Monday 17 September 2018

சிறைச்சாலையா? சொர்க்க பூமியா?

சிறைச்சாலையா? சொர்க்க பூமியா? பெ.கண்ணப்பன் ஐ.பி.எஸ்., காவல்துறை தலைவர் (ஓய்வு) சென்னை புழல் மத்திய சிறைச்சாலையின் ஒரு அறையில் கைதிகள் செல்போனில் எடுத்த புகைப் படம் வைரலாகி பரபரப்பு தீயை பற்ற வைத்துள்ளது. அந்த அறையில் சிறைவாசியின் பயன்பாட்டில் இருந்த தொலைக்காட்சி பெட்டி, உயர்ரக செல்போன், அடுக்கி வைக்கப்பட்டிருந்த அழகு சாதனப் பொருட்கள், மேஜையின் மீது வரிசை வரிசையாக வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் ஆகியவற்றை பார்க்கும் போது அந்த சிறைவாசியின் அறை நட்சத்திர விடுதி அறை போன்று தோற்றமளித்தது. இதைத் தொடர்ந்து நடந்த அதிரடி சோதனையில் சிறைச்சாலை அறைகளில் இருந்து தொலைக்காட்சி பெட்டிகள், எப்.எம். ரேடியோக்கள், குஷன் படுக்கைகள், மெத்தை விரிப்புகள், அலங்கார திரைச்சீலைகள் கைப்பற்றப்பட்டு இருக்கின்றன. சிறைச்சாலையா அல்லது சொகுசுவிடுதியா என்று சந்தேகிக்கும் அளவுக்கு புழல் சிறைச்சாலையின் பல அறைகள் சொகுசு பங்களாக்களாக மாறி இருக்கின்றன. புழல் சிறையில் இருந்து பயங்கரவாதிகள் வெளிநாட்டுக்கு செல்போனில் பேசிய தகவல்களும் கசிந்து அதிர்ச்சி வைத்தியம் அளித்திருக்கிறது. கடுமையான சிறை பாதுகாப்புகளைத் தாண்டி சொகுசு வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் எப்படி தண்டனை அனுபவித்துவரும் சிறைவாசியின் அறைக்கு வந்தன? எத்தனை சிறைவாசிகள் சொகுசு அறைகளில் தங்கியிருந்தனர்? சிறைக்குள் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் பொதுவெளிக்கு வந்ததன் பின்னணி என்ன? போன்றவை குறித்து சிறைத்துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர். சிறைத்துறை அதிகாரிகளுக்கும், சிறைவாசிகளுக்கும் இடையே கண்ணாமூச்சி விளையாட்டு அவ்வப்போது நடைபெறுவது உண்டு. 20 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. கோவை நகரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் பலர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். அப்போது நான் கோவை நகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையராகப் பணிபுரிந்து வந்தேன். காவல்துறை தலைமையகத்துக்கும், தமிழ்நாடு அரசின் உள்துறைக்கும் கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தினுள் திடீர் சோதனை நடத்த திட்டமிடப்பட்டது. அச்சோதனையை நடத்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. சோதனைக்கான நாள் குறிக்கப்பட்டது. சிறைத்துறை அதிகாரிகளுக்கு முன் அறிவிப்பு கொடுக்காமல், அதிகாலை நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடிப்படை காவலர்கள், வீடியோ கேமராக்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் மத்திய சிறைச்சாலையினுள் திடீர் சோதனையைத் தொடங்கினோம். நண்பகல் வரை இடைவிடாது சுமார் 8 மணிநேரம் நடத்தப்பட்ட அந்த சோதனையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல ஆயுதங்கள், செல்போன்கள், ரகசிய தகவல் பரிமாற்ற கடிதங்கள் மற்றும் சில தடைசெய்யப்பட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சிறைவாசிகள் சிலர் தங்கியிருந்த அறைகளின் தளத்தில் பதிக்கப்பட்டிருந்த கற்களை பெயர்த்து அதற்கு அடியில் பள்ளம் தோண்டி பொருட்களை பதுக்கி வைத்திருந்தனர். இந்த திடீர் சோதனையின் மூலம் விசாரணை கைதிகள் சிலர் தீட்டியிருந்த சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. சிறைவாசிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதில் புதிய யுத்திகளைக் கடைபிடிக்க சிறைத்துறையினருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சிறைத்துறையினர் சிலர் சிறைவாசிகளுடன் கொண்டிருந்த நெருக்கத்துக்கும் முடிவுகட்டப்பட்டது. சிறையினுள் சொகுசு வாழ்க்கை வாழும் சிறைவாசிகள் பெரும்பாலும் சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் தாதாக்கள் போன்று செயல்படுபவர்களாக இருக்கிறார்கள். சிறைக்குள் தங்களது சுகபோக வாழ்க்கைக்கு தடையாக இருக்கும் சிறைக்காவலர்களுக்கும், சிறைத்துறை அதிகாரிகளுக்கும் ஏதாவது ஒரு வகையில் இடையூறு கொடுப்பார்கள். அதற்கு இசைய மறுக்கும் சிறைத்துறையினருக்குக் கொலை மிரட்டல் விடவும் தயங்கமாட்டார்கள். இந்த சிறைத் தாதாக்கள் விசாரணை கைதிகளாக சிறைக்கு வரும் இளைஞர்களை தங்களது வளையத்துக்குள் கொண்டுவருவர். சிறைக்கு வெளியே ஆதாயத்துக்காக யாரையாவது மிரட்டவோ அல்லது கொலை செய்ய வேண்டிய வாய்ப்பு கிடைத்தால், தங்களது வளையத்துக்குள் வீழ்ந்து கிடக்கும் விசாரணை கைதிகள் ஜாமீன் பெற்று சிறையிலிருந்து வெளியேறும்போது, அவர்களை அந்த சம்பவத்துக்கு பயன்படுத்திக்கொள்வார்கள். தேவைப்பட்டால் தாங்களும் பரோல் பெற்று சதி திட்டத்தை கச்சிதமாக அரங்கேற்றிவிட்டு மீண்டும் ஒன்றும் தெரியாதது போல சிறைக்குள் அடைக்கலம் புகுந்துவிடுவார்கள். சில சம்பவங்களை உளவுத்துறை போலீசார் முன்கூட்டியே அறிந்து முறியடித்தும் இருக்கிறார்கள். சிறைச்சாலையின் தினசரி நிர்வாகத்தில் கள்ளத்தனமான பொருளாதாரம் ஆதிக்கம் செலுத்துவது சிறைத் தாதாக்களின் செல்வாக்கு மேலோங்கி இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்று கூறலாம். ஒவ்வொரு சிறைவாசியின் தினசரி உணவுக்கென அரசாங்கம் கொடுக்கும் பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிரிக்கப்பட்டு, சிறைத்துறை நிர்வாகத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்குப் பகிர்ந்தளிப்பது; சிறைவாசிகளுக்குச் சிறப்பு உணவு வகைகள் வழங்குவதற்கென தனிப்பட்ட முறையில் பணம் வசூலிப்பது; காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் சிறைசாலைக்குள் அனுப்பி வைக்கும்போது கஞ்சா பொட்டலங்கள், செல்போன்கள், பீடிக்கட்டுகள் போன்ற பொருட்கள் விற்பனைக்காக அனுப்பி வைப்பது; தொண்டு நிறுவனங்கள் சிறைவாசிகளின் நலனுக்காக தொலைக்காட்சி பெட்டிகள் வழங்குவது போன்று ஆவணங்கள் தயார் செய்து, சிறைவாசிகளின் உறவினர்களிடமிருந்து தொலைக்காட்சி பெட்டிகளைப் பெற்று சம்பந்தப்பட்ட சிறைவாசிகளின் பயன்பாட்டுக்கு கொடுப்பது, சிறை வளாகத்தினுள் பணப் புழக்கத்தை அதிகப்படுத்துவது போன்றவை குறித்து மவுனமாக இருப்பது சிறைத் தாதாக்களின் செல்வாக்கு மேலோங்க காரணமாக அமைந்துவிடுகிறது. பணத்துக்கும், தாதாக்களின் மிரட்டலுக்கும் சிறைத்துறையினர் அடிபணிவது, பல்வேறு காரணங்களால் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை முடிக்கப்படாமல் பல ஆண்டுகள் நீட்டிப்பு செய்வதும் சிறைத் தாதாக்களின் ஆதிக்கம் நிலைபெற காரணமாக அமைந்துள்ளது. ‘சிறைச்சாலை குற்றவாளிகளின் சொர்க்கபூமி’ என்ற நிலை மாற வேண்டும் என்பதே பொதுமக்களின் விருப்பமாக உள்ளது.

கல்விச்சோலை - kalvisolai Articles

No comments:

Popular Posts