வாழப் பிறந்தோமே...!
முனைவர் மு.யூஜின் ரோசிட்டா,
உதவிப் பேராசிரியர், கல்வியியல் துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்
நாளை (செப்டம்பர் 10-ந்தேதி) உலக தற்கொலை எதிர்ப்பு தினம்.
உலகில் தோன்றியுள்ள உயிரினங்களில் மேன்மையானது மனித இனம். மனித இனத்தின் தனித்துவத்தைப் பறைசாற்றிடவும், அதன் மகத்துவத்தை உணர்த்திடவும் ‘மனிதன் மாண்பு மிக்கவன்’ என்ற பொருள் பொதிந்த கூற்று இன்றும் வழக்கத்தில் உள்ளது.
மனித மாண்பு என்பது எச்சூழ்நிலையிலும் மாறுபடாமல் உயர் திணையாகப் படைக்கப்பட்டதின் பொருளை, மேன்மையை உணர்ந்து வாழ்வது ஆகும். எங்கே மனித மாண்புகள் மதிக்கப்படாமல் மிதிக்கப்படுகிறதோ அங்கே தற்கொலைகள் நிகழ்வதற்கான சாத்தியம் அதிகமுண்டு.
ஆக்கல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று செயல்களும் மனிதனை மீறிய சக்தியின் வெளிப்பாடாகவே உணரப்படுகிறது. இயற்கையாகவே இச்செயல்கள் நடைபெறும்போது தனிமனிதனும் அவனைச் சார்ந்த சமூகமும் அதனைப் பெருந்தன்மையோடு ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்கிறது.
இயற்கையை மீறி மனிதன் இதனைக் கையில் எடுக்கும் போது தனி மனிதன், அவன் சார்ந்த சமூகம், அவனை வாழ வைக்கும் இயற்கை என எல்லாத் தொடர்புகளும் தண்டிக்கப்படுகிறது. இது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
இயற்கையால் படைக்கப்பட்ட எந்தவொரு உயிரினத்துக்கும் தன்னைத்தானே மாய்த்துக் கொள்ள எந்த உரிமையும் இல்லை. வரலாறு திரும்பும் என்ற நம்பிக்கைக்கும், அறிவியலின் அளப்பரிய வளர்ச்சிக்கும் சவாலாக இருப்பது இறந்த ஒருவருக்கு உயிர்பெற்றுத் தருவது தான். இச்சவாலுக்கிடையில் தனது உயிருக்குத் தானே எமனாகத் தேதி குறிக்கும் தற்கொலைகள் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் இனம், மொழி, வயது, பாலினம் என்ற வித்தியாசமின்றி தற்கொலை எண்ணம் மிக வேகமாகப் பரவி வருகின்றது. உலகளவில் 1.4 சதவீதம் இறப்பு தற்கொலைகளால் நிகழ்கிறது. உலகில் வாழும் 5 சதவீதம் பேர் தங்கள் வாழ்வில் ஒரு முறையேனும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
மேலும் 15 முதல் 24 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அதிகளவில் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடுவதாகவும், மனஅழுத்தம் காரணமாக அரங்கேறும் தற்கொலைகள் தான் அதிகம் எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகமயமாதலால் நவீனக் கண்டுபிடிப்புகள் வாழ்க்கைக்குப் புதிய பரிமாணத்தைத் தந்துள்ளது என்று மார்தட்டிக்கொண்டாலும், அதே உலகமயமாதலினால் வாழ்வியல் மதிப்பீடுகள் மண்ணில் புதைக்கப்பட்டு வாழ்வின் பல கட்டங்கள் வாழ்வதற்கு முன்பே முடிவுரை எழுதப்படுகிறது.
எந்திரமயமாகிப்போன வாழ்வில் சக மனிதனின் இன்ப, துன்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் மன அழுத்தத்தை ஆற்றுப்படுத்துவதற்கும் அருகில் அமர்ந்து பேச மனிதர்கள் இல்லை. நாம் இவ்வுலகில் எதற்காகப் படைக்கப்பட்டோம்? வாழ்க்கையின் அர்த்தம் என்ன? என்பது புரியும் பட்சத்தில் தற்கொலைகள் போன்ற கோழைத்தனமான முடிவுகள் தடுத்து நிறுத்தப்படும்.
தற்போதைய சூழலில் பெருகி வரும் தற்கொலைகளைத் தடுப்பதற்குரிய வழிவகைகளை ஆராய்ந்து மிகக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதுதான் ஒரு அறிவார்ந்த சமூகத்தின் தீர்வாகும். அந்த வகையில் நாம் சிந்திக்க வேண்டிய தீர்வுகள் சில இருக்கின்றன.
தனிநபர் ஒருவரின் தற்கொலை அவரைச் சார்ந்த 135 நபர்களைப் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிறந்த மனநல ஆலோசனை பெறுவதற்கான சரியான வழிகாட்டல் வேண்டும். மேலும் மன அழுத்தம் பாதிக்கப்பட்டவர் மட்டுமின்றி அவருடன் நெருங்கிய தொடர்புடையவர்களும் சரியான புரிதலைப் பெறத் தகுந்த விழிப்புணர்வு அவசியம்.
பள்ளிப் பருவத்திலேயே தற்கொலையால் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு இளைய தலைமுறையினருக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். மேலும் சூழ்நிலைகளுக்கேற்ப வாழ்தல், நெருக்கடிகளைக் கையாளுதல், பிறர் உதவியைத் தயக்கமின்றி நாடுதல் போன்ற பண்புகளை அவர்களின் மனங்களில் விதைக்க வேண்டும்.
ஒரு மாணவனின் வெற்றிக்குக் காரணமாகக் கருதப்படும் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள், நிர்வாகம் மற்றும் அரசு என அனைத்தும் அதே மாணவன் தோல்வியின் விளிம்பில் நிர்கதியாய் நிற்கும் போதும் பொறுப்பேற்க கடமைப்பட்டுள்ளது. நண்பர்கள் இன்றித் தனித்து விடப்பட்ட மாணவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதில் வகுப்பு ஆசிரியரின் பங்கு மிகவும் முக்கியமானது. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்லும் இன்றைய சூழ்நிலையில் இரண்டாம் பெற்றோர் ஆகிய ஆசிரியர்களின் ஆதரவும், பரிவும் மனிதநேயப் பார்வையில் மகத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
தற்கொலைக்கு முன் கடைசி நிமிடங்கள் யாரிடமாவது தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்க்க எண்ணும் நபர்களுக்கு, ஆறுதல் அளித்து தற்கொலையில் இருந்து மீட்டெடுத்ததைப் பலரும் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அந்த ஆறுதல் அளிக்கும் நபர்களில், குறிப்பாக ஆசிரியர்களும், மாணவத் தோழர்களும் கண்டிப்பாக இடம் பெறாமல் இருக்க வாய்ப்பில்லை. மனம் விட்டுப் பேசும் தோழமை மரணத்தை தேடுபவனுக்கு மறுவாழ்வு கொடுக்கும்.
இந்தியாவின் தலையெழுத்து நான்கு சுவர்களுக்கு உள்ளே தான் தீர்மானிக்கப்படுகிறது என்ற கூற்று வகுப்பறையின் வல்லமையை வெளிப்படுத்தும் வீரியமான வரிகள் ஆகும். வகுப்பறையும் கருவறை போன்றதே என்று மரத்தடி வகுப்புகள் கற்றுக் கொடுத்து சென்ற தலைமுறை முதிர்ச்சி ஏனோ, இன்று நவீன வகுப்பறைக்குள் ஊடுருவ வாய்ப்பின்றி அழிந்து வருவதும் தற்கொலைகள் பெருகக் காரணமாக அமைகிறது.
எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து பல தடைகளைத் தகர்த்து உயர்ந்த நிலையை அடைந்த மனிதர்கள் தற்கொலையை துளியும் எண்ணிப் பார்த்ததில்லை. வாய்ப்புகளுக்கு வழியின்றி தமிழ் வழியில் மட்டுமே பள்ளிப் படிப்பை முடித்து, ஆங்கில வழியில் உயர் படிப்பைத் தொடர்ந்து, பின்பு வாழ்க்கையிலும் பல சவால்களைச் சந்தித்து வெற்றி கண்ட மனிதர்கள் யாரும் மரணிக்கத் துணியவில்லை.
‘நான் வாழப் பிறந்தவன்’ என்ற லட்சிய வார்த்தைகள் இன்றைய இளைஞர்களின் எண்ணங்களுக்கும் மனதிற்கும் புதிய நம்பிக்கையைத் தந்தாலும் இம்மந்திரத்தின் சூட்சுமம் மட்டும் நவீன வகுப்பறை மாணவர்களுக்கு ஏனோ புரிவதில்லை.
சில முன்குறித்த சிந்தனைகளுடன் கல்வி கற்க வருபவர்கள், விசாலமான உலகின் மாறும் போக்கை மாற்ற முடியாத சூழ்நிலையை எண்ணி, மனம் புழுங்கி மரணத்தை முத்தமிடும் தற்கொலை என்னும் கொடிய நோய்க்குப் பலியாகின்றனர். இக்கொடிய நோய் சமூகத்தில் இருந்து அறவே நீங்க அவர்கள் கற்கும் கல்வி துணை செய்ய வேண்டும். அக்கல்வி சமூக விழிப்புணர்வுடன் கூடிய கல்வியாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம்.
Sunday, 9 September 2018
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்க...
-
‘பணம்’ என்ற ஒற்றை வார்த்தை, வீடு, நிலம், வங்கி இருப்பு ஆகிய அனைத்துச் செல்வங்களையும் குறிப்பிடுகிறது. ஒரு மனிதனுக்கு போதுமான பண வசதி கண்...
-
பிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் ...
-
பாசிமணிகள் நிறைந்த ஒரு சாக்கு மூட்டையை அவிழ்த்துவிட்டால் மணிகள் எப்படி எல்லாத் திசைகளிலும் உருண்டு ஓடுமோ, அதுபோல கரோனா தீநுண்மி எல்ல...
-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பற்றி, இடைக்குன்றூர்க் கிழார் பாடிய புறநானூற்றுப் பாடல் வரிகள் இவை. பாண்டியன் நெடுஞ்...
-
இந்த உலகத்தில் பஞ்ச பூதங்களின் ஆளுமையைப் பற்றி உங்களு க்கு சொல்லத் தேவையில்லை. அப்படிப்பட்ட இவைகள் நம் வீட்டி னுள்ளும் தன் ஆளுமையை நீட...
-
குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கள்! சபீதாஜோசப் (சிறந்த குழந்தை எழுத்தாளர் விருது பெற்றவர்) ந மது நாட்டில் கூட்டுக் குடும்பங்கள் பல சிறப்பா...
-
அறிவியல் புரட்சி செய்த ஐசக் நியூட்டன் | -பேராசிரியர், முனைவர் அ.முகமது அப்துல்காதர் | உலகில் வாழ்ந்த விஞ்ஞானிகளில் மிகவும் செல்வாக்கு பெ...
-
போர்க்களத்தில் புறாக்கள் பண்டைய மன்னர்கள் காலத்தில் புறாக்கள் செய்தி அனுப்பப் பயன்படுத்தப்பட்டன என்று அறிந்திருக்கிறோம் . ஆனா...
-
அறிவு வளர்ச்சிக்கு வழிகாட்டும் புதிர்கள் |முனைவர் விஜயா, பேராசிரியர், வி.ஐ.டி. பல்கலைக்கழகம் | (ஜனவரி 29) உலக புதிர் கணக்கு தினம்.| புதி...
No comments:
Post a Comment