விடியலை எதிர்நோக்கி விவசாயிகள்!
எஸ்.கே.ஜி.கிரிதரன், தலைவர், விவசாயிகள் சட்ட இயக்கம், நாகப்பட்டினம்
கடந்த 2016-17-ம் ஆண்டு பிரதமர் பயிர் காப்பீடு திட்டம் வருவாய் கிராம வாரியாக அறிமுகப்படுத்தப்பட்டது. விவசாயத்தில் நஷ்டம் ஏற்படும்போது, இந்த திட்டத்தால் முழுமையான இழப்பீடு கிடைக்கும் என்று விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
பிரதமரின் காப்பீட்டு திட்டப்படி, தமிழகம் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது. இந்த மூன்று மண்டல விவசாயிகளின் சாகுபடி நிலங்களுக்கும் காப்பீடு செய்து கொடுக்கும் பணி 3 தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. அதே வேளையில், அந்தந்த மாவட்டங்களில் பயிரிட்ட பயிருக்கான பிரிமியர் தொகையை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், வங்கிகள் மூலமாகவும் விவசாயிகள் செலுத்தி வந்தனர். விவசாயிகள் பயிர் காப்பீடு செய்த கணக்கை வைத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களுடைய பங்கினை அந்தந்த இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு செலுத்திவிட்டார்கள்.
இதற்கிடையே, அந்த திட்டம் அறிமுகமான அதே ஆண்டு மிகப்பெரிய வறட்சி ஏற்பட்டு மாநிலம் முழுவதும் விவசாயம் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்தனர். இருந்தாலும், நல்லவேளையாக பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ததால், ஓரளவு நிலைமையை சரிகட்டிவிட முடியும் என்று நம்பினர்.
ஆனால் பயிர் பரிசோதனை அறுவடை முடிவின் அடிப்படையில் இழப்பீடு வழங்க வேண்டிய நிறுவனங்கள் இதுவரை வழங்காமல், கால தாமதம் செய்து வருகிறார்கள்.
மத்திய வேளாண் அமைச்சருக்கு விவசாயிகள் மனு அளித்ததன்பேரில், மத்திய வேளாண் அமைச்சகம் பயிர் பரிசோதனை ஆய்வு அறிக்கை கிடைத்த 3 மாதத்துக்குள் இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்றும், தவறினால் 12 சதவீதம் வட்டியுடன் விவசாயிகளுக்கு காப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், இதுவரை முழுமையான இழப்பீட்டுத் தொகையை பல மாவட்டங்களுக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கவில்லை. விவசாயிகள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களை கேட்டாலும் எந்த விவரமும் தெரிவிப்பதில்லை. எந்த சட்டத்தையும் பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் மதிப்பதில்லை.
உதாரணத்துக்கு, நாகை மாவட்டத்தில் அந்தந்த வருவாய் கிராமத்துக்கு புள்ளியல் துறையின் பரிந்துரை படி நஷ்டஈடு வழங்காமல் விவசாயிகளை ஏமாற்றும் விதத்தில் இன்சூரன்ஸ் நிறுவனம் செயல்படுகின்றது. புள்ளியல் துறையின் பரிந்துரைபடி 100 சதவீதம் இழப்பீடு கிடைக்கவேண்டிய கிராமத்துக்கு 30 முதல் 50 சதவீதம் இழப்பீடுதான் கொடுக்கிறார்கள்.
நேர்மையான விவசாயிகளுக்கு புள்ளியல் துறை பரிந்துரை செய்தபடி முழுமையான இழப்பீடு கிடைக்க வேண்டும். பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் சொல்கின்ற காரணங்கள் விவசாயிகளுக்கு ஏற்புடையதாக இல்லை. பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் போலியான விவசாயிகள் பட்டியலை தயாரித்து முறைகேடு செய்வதாக விவசாயிகள் கருதுகிறார்கள். பிரிமியம் தொகையை செலுத்துவதில் விவசாயிகள் முறைகேடு செய்திருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஏன் தயக்கம் காட்டுகிறார்கள்?
பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் தவறு செய்தது யாராக இருந்தாலும் அவர்கள்மீது நடவடிக்கை எடுத்து, முழுமையான இழப்பீட்டை 12 சதவீத வட்டியுடன் உடனடியாக வழங்க வேண்டும்.
தற்போது, பயிர் காப்பீட்டு நிறுவனங்களும் சரியான இழப்பீடு வழங்கவில்லை. அரசு அறிவித்த மானியங்களும் விவசாயிகளுக்கு சென்று அடையவில்லை. மிகப்பெரிய சிரமமான சூழ்நிலையில் இந்த ஆண்டு சம்பா சாகுபடியை தொடங்கி இருக்கிறோம்.
காவிரியில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது, டெல்டா மாவட்டங்கள் முழுவதும் தண்ணீர் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் கிடைத்த தண்ணீர் கடலில் வீணாக்கப்பட்டதே தவிர, விளைநிலங்களுக்கு சென்று சேரவில்லை. 20 நாட்களுக்கு மேல் சம்பா ஆகியும், சம்பா பயிர்களுக்கு தண்ணீர் வைத்து களையெடுப்பு மற்றும் உரமிடுதல் வேலைகள் செய்யவில்லை.
தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளாக தூர்வாரும் பணியில் மிகப்பெரிய முறைகேடு செய்ததினால் தண்ணீர் கிராமங்களுக்கு சென்றடையவில்லை.
நபார்டு வங்கியும், தமிழகஅரசும் ஆண்டுக்கு 300 முதல் 400 கோடி ரூபாய் ஒதுக்கியும், தூர்வாரும் பணி நடைபெறவில்லை. ஒதுக்கீடு செய்த பணம் முறைகேடு செய்யப்பட்டு இருக்கிறது. டெல்டா பாசன பகுதிகள் முழுமையும் ஆறு, வாய்க்கால் தூர்வாராததால் தண்ணீர் கிடைக்கவில்லை.
கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடி இல்லாமலும் சரியான முறையில் சம்பா சாகுபடி நடைபெறாததாலும் விவசாயிகளும் விவசாய தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய-மாநில அரசுகள், டெல்டா பகுதி மக்களை விவசாயம் செய்யவிடாமல் நெருக்கடி கொடுத்து, பூமிக்கு அடியில் புதைந்து கிடைக்கின்ற மீத்தேன், ஈத்தேன், பெட்ரோலிய பொருட்களை கார்ப்பரேட் நிறுவனங்களை வைத்து எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கிறது.
விவசாயிகளுக்கு மாநில அரசால் அறிவிக்கப்படும் மானியங்களும் கிடைப்பதில்லை. விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலையும் கிடைப்பதில்லை. பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் டெல்டா பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள். தங்களின் விடிவு காலத்தை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளுக்கு எந்தவிதமான இலவசங்களும் தேவையில்லை, அரசு நேர்மையாக செயல்பட்டால் போதுமானது. விளைபொருட்களுக்கு நியாயமான விலை வேண்டும். பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் ஒளிவு மறைவு அற்ற வெளிப்படையான நிர்வாகத்தினை சட்டத்தினை மதித்து செயல்பட வேண்டும். மத்திய அரசு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.
Sunday, 9 September 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment