Friday 21 September 2018

உலக அமைதிக்கு உகந்த வழி

உலக அமைதிக்கு உகந்த வழி ஸ்ரீசக்திஅம்மா ஸ்ரீசக்திஅம்மா, ஸ்ரீபுரம் பொற்கோவில் (செப்டம்பர்21-ந்தேதி) உலக அமைதி தினம். ஆதி காலத்தில் நாகரிகம் தோன்றாத காலகட்டத்தில் இயற்கையோடு அமைதியாக வாழ்ந்து வந்த மனிதன், நாகரிகம் வளர்ச்சி அடைய தொடங்கிய உடன், அறியாமையாலும், மதத்தின் பெயராலும், ஆசைகளும், தேவைகளும், தோன்றி அவைகளுடைய அளவுத்தெரியாமல் மாயையில் வீழ்ந்து பல போர்களும் பிரச்சினைகளும் உலகில் உருவாக காரணமாக இருந்துள்ளான். இதைத் தொடர்ந்து நாகரிக உலகில் அமைதி ஏற்படவேண்டும் என்ற நோக்கத்தோடு ஐ.நா உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து 2002-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 21-ந் தேதியை உலக சர்வதேச அமைதி தினமாக அனுசரித்து வருகின்றன. உலகில் அமைதி நிலைக்க போர்கள் இல்லாத அமைதியான உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான் உலக அமைதி தினத்தின் தார்மீக கருத்து. அமைதி.. இந்த வார்த்தையை சில வருடங்கள் முன்பு வரை ஒரு சிலர் மட்டுமே எதிர்நோக்கி அதற்கான முயற்சியை மேற்கொண்டு வந்தனர். ஆனால் தற்பொழுது உலகில் உள்ள பெரும்பாலானோர் இந்த அமைதியைத் தேடி, அதற்கான முயற்சியை எடுத்து வருகின்றனர். ஏன் இந்த அமைதியை அனைவரும் தேடுகிறார்கள்? அமைதி என்றால் என்ன? அப்படி என்ன உள்ளது இந்த அமைதியில்? என்ன இருந்தால் இந்த அமைதி கிடைக்கும்?பணம் இருந்தால் இந்த அமைதி கிடைக்குமா? பெரிய பதவியில் இருந்தால் இந்த அமைதி கிடைக்குமா? நிறைய படித்திருந்தால் இந்த அமைதி கிடைக்குமா ? நிறைய சொத்து சேர்த்து வைத்து இருந்தால் இந்த அமைதி கிடைக்குமா ? நிறைய குழந்தைகள் இருந்தால் இந்த அமைதி கிடைக்குமா? மேற்சொன்ன அனைத்தும் இருந்தும் பலர் இந்த அமைதியை தேடிக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு பொருளை அல்லது ஒரு விஷயத்தை நாம் அடையும் போது, நமக்கு கிடைப்பது அல்லது நாம் அடைவது மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சி நிரந்தரம் இல்லை. ஒன்றை அடைந்ததும் மற்றொன்றை அடைய வேண்டும் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கும். அதுவே மனித இயல்பு. அப்படி என்றால் அந்த அமைதியை அடைய என்ன வழி ? அமைதி என்பது ஒரு ஆனந்தமான தெய்வீக நிலை. தெய்வீக உணர்வு. அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. அதை உணரவே முடியும். நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் நாம் விரும்பியது நமக்கு கிடைத்தால் மட்டுமே சாத்தியம். ஆனால் நாம் அமைதியுடன் இருக்க நம்மிடம்எதுவும் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதற்கு நம்முள் இருக்கும் ஆன்மாவை உணர்ந்தாலே போதும். பரிபூரண அமைதி கிடைக்கும். இன்றைய உலகம் சந்தித்து கொண்டு இருக்கும் பல பிரச்சினைகளில் ஒன்று அமைதியின்மை. அமைதி என்பது உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தனி மனிதன் வாழ்விலும் அவசியமானது. அந்த அமைதியை நாம் சட்டத்தால் உருவாக்க முடியாது. தெய்வ பக்தியாலும் அன்பாலும் மட்டுமே சாத்தியம் ஆகும். ஒரு மனிதனுக்கு உடலும், அதை இயக்கும் ஆன்மாவும் அமைந்துள்ளது. உடலுக்கு உருவம் இருப்பது போல ஆன்மாவிற்கு உருவம் இல்லை. உருவம் இல்லாத ஆன்மாவே இறை வடிவமாகும். அந்த இறையின் தெய்வீக உணர்வே ஆனந்த நிலையாகும். அதனாலேயே அமைதியை விரும்புவோர் ஆன்மிகத்தை நாடுகின்றனர். உடலின் மேல் உள்ள உணர்வை மாற்றி ஆன்மா மீது செலுத்தினால் அதனுடன் நாம் கலந்து அதுவாகவே மாறி ஆனந்த நிலைக்கு செல்கின்றோம். அப்படி நாம் அந்த நிலையை உணரும் போது நாம் பரிபூரண அமைதியை உணருகின்றோம். வந்த அமைதியை நாம் உணரும் போது குறைகள் இல்லாத வாழ்க்கையை உணர்ந்து இந்த உலகையே நமது குடும்பமாக நம்முள் உணர முடியும். அன்பும் கருணையும் நிரம்பி அனைத்து ஜீவன்கள் மீது பரிவும் அன்பும் நிறையும். ஒருவர் சந்தோஷமாக இருக்கும் பொழுது அந்த சந்தோஷத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்வார். ஒருவர் கோபமாக இருக்கும் போது அதையும் பலரிடம் அவர் வெளிப்படுத்துவார். அதுபோல ஒருவர் மன அமைதியுடன் இருக்கும் பொழுது அவருடைய அமைதித்தன்மை அவரைச்சார்ந்த பலருக்கும் அந்த அமைதியை ஏற்படுத்தும். ஒவ்வொரு மனிதனுக்குள் இந்த அனுபவம் வருமானால் உலகமே அன்பு மயமாகவும், ஆனந்த மயமாகவும் மாறும். உலகில் பல மதங்கள் இருந்தாலும் அவை பின்பற்றுகின்ற வழிகள் பலவாக இருந்தாலும் அவை அனைத்தும் அமைதியையே அடிப்படையாக கொண்டுள்ளன. அமைதியே ஆன்மிகத்தின் நோக்கமாகும். எனவே உலகில் அமைதி உருவாக வேண்டுமானால், ஆன்மிகம் அல்லது தெய்வ பக்தி அனைவருள்ளும் உருவாக வேண்டும். இறை நினைவும், இறை சிந்தனையும் இறை வடிவமாக உள்ள நம் ஆன்மாவுடன் நம்மை இணைத்து, நம் எண்ணங்களை, நல்ல சிந்தனைகளை தோற்றுவித்து நல்ல செயல்களுக்கு வழி வகுக்கும்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts