Friday 21 September 2018

உத்தமர் காந்திஜி போற்றிய உடல் உழைப்பு

உத்தமர் காந்திஜி போற்றிய உடல் உழைப்பு சூ.குழந்தைசாமி, செயலர், காந்தி அமைதி நிறுவனம், சென்னை. சென்னை காந்தி அமைதி நிறுவனம் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் அவருக்கு மிகவும் பிடித்தமான “உடல் உழைப்பு” கொள்கை மக்களிடையே சிறப்புற்று ஏற்கப்படும் வகையில் “உடல் உழைப்பைப் பகிர்ந்து கொள்வோம்” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினமான வருகிற அக்டோபர் 2-ந்தேதியில் இருந்து வருகிற 2019 அக்டோபர் 2-ந்தேதி வரை ஒரு ஆண்டுக்கு இத்திட்டத்தை பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் தொழிற்கூடங்களில் செயல்படுத்த முன் வந்துள்ளது.இது என்ன திட்டம்? உடலால் உழைத்துத்தான் அந்த உடலுக்கு வேண்டிய உணவைத் தேடவேண்டும் என்பது இயற்கை நியதி. மனிதனின் சோம்பலால் இந்த இயற்கை நியதியைப் புறக்கணித்ததன் விளைவே இன்று நம்மிடையே வளர்ந்து விட்ட ஏற்றத்தாழ்வுகளும் சாதிப்பிரச்சினைகளும் அடிமைத்தனமும் ஆணவமும் மனஅழுத்த நோய்களும், உடலுக்கு வேண்டிய உணவையும் உடையையும் அவரவர் உழைப்பால் பெற ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். மூளை உழைப்பையும் திறமைகளையும் சமுதாய மேம்பாட்டுக்கு சேவையாக அர்ப்பணிக்க வேண்டும் என்று வலியுறுத்திய காந்திஜி, தன்னையும் ஒரு எளிய உடல் உழைப்பாளராக மாற்றிக் கொண்டார். வக்கீல் தொழிலில் கிடைத்த ஏராளமான வருமானத்தைத் தன் ஆசிரமத்திற்குத் தந்துவிட்டு, தன் குடும்பத் தேவைக்கான குறைந்த ஊதியத்தை மட்டுமே பெற்றுக்கொண்டார். உடல் உழைப்பு தேவையில்லாது என்று இருந்த பெரும் தனவந்தர்களையும் இந்த விதியை மேற்கொள்ள வைத்து, அவர்களுடைய சொத்தை தேசத்தின் சொத்தாகக் கருதி அதன் தர்மகர்த்தாக்களாக மாறச் சொன்னார். மகாத்மா காந்தி கடைப்பிடித்த சத்தியம், அகிம்சை, திருடாமை, பொருளை சேர்த்து வைக்காமை, உடல் உழைப்பு, சுதேசி, அஞ்சாமை, தீண்டாமை உணர்வைக் களைதல், சர்வசமய ஒற்றுமை, புலனடக்கம், ஆகியவை உடல் உழைப்பு செய்தால் மட்டுமே சாத்தியம். உடலால் உழைத்து சமுதாய நலனுக்கு அர்ப்பணிக்கும் எளிய வாழ்க்கை வாழ்வோரே தேர்தலில் நிற்கத் தகுதியுள்ளவர் என்றும் காந்திஜி கருதினார். மதகுருக்கள், வக்கீல்கள், எழுத்தாளர்கள், நீதிபதிகள், மருத்துவர்கள், இசைஞானிகள், நடனமணிகள், கணினியாளர்கள் எவராயினும் தங்கள் உணவுக்கு உடலால் உழைத்தே ஆகவேண்டும் என்றும் அவர்களுடைய திறமைகளை காசுக்கு விற்காமல் மக்களின் நலனுக்கு சேவையாக மாற்ற வேண்டும் என்றும் விரும்பினார். இந்நிலை வராவிட்டால் உடலால் உழைப்போர் ஒருபுறம் நசுக்கப்பட்டுக் கேவலப்படுத்தப்படுவர். உடல் உழைப்பு சார்ந்த தொழில்களை மனித எந்திரங்கள் செய்யத் தொடங்கி விடும், இது பேரழிவில் கொண்டு போய்விடும் என்பதும் அவருடைய கணிப்பு. இன்று அவருடைய கணிப்பு உண்மையாகி வருகிறது. கணினி இன்று மனித உடலை மட்டுமல்ல, அதன் வழியாக மனித மூளையையும் கட்டுப்படுத்தத் தொடங்கி விட்டதைப் பார்க்கிறோம். நம்முடைய இளைஞர்கள் தங்கள் வாழ்வையே கையடக்கப்பெட்டி ஸ்மார்ட் போனில் அடகு வைத்து விட்டதைக் கண்டு பதை பதைக்கிறோம். இதற்கு ஒரே தீர்வு நாம் மீண்டும் இயற்கைக்குத் திரும்புவதுதான். நம்மில் பலர் தங்கள் வாழ்வை மட்டும் காப்பாற்றிக் கொள்ள இயற்கையில் விளைந்த உணவுப் பொருட்களை உண்டும் குடித்தும், உடற்பயிற்சி மற்றும் யோகா செய்தும் தப்பிக்கப் பார்க்கிறோம். அது முழுமையான தீர்வாகாது.மானிடர் அனைவருக்குமான நல்ல தீர்வை நாம் ஏற்க முன்வர வேண்டும். உடலால் உழைத்து நம் உணவைத் தேடும் ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும். இது மிகவும் எளிதானது. காந்திஜி விரும்பியது போன்று நாம் செய்யும் தொழில்களை விட்டு முழுநேர உடலுழைப்பு செய்ய வேண்டியதில்லை. முதல்படியாக, ஒவ்வொரு நாளும் பத்தே பத்து நிமிடம்; ஒதுக்குவோம். கீழ்கண்ட பணிகளில் ஏதாவது ஒன்றை மனம் விரும்பி ஏற்றுச் செய்வோம்! 1.கடினமான உடல் உழைப்பு செய்வோரின் பணிகளில் கூட இணைந்து அப்பணிகளைப் பகிர்ந்து கொள்வோம். 2. நம் அலுவலகங்களில் கூட்டிப்பெருக்கும் தொழிலாளர்களின் பணியை இணைந்து ஏற்றுச் செய்வோம். 3. நம் வீடுகளில் ஆண் பெண் வேறுபாடின்றி கூட்டிப்பெருக்குதல் பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளைப் பகிர்ந்து செய்வோம். 4. உடல் உழைப்பின் மூலம் விளையும் பொருட்களை வாங்கி உடல் உழைப்பாளர்களின் வாழ்வு மேன்மையுறச் செய்வோம். 5. மூளை உழைப்பு செய்வோரை நாம் மதிப்பது போன்றே உடல் உழைப்பாளரையும் மரியாதை செய்து சமமாக நடத்துவோம். 6. நம் குழந்தைகளுக்கு உடல் உழைப்பின் மேன்மை பற்றி விளக்கிச் சொல்லி உடல் உழைப்பு சார்ந்த பணிகளை வாழ்வின் ஆதாரமாகக் கொள்ள செய்வோம். 7. பள்ளி கல்லூரிகளில் தினமும் பத்து நிமிடம் மாணவர்கள் பயனுள்ள உடல் உழைப்புப் பணிகளில் ஈடுபட வழிவகுப்போம். 8. பேருந்து நடத்துநர், ஓட்டுநர் ஆட்டோ இயக்குநர்களுக்கு சிரமம் தராமல் சாலை விதிகளைக் கடைப்பிடித்து அவர்களைக் கவுரவப்படுத்துவோம். 9. இலவசங்கள் பெறுவதையும் தருவதையும் நிறுத்தி சுய உழைப்பால் ஒருவரை ஒருவர் மதிக்கும் பண்பாட்டை வளர்த்துக் கொள்வோம். 10. உடல் உழைப்பு ஆத்மார்த்தமான முன்னேற்றத்துக்கு அரிய வழி என்பதால் அதை உண்மையாகச் செய்ய முன் வருவோம் அதன் மூலம் நம் வாழ்வில் சுய பரிசோதனை செய்து ஆனந்தமாய்ப் பரிணமிப்போம்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts