Monday 24 September 2018

உடுமலை தந்த கவிமலை

உடுமலை தந்த கவிமலை உடுமலை நாராயணகவி கவிஞர் பிரியன் நாளை (செப்டம்பர் 25-ந்தேதி) உடுமலை நாராயணகவி பிறந்த நாள். வாழும் வாழ்வு கடந்து வரலாற்றில் பெயர் பதிக்கும் வாய்ப்பு கிட்டுவதில்லை யாவருக்கும். அதைச் சாத்தியப்படுத்திய சாதனையாளர் வாழ்வைப் பேசினால் பேர் நமக்கும். தன்னலத்தால் தனக்காய் மட்டும் வாழாது, தன்னெழுத்தால் தரணி போற்ற வாழ்ந்தவர் கவிஞர், பாடலாசிரியர், பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி ஆவார். 1916-ம் ஆண்டு ‘கீசகவதம்’ எனும் மவுனப் படத்தில் தமிழ்த்திரை துவங்கியது. 1931-ம் ஆண்டு மகாகவி காளிதாஸ் படத்தின் மூலம் முதல்முறையாக பேசும் படம் வெளியானது. புராணக்கதைகளும் மாயாஜாலக் கதைகளுமே கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டம் அது. கலப்புத் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே காற்றில் கலந்திருந்த சமயம் அது. அக்குறைகளை தீர்க்க, கொங்கு நாட்டின் உடுமலைப்பேட்டை பூவிளைவாடிச் சிற்றூரில் 1899-ம் ஆண்டில் பிறந்து வளர்ந்து புறப்பட்ட புயல்தான் நாராயணகவி. தனது நற்றமிழ் வார்த்தைகளாலும், மாபெரும் சிந்தனைகளாலும் தமிழ்த்திரைப்பாடல் உலகை புரட்டிப்போட்டவர். வறுமையால் பள்ளிப் படிப்பைக்கூட அவரால் தாண்ட முடியவில்லை. ஆனால் அவர்தான் பாமர மக்களை விழித்தெழச் செய்த பக்குவக் கொள்கைகள் பேசினார். தீப்பெட்டி சுமந்து சென்று விற்று வாழவேண்டிய நிலை. ஆனால் அவர்தான் ஞானத்தீயெனப் பாட்டியற்றித் திசையெங்கும் தீபங்கள் ஏற்றினார். ஊரில் ராம நாடகத்தில் இலக்குவண வேடமிட்டு வில்லேந்தினார். அவர் கரங்கள்தான் கூர் அம்பெனச் சீறி அறியாமைத் தடைகளை அறுத்தெறிந்தன. தேசிய எழுச்சியோடு கதராடைக்கடை தொடங்கி ஊர் ஊராகக் கதர்பாட்டுப் பாடி நடந்தார். அவர் கால்கள்தான் பாட்டாளிகளுக்குப் பாட்டுச் சொல்லப் பாங்கோடு முன்வந்தன. சுதந்திரக்கனல் கொண்டு தேச உணர்வுப்பாடல்கள் எழுதி மேடைகள்தோறும் முழங்கினார். அக்குரல்தான் சாமானியனின் குரலாகத் திரையிலும் கர்ஜித்தது. குடும்பச்சூழல் காரணமாக கடனாளி ஆனார். வாங்கிய கடனைத் திருப்பித்தராது ஊர் மண்ணை மிதிப்பதில்லை என்று உறுதியேற்றார். பொருளட்டினார். சொன்னபடி ஊருக்கு வெளியில் நின்று கொடுத்தோர் கடன் தீர்த்த பிறகே ஊருக்குள் நுழைந்தார். அந்த நேர்மை இதயம்தான் இசைத்தமிழை வைர வரிகளாக மக்களுக்கு வாரித்தந்தன. ஆரிய கானசபா எனும் நாடக நிறுவனத்தை நடத்திய முத்துக்குமாரசாமி கவிராயரிடமும், மதுரை சங்கரதாஸ் சுவாமிகளிடமும் கவிநுட்பங்களை கற்றார். அதைத் தன் பல்லாயிரக் கணக்கான பாட்டில் வைத்தத் தனிப்பல் கலைக்கழகம் அவர். பகுத்தறிவுத் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், கலைவாணர், கலைஞர் ஆகியோரிடம் பெரும் நட்பு கொண்டிருந்தார். அத்தொடர்பால் திராவிட இயக்கப் பற்றையும், பகுத்தறிவுப் பார்வையையும் பட்டை தீட்டி வந்து பாருக்குரைத்த பகலவனாக திகழ்ந்தார். பேருக்கு வாழ்ந்து மடியும் மண்ணில் பாருக்குப் பேர் தந்து நிலைத்த உடுமலையாரால்தான் முதன்முதலாக தமிழ்த்திரைக்கு நல்தமிழ் பாடல்கள் வாய்த்தன. சாதி, மத, மூடப்பழக்க வழக்கங்கள் நிறைந்த சமூகத்தையும், திரைக்களத்தையும், தன் பகுத்தறிவு வரிகள் வழி முதன்முதலாக நல்திசைக்குத் திருப்பியது கவிராயரின் பாடல்களே. காக்கைக்குருவி எங்கள் சாதியெனப் பாடிய மகாகவி பாரதியின் நட்பினால் உணர்வேந்தி, ‘ஆகாரம் உண்ண எல்லோரும் ஒன்றாக அன்போடு ஓடிவாங்க’ எனக் காக்கைகளையும் பாடலாக்கிய பாங்கு அவருக்கே உரித் தானது. ‘சுதந்திரம் வந்ததுன்னு சொல்லாதீங்க. சொல்லிச் சும்மா சும்மா வெறும் வாயை மெல்லாதீங்க. குடிக்கத் தண்ணீரில்லாது பெரும் கூட்டம் தவியாத் தவிக்குது. சிறு கும்பல் மட்டும் ஆரஞ்சுப்பழ ஜூசு குடிக்குது’ எனச் சாடியது உடுமலையாரின் சமூக அறம். ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே. மங்காத தங்கமிது, மாறாத வைரமிது, விளையாடி இசைபாடி விழியாலே உறவாடி இன்பம் காணலாம்’ எனக் குழைந்த அவரின் வரிகளில் காதல் கொப்பளித்தது. ‘ஒண்ணுலேயிருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம். இருபத்தொண்ணுலேயிருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்’ எனப் பாடி வாழ்வியல் உண்மையை போட்டு உடைத்தார். ‘காசிக்குப்போனா கருவுண்டாகுமென்ற காலம் மாறிப்போச்சு. இப்ப ஊசியைப் போட்டா உண்டாகும் என்ற உண்மை தெரிஞ்சு போச்சு’ எனச் செதுக்கிய பகுத்தறிவு அவர். ‘நல்ல நல்ல நிலம் பார்த்து நாளும் விதை விதைக்கணும்! நாட்டு மக்கள் மனங்களிலே நாணயத்தை வளர்க்கணும்’ என எம்.ஜி.ஆர். வழியாகச் சொன்ன வரிகளில் சமூகப் பொறுப்பு மிளிர்ந்தது. ‘சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கையிருப்பு! வேறு ஜீவராசிகள் செய்யமுடியாத செயலாகும் இந்தச் சிரிப்பு’ எனவும், ‘குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்’ எனவும் மொழிந்த அறிவியல் அவர். இப்படி, தான் வாழும் சமூகம் விழிப்புறத் தன் பேனா முனை உளியால் காகிதக்கல்லைச் செதுக்கி கலைச்சிலை வடித்தச் கவிச்சிற்பி உடுமலையார், பாமரம் உணர்வெழப் பாடிய பா மரம். எளிமையும் இலக்கியச் செழுமையும் ஒருங்கே வாய்த்த அவர் 1981-ல் மறைந்தார். போனாலும் காலச்சுழலின் கையில் சிக்காது அக்காலத்தின் கைபிடித்து காலமுள்ளவரை காலம் பேசும் பாடல்கள் வழி வாழ்ந்து வரும் காலம் அவர். ‘தன்மானமும், நேர்மையும், தன்னம்பிக்கையும், உழைப்பும் தோற்காது என்றும்’ எனும் பேருண்மையை உணர்த்திய உடுமலையார் ஒரு சாதனையாளர். எளிய, வறிய குடும்பத்தில் இருந்து வந்து பேருயரம் தொட்டுக் காட்டிய உடுமலையார் ஒரு சரித்திரம். எழுத்தால் சமூகத்தை ஏற்றம் பெறச்செய்ய இயலும், தக்க மாற்றம் செய்ய இயலுமெனும் சத்தியத்தை சாதித்துக் காட்டிய உடுமலையார் ஒரு சகாப்தம். முப்பதாண்டு காலம் தன் தனித்துவத் தங்கப்பாடல்களால் தமிழ்த்திரைக்கு அணி செய்து, உடுமலையில் மணிமண்டபம்; மார்பளவுச் சிலை; நினைவு அஞ்சல்தலை என நிலைத்திருக்கிறார் மூத்தப்பாடலாசிரியர் உடுமலை நாராயணகவி. தமிழ் உள்ளவரை நிலைக்கும் புகழைத் தாங்கிய அவரது பாடல்கள், நாளும் சொல்லும் அவரைப் பற்றி. உடுமலை தந்த கவிமலை என்றும் மக்கள் மனதில் வாழ்வார். வாழ்க தமிழ். வெல்க தமிழ்.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts