சுற்றுலா தரும் சுகம் !
எழுத்தாளர் கோ.ஒளிவண்ணன்
நாளை (செப்டம்பர் 27-ந்தேதி) உலகச் சுற்றுலா தினம்.
ஐக்கிய நாட்டு கூட்டமைப்பின் உலகச் சுற்றுலா அமைப்பு, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27-ந் தேதியை உலகச் சுற்றுலா தினமாக கொண்டாடி வருகிறது. இந்நாளில், சுற்றுலாக் குறித்த விழிப்புணர்வு மற்றும் அது எவ்வாறு சமூகம், பண்பாடு, அரசியல் மற்றும் பொருளாதார தளங்களில் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை விளக்கவும் பயன்படுத்திக் கொள்கிறது.
சுற்றுலாத் துறை என்பது ஒரு நாட்டுக்கு பணத்தை அள்ளித்தரும் துறையாகும். பல லட்சம் கோடி ரூபாய் புழங்கும் துறை. இதில், இந்தியாவின் பங்களிப்பு கணிசமானது (சுமார் 14 லட்சம் கோடி ரூபாய்). நாம் உலக அளவில் ஏழாவது இடத்தில் உள்ளோம். இந்தியாவில் நாட்டின் மொத்த வேலை வாய்ப்பில் 8 சதவீதம் இத்துறை மூலம் உருவாக்கப்படுகிறது.
சுற்றுலாத் துறையில் தமிழ்நாடு தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மாநிலங்களுக்குள் பயணிக்கும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையில் தமிழ்நாடு பல ஆண்டுகளாக முன்னணியில் உள்ளது. சுமார் 34 கோடி மக்கள் ஆண்டுதோரும் தமிழ்நாட்டுக்கு சுற்றுலாவுக்காக வருகை புரிகின்றனர்.
அதைப்போன்று வெளிநாட்டு பயணிகள் வருகையில் தமிழ்நாடே முன்னணியில் தொடர்ந்து உள்ளது. 2017-ல் இந்தியாவுக்கு வந்த ஒரு கோடி சுற்றுலா பயணிகளில் சுமார் 48 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர்.
2 ஆண்டுக்கு முன், அமெரிக்காவின் பிரபலமான ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழ், ‘உலகில் கட்டாயம் சென்று பார்க்கவேண்டிய 52 இடங்களில் தமிழ்நாடும் ஒன்று’ என்று குறிப்பிட்டிருந்தது. இந்தியாவிலிருந்து இப்பட்டியலில் இடம்பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான் என்பது கூடுதல் சிறப்பு. இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுவது, தமிழ்நாட்டில் அதிக அளவிலுள்ள யுனெஸ்கோ அறிவித்துள்ள உலக பாரம்பரியக் களங்கள், புராதான கோவில்கள், அதில் அமைந்துள்ள சிற்ப வேலைப்பாடுகள் மற்றும் சமீப காலங்களில் அதிகரித்துவரும் மருத்துவ சுற்றுலா போன்றவையாகும்.
குறிப்பாக யுனெஸ்கோ நிறுவனம், தமிழகத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவில், கங்கைகொண்ட சோழபுரம் கோவில், மாமல்லபுரம் மரபு சின்னங்கள் உள்ளிட்ட பல இடங்களை உலக பாரம்பரிய களமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகள் கொண்ட தமிழ்நாட்டில் குறைந்த செலவில் அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு பெருமளவில் நோயாளிகள் வருகின்றனர். மேலும், உலக அளவில் புகழ்பெற்ற பல பெரிய நிறுவனங்களும், தொழிற்சாலைகளும் அமைந்திருப்பது வெளிநாட்டு பயணிகள் வருவதற்கு வழிவகுக்கிறது.
மேலும், இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சிறப்பாகவும், பாதுகாப்பு வசதிகள் போதுமான அளவில் இருப்பதும் இன்னொரு காரணம் ஆகும்.
சுற்றுலா நமது வாழ்வில் இன்றியமையாத ஒன்று. இப்பூவுலகு பல விந்தைகளையும் விசித்திரங்களையும் கொண்டது. வாழும் காலத்திற்குள், இப்பூமி பந்தில் எத்தனை இடங்களை பார்க்க முடியுமோ, அத்தனை இடங்களையும் கண்டுவிட வேண்டும். நமது வருவாயில், பயணங்களுக்கு என ஒரு குறிப்பிட்ட பகுதியினை ஒதுக்கிவிட வேண்டும்.
இரண்டு, மூன்றாண்டுக்கு முன்பே திட்டமிட தொடங்கிவிட வேண்டும். வெளிநாட்டு பயணங்களென்றால் மிக அதிக அளவில் திட்டமிடல் அவசியம். கடவுச் சீட்டு, அந்நாட்டுக்கான நுழைவுரிமை (விசா), பயணச்சீட்டு போன்றவற்றை உரிய காலத்தில் எடுத்துவிட வேண்டும்.
எந்ததெந்த ஊர்களுக்கு செல்லப்போகிறாம், எங்கு தங்கப் போகிறோம் போன்ற விவரங்களை உறுதி செய்துகொள்ள வேண்டும். பூமியின் வடக்கு பகுதி ஊர்களுக்கு செல்லும்போது, அப்பகுதியில் கோடைக்காலமாக இருக்கும் காலத்தில் சென்றால், சூரிய ஒளி இரவு 9 மணிவரை இருக்கும். நாம் கூடுதலான இடங்களை காணமுடியும். அதே போன்று நாம் செல்லும் ஊர்களின் தட்பவெட்ப நிலையை அறிந்துக் கொள்வதன்மூலம், சூழலுக்கு தக்க உடைகளை அணிந்துக் கொள்ள முடியும்.
சுற்றுலா என்பது முக்கியமான இடங்கள், அருங்காட்சியகங்கள், புராதான சின்னங்களை காண்பது மட்டுமல்ல. அங்கு வாழும் மக்களின், கலாசாரம், பண்பாடு, நாகரிகம் முதலியவற்றை அறிந்துக் கொள்ளுதலுமாகும். மக்களோடு, குறிப்பாக நண்பர்கள், உறவினர்களோடு உரையாடுதல் சிறந்தது.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது தமிழர்தம் பண்பாடு. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கப்பல் கட்டி திரைகடலோடியவன் தமிழன். சுற்றுலா என்பது அவனது மரபணுக்களில் புதைந்துள்ளது என்றால் மிகையாகாது. ‘ரோமில் இருக்கும்போது ரோமானியனாக இரு’ என்பது ஆங்கிலப் பழமொழி. அதுபோன்று எந்த நாட்டுக்கு செல்கிறோமோ அந்நாட்டு சிறப்பியல்பு களை ஒத்து வாழ்வது சிறந்தது.
உதாரணமாக, அந்நாட்டு உணவுகளை ருசித்து மகிழவேண்டும். வெளிநாடு சென்றாலும், நம்மவர்களில் சிலர் இட்லி-தோசையை பிரிய மாட்டார்கள். நம்மவூர் உணவு விடுதிகளைத் தேடி பல மணிநேரம் பயணம் செய்து, அவற்றை (பெரும்பாலும் மாவு புளித்து, ருசியே இருக்காது) சாப்பிட்டுவிட்டு வருவார்கள். அதனை பெரிய சாதனையாகக் கூறுவார்கள். உண்மையில் அது சாதனையல்ல. சோதனை. எவ்வளவு நேரம் இதற்காக வீணடித்தோம் என்பதை கணக்கில் கொள்ளமாட்டார்கள். பொது இடங்களில் வரிசையில் நிற்பதும், பிறருக்கு சிரமம் கொடுக்காமல் இருப்பதும் சிறந்த வழிமுறையாகும். ஆனால், இந்தியர்களிடமுள்ள பெருங்குறை வரிசையை மதிக்காததும், விதிகளை மீறுவதுமாகும். உலகெங்கும் மக்கள், விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி நிறுத்தத்திற்கு வந்து, முழுமையாக நின்றவுடன்தான் இருக்கையைவிட்டு எழுந்திருப்பார்கள். ஆனால், இந்தியர்கள் விமானம் தரையை தொட்டவுடன், தடதடவென்று இருக்கையைவிட்டு எழுந்துவிடுவார்கள். ஒருமுறை எனது அருகிலிருந்த மேல்நாட்டவர், ஏதோ ஆபத்து என்று பதற தொடங்கினார். அவரை சமாதனப்படுத்துவதற்குள் பெரும்பாடாகிவிட்டது.
பொது இடங்களில் சுத்தமாக வைத்திருக்க உதவவேண்டும். நாம் செய்கிற சிறுதவறுகள் நாட்டிற்கும், நமது பண்பாட்டிற்கும் பெரும் இழுக்கை ஏற்படுத்திவிடும். எந்த நாட்டிற்கு சொல்கிறோமோ அந்நாட்டு விதிகளை அறிந்திருக்க வேண்டும். உலக சுற்றுலா நாளாகிய இன்று, நாம் அடுத்து எந்த ஊருக்கு செல்லவேண்டும் என்பதை தீர்மானிப்போம். அதை விரைவில் நிறைவேற்றுவோம்.
Wednesday, 26 September 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment