Saturday 8 September 2018

‘கிரெடிட் கார்டு லிமிட்’... சில விவரங்கள்

கிரெடிட் கார்டு எனப்படும் கடன் அட்டை உள்ளவர்களிடமும் இல்லாதவர்களிடமும் உள்ள பொதுவான கருத்து, அது செலவழிக்கத் தூண்டக்கூடியது என்பது. அது ஒருவகையில் உண்மைதான். பலருக்கும் தங்கள் கிரெடிட் கார்டின் அதிகபட்ச கடன் வரம்பு வரை செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டிய பிரச்சினை ஏற்படுகிறது. சரி, கிரெடிட் கார்டு கடன் வரம்பு என்றால் என்ன? ஒவ்வொரு மாதமும் கிரெடிட் கார்டை பயன்படுத்தி கூடுதல் வட்டிக் கட்டணங்கள் ஏதும் இல்லாமல், வங்கி எவ்வளவு பணத்தை எடுக்க அனுமதிக்கிறது என்பதே அந்த கார்டுக்கான கடன் வரம்பு. இந்த அதிகபட்ச வரம்பு, உங்களின் சம்பளம், கடன் வரலாறு, திருப்பிச் செலுத்தும் திறன், பணியின் வகை, இடம் மற்றும் மற்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படும். பொதுவாக அதிகச் சம்பளம் பெற்றால் அதிகக் கடன் வரம்பும், குறைந்த சம்பளம் பெற்றால் குறைந்த கடன் வரம்பும் இருக்கும். உங்கள் கிரெடிட் கார்டின் கடன் வரம்பு ரூ. 2 லட்சமாக இருந்தால், அதைக் கண்டிப்பாகக் குறைக்க வேண்டும் என விரும்பி, ரூ. ஒரு லட்சமாகக் குறைப்பதன் மூலம் குறைவாகச் செலவழிக்கலாம், அந்த வரம்பைத் தாண்டி செலவுகள் போகாது என நீங்கள் நினைக்கலாம். ஆனால் அது சரியல்ல. அதற்கான காரணங்களை இங்கே பார்க்கலாம்... முதலாவதாக, அதிகக் கடன் வரம்பு என்பது நல்ல கடன் மதிப்பெண்ணுக்கான குறியீடு. இந்தக் கடன் மதிப்பெண் என்பது முக்கியமாக, உங்களின் செலவழிக்கும் திறன் மற்றும் அதற்காகக் கடன் பெற்ற பணத்தை வட்டியில்லா காலத்துக்குள் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. மேலும் இது நல்ல நிதி நிர்வாகத்துக்கான குறியீடும் ஆகும். உங்களின் கடன் வரம்பை ரூ. 2 லட்சத்தில் இருந்து ரூ. ஒரு லட்சமாகக் குறைத்த பின்னர், அதை முழுவதுமாகப் பயன்படுத்திவிட்டீர்கள் என வைத்துக்கொள்வோம். அதையும் உங்களின் சம்பளத்தைக் கொண்டு செலுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே உங்களின் செலவழிக்கும் பழக்கத்தை மாற்ற வேண்டும், விலையுயர்ந்த பொருட்களுக்காக செலவு செய்வதைக் குறைக்க வேண்டும். ரூ. 2 லட்சம் வரம்புள்ள கிரெடிட் கார்டில் ரூ. 50 ஆயிரம் செலவு செய்தால், அது மொத்த வரம்பில் 25 சதவீதமாக இருக்கும். அதுவே ரூ. ஒரு லட்சம் வரம்புள்ள அட்டை எனில் செலவு 50 சதவீதமாக இருக்கும். கடன் வரம்பில் எப்போதும் 30 சதவீதம் வரை செலவழிப்பது என்பது ஆரோக்கியமானது என்பது வல்லுநர் கருத்து. அதிக வரம்புள்ள அட்டையில், 30 சதவீதம் என்பதே நல்ல தொகையாக இருக்கும் என்பதால் பெரிய செலவுகளை இந்த வரம்புக்கு உட்பட்டுச் செய்யலாம். கிரெடிட் கார்டின் முக்கியப் பயன்பாடே, அவசரகாலச் செலவுகளில் உதவுவதும், விலையுயர்ந்த பொருட்களைத் தவணைமுறையில் வாங்க உதவுவதும்தான். அதிகபட்ச கடன் வரம்புடன், உங்களுக்குத் தேவைப்படும் புதிதாக வெளிவந்த ஸ்மார்ட்போனை வாங்கலாம் அல்லது திடீரெனப் பழுதான துணி துவைக்கும் எந்திரத்தின் பாகங்களை வாங்கமுடியும். இம்முறையில் அவசரகால மற்றும் திட்டமிட்ட செலவுகளின்போது பணத்தை நிர்வாகம் செய்யலாம். கைக்கு வராத சம்பளத்தை மனதில் வைத்து திரும்பி செலுத்திக்கொள்ளலாம் என்ற தைரியத்தில் தேவையில்லாத பொருட்களை வாங்கி, அதிக கிரெடிட் கார்டு தொகையை திரும்பச் செலுத்துதல் என்னும் முடிவில்லா சுழற்சியில் சிக்கிக்கொள்ளாதீர்கள். அதற்குப் பதிலாக, திட்டமிட்ட பொருட்களை வாங்குவதற்குப் பயன்படுத்துங்கள். பொதுவாக, உங்களின் நோக்கம் கிரெடிட் கார்டு வரம்பை உயர்த்துவதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர, குறைப்பதாக அல்ல. அதிக கடன் வரம்பு, எதிர்காலத்தில் உங்களின் பெரிய செலவுகளைச் சமாளிக்க உதவியாக இருக்கும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts