எதிரியைப் பார்த்து மகிழ்வான். அவன் எதிரிகள் தோற்றாலும் அவர்களுக்காக இரங்குவான். ஒருவேளை வாழ்க்கைப் போராட்டத்தில் எதிரிகளின் கை ஓங்கி நிற்கும் வேளையிலும் உடைந்துவிடாமல் நிமிர்ந்து நிற்பவனே உண்மையான போர்வீரன்.
உங்களை அழிக்க பொய் என்ற ஆயுதத்தை எதிரிகள் பயன்படுத்தக்கூடும். வீண்பழி விழும் நேரத்தில் கலவரமடையாமல் இருப்பது தனிப்பெரும் ஆற்றல்.
மிகவும் இருட்டான நேரத்தில்தான் நாம் உற்றுப் பார்க்க வேண்டும். இந்த மாதிரி சூழ்நிலையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு சூழ்நிலையையும் தைரியத்தோடு எதிர்கொள்ள வேண்டும். எதிரிகள் உருவாகிவிட்டார்களே என்று கவலைப்படக் கூடாது. அவர்கள் உருவானது நல்லதுதான். அந்த அளவுக்கு ஏதோ ஒன்றை உருப்படியாகச் செய்துள்ளோம் என்று உணர்ந்து மகிழ வேண்டும்.
மலிவான எதிரி உங்கள் பணத்தை அபகரிப்பான். ஆனால் மோசமான எதிரிக்குத் தேவை, உங்கள் மனது. உங்கள் மனநிலை, உங்களது குணம், உங்களது நம்பிக்கை, மனநிம்மதி ஆகியவற்றைக் குலைப்பதுதான் அவன் நோக்கமாக இருக்கும். எனவே சூழ்நிலை ஞானம் மிகவும் பெரியது.
நமக்கு மேலும், கீழும், முன்னும் பின்னும், நம்மைச் சுற்றியும் எதிரிகள் இருக்கிறார்கள் என்றால் ஒரே நேரத்தில் எல்லோரையும் எதிர்த்துப் போர் புரிவது ஆபத்தானது. அது போன்ற நேரங்களில் காத்திருக்கலாம். பணியிடத்தில் உங்களுக்கு மேலே இருப்பவருடன் சுமுக நிலை இல்லை என்றால் எச்சரிக்கையாய் இருங்கள். அவருக்குப் பிடிக்காத செயல்களைச் செய்யாதீர்கள், அவரின் புகழ் குலையும்படி நடந்துகொள்ளாதீர்கள்.
போரில் வென்றுவிடலாம் என்பதற்கான காரணங்கள் இருந்தாலும், அந்தப் போரில் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டுமே போருக்குப் புறப்பட வேண்டும். சண்டை மைதானத்தில் தன்னம்பிக்கைதான் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும்.
உங்கள் மீது குறைகள் கூறும், அவதூறு பேசும், வெறுப்புக் கொள்ளும் எதிரிகளை அப்படியே விட்டுவிடுங்கள். அந்தக் கீழ்த்தரமான வேலையில் அவர்களே அவர்களை அழித்துக்கொள்வார்கள். அதேவேளையில், உங்கள் பயணத்தைத் தொடருங்கள். உங்களது வெற்றியால் எதிரி வீழட்டும். உங்கள் அனைத்து வெற்றிகளையும் அவர்கள் பார்த்துக் கலக்கம் அடைய நெடுநாள் வாழட்டும் என்று அவர்களை வாழ்த்துங்கள்.
பொறாமை என்பது எதிரிகளின் இயற்கையான குணமாக இருக்கும். இது மோசமான குணமும் கூட. உங்களுக்கு ஒருவர் மீது பொறாமை ஏற்பட்டால் நீங்களும் அவரது எதிரி ஆகிவிடுவீர்கள். மனதில் பொறாமையை வளர்ப்பவன் நல்லவன் இல்லை. அவன் பேராபத்தைச் சந்திக்க நேரிடும்.
எட்டி உதைக்கும் எதிரிகளைப் பற்றிக் கவலையில்லை. ஆனால் கட்டி அணைக்கும் போலி நண்பர்களிடம் உஷாராக இருங்கள். போலி நண்பன் பத்து எதிரிகளுக்குச் சமமானவன். இவனுக்கு உங்களின் அந்தரங்கம் தெரியும். எங்கு அடித்தால் உங்களுக்கு எப்படி வலிக்கும் என்பதும் தெரியும். சரியான நேரத்தில் உங்களுக்கு எதிரியாக மாறி, ஒரு வில்லனாக சிரிப்பான் அவன்.
எதிரிகளின் கடுஞ்சொற்களைவிட நண்பர்களின் மவுனம்தான் என்னை வாட்டுகிறது என்றார், மார்ட்டின் லூதர் கிங். உங்கள் அந்தரங்க தனிப்பட்ட விஷயங்களை, நெருங்கிப் பழகுகிறார்கள் என்று யாருடனும் பகிராதீர்கள். அது உங்கள் வீட்டுச் சாவியை திருடனிடம் தருவதைப் போன்றது. உங்களது மின்னஞ்சல் கடவுச்சொல் போன்றவற்றை யாரிடமும் கூறாதீர்கள். நண்பர்களை மட்டும் கவனமாகத் தேர்வு செய்யுங்கள். எதிரிகள் தாங்களாகவே உருவாகிவிடுவார்கள்.
எதிரிகளை வெறுக்கத் தேவையில்லை. அவர்களை பொறுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் ஒருவேளை நமது விரும்பத்தகாத நடத்தையை வெளிப்படுத்துபவர்களாக இருக்கலாம். நம்மை நாமே திருத்திக்கொள்ள அது வாய்ப்பாக அமையும்.
எனது எதிரிகளை நண்பர்களாக்கி அதன் மூலம் அவர்களை அழித்துவிடுவேன் என்றார் ஆபிரகாம் லிங்கன். நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பது போர்வீரனுக்கும் பொருந்தும்.
இளமைக் காலத்தில், பெற்றோர் கண்டிக்கும்போது ஓடிவிடலாம் என்று நாம் நினைக்கும் இடம் நாம் வாழும் வீடுதான். ஆனால் பிரச்சினைகள் எழும்போதும், வாழ்க்கை கலவர பூமியாகும்போதும் நாம் திரும்பி வர நினைக்கும் இடமும் வீடுதான்.
வீடுதான் உங்கள் பாதுகாப்புக் கோட்டை. அதற்குள் எதிரிகள் எளிதில் நுழைய முடியாது. இளையோராகிய நீங்கள், தந்தை, தாய், சகோதரர், கணவன், மனைவி என்று உங்கள் வீட்டுக் கோட்டையை உறுதியாக கட்டி எழுப்பிவிடுங்கள். அங்கு வந்து எதிரிகள் உங்களைத் தாக்குவது சாத்தியமாகாது.
பொய் பேசுதல், வெட்டிப்பேச்சு, ஒத்திப்போடுதல், சோம்பேறித் தனம், நேர்மையின்மை, கோபப் படுதல், வெறுப்பு, பொறாமை போன்ற பண்புகளால் நாமே நமக்கு மோசமான ஆபத்தை ஏற்படுத்திவிடுகிறோம். எனவே, வெளியே காணும் எதிரிகளை ஒழிப்பதற்கு முன்னர் நமக்குள்ளேயே இருக்கும் எதிரிகளோடு போர் புரிவது முக்கியமாக இருக்கிறது. உள்ளே உள்ள எதிரிகளை வெளியேற்றிய பிறகு, வெளியே இருக்கும் எதிரிகளை எதிர்கொள்வது கடினமாக இருக்காது.
சில வேளைகளில் நமது சிந்தனையால் நம் போர் முயற்சி முடங்கிப் போகிறது. இன்றைய துயரம் நிரந்தரமானது என்று எண்ணிவிட்டால் அது மேலும் கடுமையாகிறது. நம் எல்லை இதுதான் என்று நினைத்துவிட்டால் அதுவே எல்லையாகி விடுகிறது. அதற்கு மேல் போக முடிவதில்லை. இதிலிருந்து நம்மால் மீள முடியாது என்று கருதிவிட்டால் மீள முடியாமலே போய்விடுகிறது. நம்மைக் கட்டிப்போடும் நமது எண்ணங் களிடம் இருந்து முதலில் நாம் விடுபட வேண்டும். இந்த எதிர்மறையான எண்ணங்கள் கூட நம் எதிரிகள்தான்.
Saturday, 29 December 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment